• கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு
கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் கடந்த வாரங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் மட்டக்களப்பிற்கு படை எடுத்து வந்து தமது கட்சிகளை அங்கு கால் ஊன்ற வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அண்மையில் புதிதாக கட்சி ஆரம்பித்த முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன், என பலரும் கிழக்கை நோக்கி படை எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தியே அவர்களின் அரசியல் நகர்வுகள் காணப்பட்டன.
முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையில் சி.வி.விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமது அணிகளுடன் தனித்தனியாக மக்கள் சந்திப்புக்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர்.
இதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டக்களப்பிலும் கல்முனையிலும் பல தரப்புக்களையும் சந்தித்ததுடன் மாமாங்கம் பகுதியில் அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார்.
மட்டக்களப்பு மக்கள் மத்தியில் முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நன்கு அறியப்பட்ட ஒருவர் அல்ல. அவருக்கு மட்டக்களப்பில் ஆதரவு தளம் என ஒன்று கிடையாது. தமிழ் மக்கள் கூட்டணி என்ற அவரின் மாவட்ட அமைப்பாளராக இருப்பவர் தற்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக இருக்கும் சோமசுந்தரம் என்பவராகும். இவர் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரவாளராக இருந்தவர். பொதுத்தேர்தல் ஒன்றிலும் முன்னர் ஒரு தடவை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் மட்டக்களப்பில் போட்டியிட்டவர். இவர் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் செல்வாக்கு கொண்டவரோ அல்லது அறிமுகமானவரோ கிடையாது.
விக்னேஸ்வரனின் கட்சியில் இணைந்து கொண்டிருக்கும் மற்றுமொருவர் வெள்ளிமலை என அழைக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை ஆகும். 2001ஆம் தேர்தலில் இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அவரும் தற்போது விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் இணைந்திருக்கிறார். இது தவிர விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் இணைந்திருப்பதால் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினத்திற்கு சொற்ப அளவிலான வாக்கு வங்கி உண்டு. எனவே மட்டக்களப்பில் பெரிய அளவில் விக்னேஸ்வரனின் கட்சிக்கு ஆதரவு தளம் இல்லாவிட்டாலும் பொதுத்தேர்தலோ அல்லது மாகாணசபை தேர்தலோ வருகின்ற போது விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சி மட்டக்களப்பில் போட்டியிடும் என்பது உறுதி.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த பொதுத்தேர்தலிலும் உள்ளுராட்சி தேர்தலிலும் மட்டக்களப்பில் போட்டியிட்டிருந்தது. பொதுத்தேர்தலில் மிக சொற்ப வாக்குகளை மட்டும் எடுத்திருந்த இக்கட்சி உள்ளுராட்சி சபை தேர்தலில் வாழைச்சேனை பிரதேசசபையில் ஒரு உறுப்பினரை மட்டும் பெற்றிருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேறு கட்சிகளுடன் கூட்டு சேரும் சாத்தியங்களும் இல்லை. அவர்களால் மட்டக்களப்பில் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர நாடாளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ ஒரு உறுப்பினரை கூட பெறும் வாய்ப்பு அறவே கிடையாது.
ஏற்கனவே குழப்பி போய் இருக்கும் மட்டக்களப்பு அரசியலில் கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் அமைச்சர் மனோ கணேசனும் மட்டக்களப்பில் தனது அலுவலகத்தை திறந்திருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனையும் சந்தித்திருக்கிறார். பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து மனோ கணேசனின் கட்சியும் மட்டக்களப்பில் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என கூறப்படுகிறது. பிள்ளையான் மனோ கணேசன் கூட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் இணைய உள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் வாக்குகளை பெறக் கூடிய நிலையில் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் கூட்டு காணப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து பிரதி அமைச்சராக பதவி ஏற்ற வியாழேந்திரன் சொற்பநாட்களே பிரதி அமைச்சர் பதவியில் நிலைக்க முடிந்தது. அதன் பின்னர் தமிழர் முற்போக்கு அமைப்பு என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார்.
இவரின் வாக்கு வங்கி என்பது தனது மாணவர் குழாத்தை மையப்படுத்தியதே ஆகும். க.பொ.த உயர்தரம் மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பிரத்தியேக தனியார் வகுப்புக்களை நடத்தி வரும் இவருக்கு மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் மாணவர் குழாத்தின் ஆதரவு காணப்படுகிறது. கடந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்கின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு இந்த மாணவர்களின் ஆதரவுதான் காரணமாகும்.
தன்னிடம் படித்த மாணவர்களை மூலதனமாக கொண்டு வியாழேந்திரன் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் வெற்றி பெற்றதை போல 1989ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஈரோஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட சுயேச்சைக்குழுவில் அழகு. குணசீலன் வெற்றி பெற்றிருந்தார். சுயேச்சை குழுவின் தலைமை வேட்பாளராக இருந்த கே.சௌந்தரராசன் தமிழர் விடுதலைக் கூட்டணி வழிவந்த அரசியலில் அனுபவமும் மக்கள் அறிமுகமும் இருந்த போதிலும் மாணவர்களின் ஆதரவு தளத்தை மட்டும் வைத்திருந்த குணசீலன் விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கிழக்கில் தமிழர்களின் வாக்குகள் சிதறக் கூடாது. அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான முயற்சிகளும் நடைபெற்றன.
ஆனால் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் பூச்சிய நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது.
