இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது.
தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது,
எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது.
மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்க்கட்சி என்பது ஒரு சாதாரண இலங்கைக்குடிமகனுக்கு குழப்பமாகவே உள்ளது.
கிராமமக்களை தாக்கும் சாதாரண ஒரு யானை விவகாரத்திடற்குக்கூட முடிவெடுக்க தடுமாறுகிறது நல்லாட்சி அரசு .
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் நல்லாட்சி அரசின் மிகவும் பலவீனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதள பாதாளம் நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரம்,
வானளவு உயர்ந்துநிற்கும் விலைவாசி
அரசியல் ஸ்திரமின்மை ,
ரணில்-மைத்திரி உறவின் விரிசல்,
மஹிந்தவின் மீள் எழுச்சி,
கோத்தாவின் ஜனாதிபதி கனவு
போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் இத்தேர்தலை நல்லாட்சி அரசு எதிர்கொள்ளப்போகிறது .
தென்னிலங்கையைப்பொறுத்தவரை மஹிந்த அணி பாரிய வெற்றியடையப்போவது உறுதி. ரணில்-மைத்திரி நல்லாட்சிக்கு பலத்த அடிவிழப்போவது தவிர்க்கமுடியாத ஒன்று.
சேடம் இழுத்தவாறே 2020வரை நல்லாட்சியை ஓட்டுவதா அல்லது பொதுத்தர்தலுக்கு செல்வதா என்ற தர்மசங்கட நிலைக்கு ஜனாதிபதி உட்படுவார்.
எது எப்படி இருந்தாலும் மிகவும் சிக்கலான ஒரு அரசியல் நிலையே இந்த தேர்தலின் பின்பு நிலவப்போவது உறுதி.
இவற்றையெல்லாம் அரசியல் சாணக்கியனான ரணில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது எல்லாராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியன் என்னபதை நிரூபிப்பாரா அல்லது ராசி இல்லா அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபிப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.
வடமாகாண சபையும் கிழக்கு மாகாண சபையும் இரு வேறு தளங்களிலேயே பார்க்கப்படவேண்டியவை.
எப்படியாயினும் வடமாகாண சபை முழுத்தமிழ் கட்டுபாட்டிலேயே இருக்கும். ஆனால் கிழக்கின் நிலை அப்படியல்ல.
கிழக்கில் ஒரு தமிழர் முதலமைச்சராக வருவது இலகுவான காரியம் அல்ல. அதேவேளை முடியாத காரியமுமல்ல.
சரியான திட்டமிடலுடன் மக்கள் மனநிலைக்கேற்றவாறு வியூகம் அமைத்தால் தமிழர் ஒருவர் முதலைமைச்சராவது சாத்தியமற்றதன்று.
அதேவேளை முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக தார்மீகத்திற்கு அப்பால் கூட்டுசேர்வது இயங்கா நிலை முதலமைச்சரையே உருவாக்கும்.
முன்னாள் ஆயுத தாரிகளுடன் கூட்டுச்சேருவதாக இருந்தால் வடமாகாணசபையின் இயங்கா நிலைத் தோல்வியை ஒரு பாடமாக கொண்டு தீவிர அலசலுக்கு உட்படுத்தவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்குமாகாண கூட்டமைப்பினர்கள் வடக்கின் ஆதிக்கத்திற்கு உட்படாது சுயமாக முடிவுகளை எடுத்து தேர்தலுக்கான கிழக்கு மக்கள் நலன்சார் வியூகங்களை வகுக்கவேண்டும்.
இணக்க அரசியல்-நல்லெண்ண வெளிப்பாடு என்ற போர்வையில் கிழக்கு முஸ்லிம்தலைமகளுடன் விட்டுக்கொடுப்புகளுடனான ஓப்பந்தங்கள் செய்வது எதிர்மறை விளைவுககளையே தரும்.
சிங்களவர்களுடன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினாலும் தமிழர்களுடன் முஸ்லிம்கள் நல்லெண்ணத்தை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டர்கள் என்பதே வரலாற்று உண்மை.
எது எப்படி இருந்தாலும் தமிழ் கட்சிகளுள் கூட்டமைப்பே கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெறும்.
