மண்ணின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், அந்நிய குடியேற்றங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டிலும் பிரான்ஸ் t .r .t . வானொலியினுடைய பங்களிப்பிலும் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் , செல்வம் அடைக்கலநாதன் ,வினோ நோதரா லிங்கம் ,கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், சிவமோகன், கனக சுந்தர சுவாமி, மேரிகமலா குணசீலன் மற்றும் சித்தார்த்தன் அவர்களின் பிரதிநிதியாக சிவநேசன் (பவான் )உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு ரவிகரன் மேலும் உரையாற்றுகையில்,
இன்று இங்கு இடம்பெறுகின்ற மூத்த பிரஜைகள் இல்லத்திறப்பு விழாவை முக்கிய நிகழ்வாக நான் பார்க்கிறேன். தாயகத்தில் ஏற்கனவே பல சேவைகளை செய்துள்ள பிரான்ஸ் t .r .t . வானொலி மக்களின் துயர் துடிப்பு பணிகளின் இன்னொரு படியாக மேற்கொள்ளும் இந்த முதியோர் இல்லத் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இச்சேவைக்காக தம்மாலியன்ற அளவில் பங்களித்த புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
யுத்த காலத்தின் போது இதே மண்ணில் தான் ” பாதுகாக்கப்பட்ட வலயம்” என்று அறிவித்து விட்டு, மக்களை இங்கே ஒன்று கூட வைத்து, மக்கள் நெருக்கமாக கூடியிருந்த நிலையை பயன்படுத்தி ,குண்டுகள் வீசி எம் மக்கள் மீதான அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான எங்கள் உறவுகள் இங்கே தான் கொல்லப்பட்டனர் என்பதை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இன்று இதே மண்ணில் நாம் எம் உறவுகளுக்கான மீள் கட்டமைப்பு நிகழ்வொன்றில் எழுந்து நிற்கிறோம்.
இங்கு ஒரு மாபெரும் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு விட்டதோடு மட்டுமல்லாது, தற்போதும் எம் மக்கள் மீதான அநீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து வருகிறது. இங்கே வாழ்கின்ற பூர்வீக குடிகளான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிற உரிமைகள் அனைத்தும் , அந்நியக் குடியேற்றங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன.
ஏனைய இன மக்களுக்காக காணிகள் அபகரிக்கப்படுகின்றபோது தாமதம் காட்டப்படுவதில்லை. அனால் முறைப்படி இம் மண்ணில் உரிமையுள்ள தமிழ் மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. இது தவிர ராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிற நிலங்களால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முள்ளிவாய்க்காலில் அபகரிக்கப்பட்ட 617 ஏக்கரில் தனியார் நிலங்களும் உள்ளடக்கம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மணலாறு,கொக்குத்தொடுவாய், புதுக்குடியிருப்பு ,முத்தையன்கட்டு என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் காணி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள். இவ்வாறு எம் மக்கள் மீது இன அழிப்பை நடாத்தி, தொடர்ந்தும் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள். எம் மக்கள் மீது இவ்வாறு திணிக்கப்படுகிற அநீதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இங்கே கொண்டு வருகிறேன். என்றார்.