கிழக்கில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் பொதுவாக தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. கிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லீம் சிங்களம் என மூன்று இன மக்களும் வாழும் மாகாணமாகும்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கும் அதேவேளை கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையையும் அண்மைக்காலத்தில் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று தனித்தனியாக போட்டியிட்டாலும் அங்கு தெரிவு செய்யப்படுபவர் தமிழராகவே இருப்பார். தென்னிலங்கை கட்சிகளாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றில் போட்டியிட்டாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர் ஒருவரே தெரிவு செய்யப்படுவார். அதற்கு உதாரணமாக விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் தெரிவு கூறலாம்.
ஆனால் மட்டக்களப்பிலோ அல்லது அம்பாறை திருகோணமலையிலோ தமிழர்களின் வாக்குகள் பிரிந்தால் வாய்ப்பு ஏனைய இனங்களுக்கே கிடைக்கும். சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய தென்னிலங்கை கட்சிகளில் தமிழர்கள் போட்டியிட்டாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் வாக்குகளை சேகரித்து ஏனைய இனத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்வதற்கே உதவுவார்களே ஒழிய தமிழர் ஒருவர் தெரிவாவது நடக்க கூடிய காரியம் அல்ல.
இதனால் தான் கிழக்கில் அனைத்து கட்சிகளின் கூட்டு ஒன்று தேவை என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கிறார்கள்.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற போதிலும் அது இன்றுவரை கைகூடவில்லை.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பு கடந்த வருடம் ஆரம்பித்திருந்தது. இதன் முதலாவது கூட்டம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
த.கோபாலகிருஷ்ணன் மற்றும் சட்டத்தரணி சிவநாதன் ஆகியோரே ஆரம்பத்தில் இக் கூட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை கருத்தில் கொண்டு அப்போது இருந்த தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கம் மட்டக்களப்பை மையப்படுத்தித்தான் இடம்பெற்றது.
2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பையே பெரும்பான்மையான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தெரிவு செய்தனர். குறிப்பாக கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களாகும்.
தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என்ற உயர் நிலைக்கு அக்கட்சியை தமிழ் மக்கள் உயர்த்தி வைத்த போதிலும் அக்கட்சியின் தலைவர்களின் தவறான போக்குகளாலும் உறுதியற்ற தன்மைகளாலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மதிப்பை இழந்து வருகிறது என்பதுதான் உண்மை. அதனால் தான் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாகவே விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் மட்டக்களப்பிலும் கால் பாதித்திருக்கிறார்கள்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வரும் கிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரன் போன்றவர்களின் வருகையை உவப்பாக பார்க்கவில்லை.
கிழக்கு தமிழர் ஒன்றியம் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து பேசிய போதிலும் கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவாக்கிய கூட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மற்றும் ஈ.பி.டி.பி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ் என மட்டக்களப்பில் செல்வாக்கில்லாத உதிரிக்கட்சிகளே இணைந்து கொண்டன.
இந்த நிலையில் ‘ஈழத் தமிழர் பேரவை’ என்ற அமைப்பு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு கூட்டத்தை 14.07.2019 அன்று மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தியது.
இக்கூட்டத்திற்கு பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, வியாழேந்திரனின் முற்போக்கு தமிழர் அமைப்பு, ஈரோஸ், ஈ.பி.டி.பி. ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சி, உட்பட சில உதிரிக்கட்சிகளும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழரசுக்கட்சி இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும் அக்கூட்டத்தில் கூட தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி கைகூடவில்லை.
ஏற்கனவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றியம் தற்போது தம்மை ஒரு அரசியல் கட்சியாக அறிவித்திருக்;கிறார்கள். சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்ட போது இது ஒரு அரசியல் அமைப்பு அல்ல இது ஒரு மக்கள் அமைப்பாகும். இந்த அமைப்பில் கிழக்கில் இருக்கும் எந்த ஒரு தமிழனும் கட்சி வேறுபாடின்றி அங்கத்தும் பெறலாம் என்று கூறப்பட்டது. கிழக்குத் தமிழர் ஒன்றியம் சமூக நலன் அமைப்பாகவே பதிவும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஆரம்ப காலத்தில் கூறப்பட்டதற்கு முரணாக கிழக்கு தமிழர் ஒன்றியம் ஒரு அரசியல் கட்சியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி என அதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கிழக்கில் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என மக்கள் கோரினாலும் தற்போது மட்டக்களப்பில் தளமிட்டிருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பே இல்லை எனலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருக்கும் தமிழரசுக்கட்சி தமது அணிக்குள் பிள்ளையான் குழுவை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அது போல விக்னேஸ்வரன் அணி, கஜேந்திரகுமார் அணிகளும் தமிழரசுக்கட்சியுடனோ அல்லது பிள்ளையான் குழுவுடனோ இணைந்து கொள்ள மாட்டார்கள்.
பொதுத்தேர்தலோ மாகாணசபை தேர்தலோ வருகின்ற போது கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கட்சிகள் போட்டியிடும் நிலை காணப்படுகிறது. இது முஸ்லீம் தரப்பிற்கு பெரு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் செய்தியாகும்.
மட்டக்களப்பில் 76 வீதம் உள்ள தமிழர்கள் இரண்டு அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் 24 வீதம் உள்ள முஸ்லீம்கள் நான்கு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் முதலமைச்சர் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகவே போகும்.
(இரா.துரைரத்தினம்)