தமிழ் முதலமைச்சர் என்பது வகுக்கப்படும் வியூகங்களிலேயே தங்கியுள்ளது .
வடமாகாண சபைத்தேர்தல் வடக்கு மக்களை பொறுத்தவரை சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கப்போகிறது .
தற்போதைய வடமாகாண சபை என்பது கிட்டத்தட்ட இயங்கா நிலையிலேயே இருக்கிறது.
மக்களின் பெரும் ஆணையை பெற்று கூட்டமைப்பு விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கி ஆட்சி அமைத்த வடமாகாணசபை கடைசியில் தோல்விகண்ட ஒரு நிறுவனமாகவே மாறியுள்ளது.
இதற்கான முழுப்பொறுப்பும் கூட்டமைப்பையும் விக்னேஸ்வரனையுமே சாரும்.
தமிழர்களிடம் அதிகாரத்தை கொடுத்தால் அவர்களே சிக்கி சீரழிந்து போவார்கள் என்பதற்கு வடமாகாண சபையின் இயங்கா நிலைத்தோல்வி ஒரு சிறந்த உதாரணமாகும்.
இதுவரைக்கும் மாகாண சபை மக்களுக்கு செய்தவை விரல் விட்டு எண்ணக்கூடியவை மட்டுமே.
செய்யாதவை வானம் வரை உயர்ந்து நிற்கிறது.
கூட்டமைப்பும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுத்தரப்போவதில்லை என்பதற்கு இந்த இயங்காநிலை வடமாகாண சபையே சிறந்த ஒரு எடுத்துக்காட்டு .
வடமாகாண சபையின் முழுத்தோல்விக்கும் பொறுப்பு கூறவேண்டியவர் விக்னேஸ்வரன் அவர்களே.
ஒரு முதலமைச்சருக்குரிய எந்தவித தகைமையும் அற்ற ஒருவராகவே இந்த காலப்பகுதியில் தன்னை அவர் நிரூபித்திருக்கிறார்.
நிர்வாக ஆற்றல்,ஆளுமை,தலைமைத்துவம்,தீர்க்கதரிசனம்,அரசியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத ஒரு வெளித்தோற்ற பொலிவு கொண்டவராகவே அவர் கருதப்படுகின்றார்.
மாறாக, மூடநம்பிக்கை நிறைந்த ஒரு ஆன்மீகவாதியாக முரண்பட்டு நிற்கின்றார்.
இவருடைய பதவிக்காலத்தில் தன் பலத்தை விடுத்து தன பலவீனங்களையே வெளிக்காட்டியுள்ளார் .
தனக்கு மிக நெருக்கமான அமைச்சரின் ஊழலையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமான நிர்வாகியாக தன்னை வெளிப்படுத்தினார்.
அவரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு சொல்லுயும் கூட அமைச்சர் ஐங்கரநேசனின் ஊழலை கடைசிவரைக்கும் மனதளவில் ஒத்துக்கொள்ளவேயில்லை.
மாறாக விசாரணைக்குழுவை குறைகூறினார்.
இவருடைய நிர்வாகத்திறன் இன்மை காரணமாக பல மக்கள் நலத்திட்டங்களுக்கான கோடிக்கணக்கான பணம் மீண்டும் மத்திய அரசுக்கே ஆண்டுதோறும் அனுப்பப்படுகிறது.
தனக்குக்கீழுள்ள திணைக்கள அதிகாரிகளை இவர் இயன்றளவு சந்திக்காதே இருந்துள்ளார்.
அவர்களின் ஊழல் காரணமாக நாசமாக்கப்படும் பெருமளவு மக்கள் பணத்தைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படுபவராக விக்னேஸ்வரன் இல்லை.
மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு அவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
சுன்னாகம் குடிநீர் பிரச்சினை,இரணைமடு நீர்த்திட் டம், பொருத்து வீட்டு திட்டம்,பொருளாதார மையம் போன்ற எல்லாத் திட்ட ங்ககளிலும் இவர் செய்த குளறுபடிகள் சகலரும் அறிந்ததே.
எல்லாவற்றையும் எதிர்க்கும் இவர் அவற்றுக்கான சாத்தியமான மாற்றுவழிகளை ஒருபோதும் சொன்னதில்லை.
