நாட்டில் இனவாதத்தையும் மத ரீதியாக இனக் குழுமங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இனவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கடந்த சுமார் ஒரு மாத காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் துவேசத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் செயற்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
உச்சக்கட்ட நடவடிக்கையாக அவர் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு அமைச்சர் மனோ கணேசன் பொருத்தமற்றவர் எனக் கூறி, இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குத் தவறியுள்ளார் என குற்றம் சுமத்தியிருந்தார். அமைச்சரவை அந்தஸ்து பெற்றுள்ள அமைச்சர் மனோ கணேசன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த ஞானசார தேரர், அமைச்சரைச் சந்திப்பதற்கு முற்பட்டபோது அதனை அமைச்சர் தவிர்த்திருந்தார்.
ஆயினும் அமைச்சர் மனோ கணேசன் அலுவலகத்தில் இல்லாத வேளையில் அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்த ஞானசார தேரரும், அவரது சகாக்களும் அமைச்சரை உடனடியாகச் சந்திக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அட்டகாசம் புரிந்தனர். இதனையடுத்து, அமைச்சுக்கு விரைந்த அமைச்சர் மனோ கணேசன் ஞானசார தேரருடன் பேச்சுக்கள் நடத்தி, அவர் வெளியிட்ட இனவாத கருத்துக்களுக்குத் தகுந்த பதிலளித்திருந்தார். அது மட்டுமல்லாமல், தனது அமைச்சுக்கு தான் பொருத்தமானவரா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் அதனைத் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஞானசார தேரர் ஈடுபட்டமை, அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு எதிராக இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டதுடன், அடாவடித்தனமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குருணாகல் பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களும் அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய, சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் பணிப்புரையையடுத்து விசேட பொலிஸ் குழுக்கள் இதற்கென நியமிக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொலிஸ் குழுக்கள் இப்போது ஞானசார தேரரைத் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
அதேவேனை, இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கென விசேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
நாட்டில் இனங்களுக்கிடையில் துவேசத்தையும் முறுகல் நிலையையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரினால் கண்டு கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக அரசியல் செல்வாக்கு மிக்க பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுபல சேனா, ராவணா பலய போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் இனங்களுக்கிடையில் வெறுப்பையும் பகைமை உணர்வையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும்போது, அவர்களின் செயற்பாடுகள் பொலிஸாரினதும், சட்டத்தினதும் கண்களுக்குத் தெரிவதில்லை..
ஆனால், அத்தகைய செயற்பாடுகளினால் தூண்டப்பட்டு, அதற்கு எதிராகச் செயற்படுகின்ற சிறுபான்மை இனத்தவர்களின் நடவடிக்கைகள் பொலிஸாரினதும், சட்டத்தினதும் கண்களில் மிகப் பெரிதாகத் தோன்றி, உடனடியாகச் செயற்படத் தூண்டியிருப்பதைப் பல சம்பவங்கள் நிதர்சனமாகக் காட்டியிருக்கின்றன. இத்தகைய ஒரு போக்கில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதை, ஞானசார தேரரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, இனங்களுக்கிடையில் அமைதியையும் சமாதானத்தையும் நிலவச் செய்வதற்கான இந்த நடவடிக்கை காலம் தாழ்த்தியே எடுக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஆனால், இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு உளப்பூர்வமானது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.
மதத்தின் பெயரில் இனவாதச் செயற்பாடுகள்
இந்த நாட்டில் அரசியலமைப்பு ரீதியாக பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. ஏனைய மதங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும்கூட, பௌத்த மதத்திற்கு முதன்மையான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. இந்த முன்னுரிமையானது, அரசியல் ரீதியானது, அரசியல் அந்தஸ்தும், அதிகார செல்வாக்கும் மிக்கது. இதன் அடிப்படையிலேயே பௌத்த மத குருக்கள் அரசியலில் தாராளமாக ஈடுபடுகின்றார்கள். பௌத்த மதக் கோட்பாடானது மத குரு ஒருவர் முற்றும் துறந்த துறவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.
ஆனால், நாட்டில் உள்ள நடைமுறைகளின்படி, அரசியலில் ஈடுபடுகின்ற பௌத்த மத குருமார்கள் உள்ளூராட்சி சபைகளின் உறுப் பினர்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று செல்வாக்கும் வசதிகளும் படைத்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். முற்றும் துறந்த நிலையில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை.
மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படாமல், பௌத்த மத வணக்கஸ்தலங்களுக்குப் பொறுப்பாக உள்ள மத குருக்கள் பலர் மக்கள் பிரதிநிதிகளைப் போன்று அரசியலில் சாதாரணமாக ஈடுபடுகின்றார்கள். சாதாரண அரசியல்வாதிகளைப் போன்று அடாவடித்தனங்களிலும், இனவாதம் தோய்ந்த அரசியல் செயற்பாடுகளிலும் தாராளமாக ஈடுபடுகின்றார்கள். இதனால், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களும், முஸ்லிம்களும் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
அரசியல் ரீதியான இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் மோசமான முறுகல் நிலைமையும் மோசமான பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது. பொதுபல சேனா, ராவணா பலய, ஹெல உறுமய போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த காவியுடை தரித்த பௌத்த மத குருமார்களின் தலைமையில் குண்டர்கள் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள்.
முன்னைய ஆட்சியில் இந்தச் செயற்பாடுகள் மிகச் சாதாரணமாக இடம்பெற்றிருந்தன. முஸ்லிம்களின் தர்கா நகர் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டமை போன்ற அடாவடித்தனமான சம்பவங்கள் தாராளமாக இடம்பெற்றிருந்தன. சட்டத்தையும், ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான படையினரும் இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அடாவடிச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பளிக்கத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பாததை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தமையும் பதிவாகியிருக்கின்றது.
நிலைமைகள் சீரடையவில்லை
இனங்களுக்கிடையில் முறுகல் நிலையையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் சற்று குறைவடைந்திருந்த போதிலும், அவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கவில்லை.
எழுக தமிழ் என்ற மகுடத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகளை முன்வைத்து, தமிழ் மக்கள் பேரவை மட்டக்களப்பில் நடத்திய பேரணியையடுத்து, அந்தப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராகிய வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பினர் ஞானசார தேரரின் தலைமையில் வவுனியா நகரில் ஒரு பேரணியை நடத்தியிருந்தனர்.
அந்தப் பேரணியில் இனவாதம் பகிரங்கமாகக் கக்கப்பட்டிருந்ததுடன், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது. ஒரு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அரசியல் ரீதியாக எதிர்க் கருத்து வெளியிடுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், மதத்தலைவர்களாக இருந்து கொண்டு, ஆண்கள் பெண்கள் குழந்தைகளைத் திரட்டி தீவிரவாத அடிப்படையில் இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பினர் அரசியல் சண்டித்தனம் காட்டும் வகையில் வவுனியாவில் பேரணி நடத்தியிருந்தனர். நாட்டில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை உருவாக்க செயற்பட்டு வருவதாகக் கூறுகின்ற அரசும், சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிஸாரும் அந்தப் பேரணிக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அந்தச் செயற்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவ்வப்போது இதுபோன்ற இனவாதச் செயற்பாடுகள் பௌத்த தீவிரவாத அமைப்புக்களினால் தாராளமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே, கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம்களுக்கு எதிராகப் பல சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தன. இதனை அரச தரப்பினரோ அல்லது பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. அத்தகைய சம்பவங்களில் ஒன்றாகவே அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்குள் ஞானசார தேரர் குழுவினருடைய அடாவடித்தனமும் இடம்பெற்றிருந்தது.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்திருந்தது. அதேபோன்று ஏனைய தரப்புக்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்திருந்தன. முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களும்கூட இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த இன முறுகல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பொலிஸார் மீது குற்றச்சாட்டு….,?
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய விடயம் விவாதிக்கப்பட்டபோது, இந்த அத்துமீறல் செயற்பாடுகளுக்கு பொலிஸாரே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரணம் கூறியிருந்தார். இதன்மூலம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் முப்படைகளின் தளபதி என்ற வகையிலும் நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய பொறுப்பை பொலிஸார் மீது அவர் தட்டிக்கழித்துள்ளார் என அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மோசமான ஒரு நீண்ட யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்து எட்டு வருடங்களாகிவிட்ட போதிலும், நாட்டில் இனங்களுக்கிடையில் இன்னும் நல்லிணக்கமும் நல்லுறவும் உருவாக்கப்படவில்லை. இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சந்தேகமும் அச்ச உணர்வும் நீக்கப்பட்டு, அனைவரும் இந்த நாட்டு குடிமக்கள் என்ற ரீதியில் இணைந்து ஐக்கியமாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங் கம் உணர்ந்திருக்கின்றது. அதன் காரணமா கவே நல்லிணக்கச் செயற்பாடுகளை அரசாங் கம் முன்னெடுத்திருக்கின்றது.
நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக யுத்தமோதல்களின்போது இடம்பெற்ற உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் தீவிர அக்கறையும் கரிசனையும் செலுத்த வேண்டிய ஒரு சூழலில், நல்லிணக்கத்துக்கான முயற்சிகளைப் பாழடிக்கின்ற நடவடிக்கைகளை அனுமதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
அத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெறுவதை அறிந்திருந்தும், ஆரம்ப நிலையிலேயே அவற்றுக்கு முற்றுப்புள்ளி இடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருப்பது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் அரசு பலவீனமாக இருக்கின்றது என்பதை சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், இனவாதத் தாக்குதல்களில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களின் மூத்த தலைவர்களைவிட இளம் அரசியல்வாதிகளே அதிக ஈடுபாடு காட்டியதாகக் கூறப்படுகின்றது. அவர்களுக்கு ஆதரவாக பெரும்பான்மை இன அரசியல்வாதிகளும் குரல் கொடுத்திருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலேயே இடம்பெற்ற நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவதில் இருந்து பொலிஸார் தவறியிருக்கின்றனர் என்ற வகையில் பொலிஸார் மீது ஜனாதிபதி பொறுப்பை சுமத்தியிருக்கின்றார்.
பொறுப்பான செயற்பாடு அவசியம்
நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்கள் பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்வதற்கு அரசாங்கத்தின் பேரினவாதக் கொள்கை ரீதியான செயற்பாடே காரணமாகும். பெரும்பான்மை இன மக்கள் பின்பற்றுகின்ற பௌத்த மதத்திற்கு அதிகாரபூர்வமான மேல் நிலையும், பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் ரீதியாக இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கும், செயற்படுவதற்கும் அரசாங்கமே இடமளித்திருக்கின்றது.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப் பதற்கு எந்த அரசாங்கமும் முன்வந்த தில்லை. பௌத்த மதத் தலைவர்கள் -அவர்கள் மூத்தவர்களாக இருந்தாலும்சரி, புதியவர்களாக இள வயதினராக இருந்தாலும்சரி அவர்களு டைய செயற்பாடுகள் எந்தவிதமான கேள்வியுமின்றி அரசாங்கத்தினாலும் அதிகாரிகள், அமைச்சர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படு கின்றன. அவர்கள் தவறான வழியில் செயற் பட்டிருந்தாலும்கூட, அதனைக் கண்டிப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அரச நிர்வாகம் முன்வருவதில்லை. இதுவரையில் முன்வந்தது மில்லை
அரசியல் ரீதியாகவும் மதரீதியாகவும் சிறு பான்மையினங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கி யொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியி லேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.
அத்தகையதோர் அரசியல் நிர்வாகப் போக் கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக முடுக்கிவிடப் பட்டுள்ள நடவடிக்கை காட்டுகின்றது. இனங்க ளுக்கிடையில் முறுகலையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண் டும். அந்த வகையில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படுமாக இருந்தால் நாட்டில் சிறுபான்மையின மக்கள் எதிர் கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிடும். அதேவேளை இனவா தச் செயற்பாடுகள் காரணமாகப் பல்கிப் பெருகுகின்ற பிரச்சினைகளின் எண்ணிக் கை யும் குறைவடைவதற்கு வழியேற்படும்.
எனவே, முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஏற் பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாக அமையக்கூடாது. அரசு மீதான அழுத்தங்களே இந்த நிலைப்பாட்டை எடுப்ப தற்கு அரசாங்கத்தைத் தூண்டியிருக்கலாம். ஆனால் இனவாதத்திற்கும், இனங்களுக் கிடை யில் முறுகல்நிலை ஏற்படுவதற்கும் இடமளிக் கப்படமாட்டாது என்ற நிலைப்பாட்டை, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அரசாங்கம் உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு நிலைப்பாட்டின் மூலம் மாத் திரமே நாட்டில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த முடியும். இல்லையேல் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை யாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.