மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.



மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரூமேனியா நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு கிரீன் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறு வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக நம்பிக்கையான நிறுவனங்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அதிகமான நிறுவனங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து நம்பகத்தனமான முறையில் இளைஞர் யுவதிகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புகின்றபோது எமது மாவட்டத்தில் நிலவுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன் அப்ரோன் குழுமத்தினால் மேற்படி ரூமேனியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக இளைஞர் யுவதிகள் அனுப்பப்படவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ருமேனியா நாட்டிலிருந்து வருகை தந்த ரூமேனியா நாட்டு பிரதிநிதி திருமதி ரொக்சானா தலைமையில் இடம்பெற்ற இந்த நேர்முகப் பரீட்சையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து சுமார் 350 இளைஞர் யுவதிகள் தோற்றியிருந்தனர். இதில் தெரிவு செய்யப்படுபவர்கள் 8 மாதகாலத்திற்குள் ருமேனியாகுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.