அவற்றை முன்மொழியும் அறிவு,அனுபவம்,ஆளுமை போன்றவற்றில் மிகவும் பலவீனமான ஒருவராகவே இதுவரைக்கும் தன்னை நிரூபித்துள்ளார்.
இவருக்கு தெரிந்ததெல்லாம் எல்லா அதிகாரத்தையும் என்னிடம் தாருங்கள் செய்துகாட்டுகிறேன் என்ற வாய்வீரம் மட்டுமே.
இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய எதையுமேஇவர் இதுவரையும் செய்யவில்லை.
அனைத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதுவித தீர்வையும் இவர் சொல்லுவதில்லை.
கூட்டங்களில் இவர் மெளனியாக இருப்பார் அல்லது பாதியிலேயே எழுந்து சென்றுவிடுவார்.
முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள விடயங்களில்கூட இவர் முடிவுகளை எடுப்பதில்லை.
அதற்கான ஆற்றலும் இவரிடம் இல்லை.
வடமாகாண சபையின் ஆயுட்கால முடிவில் விக்னேஸ்வரன் தலைமையிலான இந்த சபை பூரண செயற்திறன் அற்றதாக தன்னை நிரூபித்திருப்பதை மனசாட்சியுள்ள யாரும் மறுக்கமுடியாது.
எல்லாவகையிலும் தோற்றுப்போன ஒரு முதலமைச்சர் என்று தன்னை நிரூபித்துள்ள இந்த நிலையில் தான் மீண்டும் முதலமைச்சராக போட்டியிடும் தன் ஆசையை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.
எந்த தார்மீக அடைப்படையில் இவருக்கு இந்த ஆசை வந்தது என்பது ஆச்சரியமான ஒன்று.
இவருடைய பதவிகாலத்தில் தன்னை ஒருபோதும் மீளாய்வு செய்யவோ அல்லது சுயபரிசோதனை செய்யவோ இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
அப்படி செய்திருந்தால் ஒருபோதும் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
தனது பதவிக்காலத்தில் எதையுமே செய்யாத ஒருவர் மீண்டும் முதமைச்சராகி என்ன செய்யப்போகிறார்?
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விக்னேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சர் வேட்ப்பாளராக நிறுத்தப் போவதில்லை என கூறிய கையோடு ஏட்டிக்கு போட்டியாக தான் மாற்று அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடுவேன் அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று ஆச்சரியப்படுத்தினார்.
உண்மையிலே இந்த எண்ணம் ஆரம்பத்திலேயே இருந்திருக்கிறது.
இதற்கான காய் நகர்த்தல்களை ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறார்.
இதை அவர் வாயால் கூறவைப்பதற்கு சம்மந்தன் – சுமந்திரன் சூழ்ச்சியின் ஒரு அங்கமே சுமந்திரனின் இந்த கூற்று.
உண்மையிலேயே விக்னேஸ்வரன் தனக்கான ஆதரவுத் தளத்தை ஆரம்பத்திலிருந்தே பிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டிருக்கின்றார்.
இதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.
விக்னேஸ்வரனை வெளியேற்றுவது கூட்டமைப்புக்கும் தமிழரசுக் கட்சிக்கும் பெருத்த அடியாக இருக்கும் என்ற தளத்தை உருவாக்கினார்.
இதை உணர்ந்த சம்பந்தன் – சுமந்திரன் கூட்டின் வெளிப்பாடு தான் விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிட்டதும் ,காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கிதை தற்போதும் தான் சரியென்றே நினைக்கின்றேன் என்று சம்பந்தர் கூறியதும், விக்னேஸ்வரனின் புத்தக வெளியீட்டில் சம்மந்தன் உரையாற்றியதும் ஆகும்.
விக்னேஸ்வரனை எதிர்த்து சுமந்திரன் அறிக்கைவிடுவதும் பின்னர் அவரை சாந்தப்படுத்த சம்மந்தன் அறிக்கை விடுவதும் சம்மந்தன் – சுமந்திரனின் திட்டமிட்ட செயற்பாடேயாகும்.
விக்னேஸ்வரனை வெளியேவிட்டால் அது பாரதூமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற பயமே இவற்றிற்கான அடித்தளம் .
இப்பயத்தை திட்டமிட்ட முறையில் விக்னேஸ்வரன் ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்தியிருக்கின்றார்.
அதற்கு அவர் கையிலெடுத்த ஆயுதம் தமிழ்த் தேசியம்.
அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பேரவையின் இணைத் தலைவர் ஆனமை,
மாவீரர் விளக்கேற்றல்,
இளைஞர் அணி மாநாடு,
உரைப்புத்தவெளியீடு
என எல்லாமே தமிழ்த்தேசிய எண்ணப்பாடூடான சுயபலப்படுத்தலே.
எவ்வளவோ தீர்க்கப்ட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் இருக்க தன்னை பலப்படுத்துவதிலேயே இவர் தன் நேரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
மாகாணசபை என்ற நிறுவனத்தின் நிர்வாகி என்ற பொறுப்பை மறந்து ஒரு கட்சியின், இனத்தின் தலைவரைப் போல செயற்பட்டிருக்கிறார்.
ஒரு கட்சித் தலைவருக்கும் ஒரு நிறுவன நிர்வாகிக்குமான வேறுபாட்டை இவர் கடைசி வரை உணரவே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் மாகாணசபை தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள்.
இதில் விக்னேஸ்வரன் என்ற ஒரு காரணியே முடிவுகளைத் தீர்மானிக்கப்போகின்றது.
விக்னேஸ்வரனுடன் போட்டியிட்டு வெல்ல மக்கள் செல்வாக்குள்ள முதலமைச்சர் வேட்பாளர் எந்த ஒரு கட்சியிலும் இல்லை.
விக்னேஸ்வரன் சாயும் பக்கமே வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
கூட்டமைப்பானாலும் சரி மாற்றுக் கட்சிகளானாலும் சரி விக்னேஸ்வரனின் ஆதரவை தக்க வைக்கவே முனையும்.
இறுதி நேரபேரம் பேசல்களில் மீண்டும் விக்னேஸ்வரனே கூட்டமைப்பின் வேட்பாளராகவரலாம்
அல்லது கூட்டமைப்பு தன் கொள்கையில் உறுதியாக நின்று மாவையை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க, மாற்றுக் கட்சிகளின் வேட்பாளராக
விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்படலாம்.
கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்டால் விக்னேஸ்வரன் இலகுவாக மீண்டும் முதலமைச்சராகலாம்.
மாற்று அணி சார்பில் போட்டியிட்டு ஒரு வேளை வென்றாலும் சிக்கல் நிறைந்த ஒரு மாகாண சபைக்கே முதல்வராவார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் எல்லாம் சிதறுண்டு ஒரு முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான திருசங்கு நிலையே காணப்படும்.
யாழ் மேயர் தெரிவில் நடந்தவையே நடக்கும்.
இதைத்தான் தென்னிலங்கையும் விரும்பும்.
எது எப்படி இருப்பினும் தானாக விலத்தினாலேயன்றி மீண்டும் விக்னேஸ்வரனே முதலமைச்சராவதற்கு நிறைய சர்ந்தர்ப்பங்கள் உண்டு.
மாவைக்கான சந்தர்ப்பப் குறைவானதே.
இந்த சிக்கல்களை அரசியல் சாணக்கியன் ரணிலின் செல்லப் பிள்ளை என்று சொல்லப்படும் சுமந்திரனும்,
அடுத்த தேசியத் தலைவர் என்று சொல்லப்படும் கஜேந்திரகுமாரும்,
விஸ்வரூபம் எடுத்திருக்கும் விக்னேஸ் வரனும் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று கொழும்புத் தமிழர்களின் கையில்தான் வடக்கு கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் தங்கியிருப்பது வேடிக்கையானது தான்,
எது எப்படி இருப்பினும் மீண்டும் மண்குதிரைகளை நம்பித்தான் தமிழர்கள் ஆற்றைக் கடக்க முயலப் போகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
பிற்குறிப்பு :
சிங்கள ஆய்வாளர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது அவர் கூறியது: சம்மந்தன் – விக்னேஸ்வரன் – சுமந்திரன் இம்மூவரினதும் Megaplan தான் இதுவெல்லாம்?