மனித உரிமை மீறல்கள் என்னும் பதம், இதுவரை ஸ்ரீ லங்கா அரசங்கத்தினாலும் இராணுவத்தினாராலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், இன அழிப்பு, இன சுத்திகரிப்பு

748

ltte.tamil-bodies-300x167

யாழ். கலைத்தூது மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார் அதன் முழுவிவரம் வருமாறு:- சட்டத்துறையிலும் அரசியலிலும் பிரகாசித்து மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய பல தலைவர்களை இந்த நாடு கண்டிருக்கிறது. சட்டத்தில் பாண்டித்தியம் பெற்று தங்கள் வாதத்திறமையாலும் வாக்குவன்மையாலும் மக்களைக் கவர்ந்து புகழின் உச்சிக்குச் சென்ற எண்ணற்ற தலைவர்கள் இந்நாட்டில் உருவாகியிருக்கிறார்கள்.

எனினும் அவர்கள் மத்தியில் தனித்துவமான தனது குணாதிசயங்களாலும் மற்றைய அரசியல்வாதிகள் சொல்லவேண்டியதை சொல்லத்திராணியற்றிருந்த போது, தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களுக்காகத் துணிவுடன் செயல்பட்ட குமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். குமார் பொன்னம்பலம் நினைத்திருந்தால், தான் சார்ந்திருந்த மேல் தட்டுச் சமுதாயத்துடன் சமரசம் செய்து நல்லவர் என்ற பெயரினைப் பெற்று தற்பொழுதும் செல்வாக்காக இருந்திருக்கலாம்.

கண்முன்னால் நடைபெறும் அநியாயங்களையும் அநீதிகளையும் பொறுக்க முடியாமல் அதிகாரத்தில் உள்ளவர்களின் மனச்சாட்சி உறுத்தும் வண்ணம் பேசியபடியினாலும், எழுதியபடியினாலும் அவருடைய வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்தது அதிகார வர்க்கம். அவரது மறைவுக்கு தனது பத்திரிகையில் அனுதாபக் கட்டுரை எழுதிய Sunday Leader பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்க, “ Kumar would have been a colourful figure and a forthright speaker in Parliament. His death has deprived the people of a dependable leader ”. குமார் தனது மக்களை பிரதி நிதித்துவப்படுத்த விரும்பிய போது தமிழ்த் தலைமைகள் அவருக்குத் துணை கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் அவரைத் தேர்த்தெடுக்கத் தயாரான போது குமார் நம்மிடையே இல்லை. தமிழ் மக்கள் தவறவிட்ட, அது குறித்து காலமேல்லாம் வேதனைப்பட வேண்டிய எண்ணற்ற அரசியல் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான டெஸ்மன் பெர்னாண்டோவின் கூற்றுப்படி “In my view, and I speak as a non –Tamil, he was the greatest Tamil political leader of our times – dedicated, courageous and out – spoken”. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றே நம்பி வாழ்ந்தார்கள். பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு அரச பணிகளிலும், அரசியலிலும், கல்வித்துறையிலும், தொழில் துறையிலும் மற்றைய விவகாரங்களிலும் ஒருதலைப்பட்சமாக பாரபட்சத்தையே சந்தித்த மக்கள், அரசியல் வட்ட மேசைப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காத நிலையில் ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். ஆயுதப்போராட்டம் பலமான நிலையில் இருக்கும் வரை மக்களின் எதிர்பார்ப்புகளும் நிலைத்தன. பலமான தளத்தில் நின்று பேரம் பேசும் வாய்ப்பு இருந்தது.

அந்த நிலைமையிலும் கூட பெரும்பான்மையினரின் தலைமைகளும், சிங்கள பெளத்த நிலையியல் வாதிகளும் மற்றைய இனங்களுடன் சமரசம் செய்யத்தயாராக இருக்கவில்லை. சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. இந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது தமிழ் மக்கள் தாங்கள் அதல பாதாளத்தில் இருப்பதை உணர்ந்தார்கள். பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் உயிர்கள் மரணிக்கப்பட்டன. இருந்த வீடுகள், நிலங்களை இழந்து, வாழ்வாதரங்களைப் பறிகொடுத்து, உற்றார் உறவினர்களைக் கண்முன்னாலேயே இழந்து நிர்க்கதிக்குள்ளானர்கள். மிகவும் கபடமாகவும் தந்திரமாகவும் சர்வதேச தொண்டு ஸ்தாபனங்களையும் ஜக்கிய நாடுகள் நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் யுத்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி சாட்சிகளற்ற யுத்ததினை (War without witnesses ) நிகழ்த்தி, வரலாறு கண்டிராத கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றியது இலங்கை அரசு.. அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் பார்த்து வாளாவிருந்தது. எஞ்சியிருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விலங்குகளைப் போல் முட்கம்பிகளின் பின் அடைக்கப்பட்டு சொல்லொண்ணாக் கொடுமைகளுக்குள்ளானார்கள். வவுனியாவுக்கு அண்மையிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு அகதிமுகாம்கள் என்ற போர்வையில் இம்மக்களை அங்கு வருடக்கணக்காக அமர்த்திவைக்க திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டிருந்தன. வன்னியில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் அங்கு இருந்து வெளியேற்றிய பின்னர் மக்கள் நடமாட்டமற்றிருந்த வன்னி நிலப்பரப்பில் பாரியகுண்டுவீச்சுக்கள், ஆகாயமார்க்கத் தாக்குதல்கள் செல்வீச்சுக்கள், கொத்துக்குண்டுகள், இரசாயனகுண்டுவீச்சுக்கள் என்பவற்றால் அழித்தது போல எஞ்சிய குடியிருப்புக்களையும் வீடுகளையும் மனைகளையும் திட்டமிட்டு அழித்தது ஸ்ரீ லங்கா இராணுவம். மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட குடிசனங்கள் வாழ்ந்திருந்த, செழிப்பும் மண்வளமும் மிக்க வன்னி நிலப்பரப்பில் குடிசனங்கள் வாழ்ந்திருந்ததற்கான எதுவித அடையாளங்களும் அழிக்கப்படுவதற்கான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கனரக வாகனங்கள், புல்டோசர்கள் போன்ற அசுர இயந்திரங்கள் மூலம் மக்கள் செறிவின் அடையாளங்கள் தரைமட்டமாக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது. அதே பூமியில் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினரின் உத்தியோக இருப்பிடங்களையும், அவர்கள் குடுப்பத்தினரைக் குடியேற்றுவதற்காக பின்னர் அவர்களுடைய பிள்ளைகள், சிறுவர்களுக்கான பாடசாலைகள், அலுவலகங்கள், கிராம, நகர குடியிருப்புகள் என்பவற்றையும் உருவாக்கி மக்கள் பரம்பலை மாற்றுவதற்கான திட்டங்கள் செயலாக்கம் பெற்றன. புத்தர் சிலைகள் காணுமிடமெல்லாம் அமைக்கப்பெற்றன. அனுராதபுரத்தில் உள்ள ஒரு பெளத்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளும் விக்கிரகங்களும் வன்னிப்பிரதேசத்தின் பற்பல இடங்களில் பிரதிஸ்டை பண்ணுவதற்காக கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில்தான் பெரும்பான்மையினவாதத்தின் உண்மை சொரூபம் வெளிப்பட்டது. ஆடிப்பாடிக்களியாட்டம் நடத்தி வீதிகளில் பாற்சோறு சமைத்து விநியோகித்து மகிழ்ந்ததுடன் நின்றுவிடவில்லை அவர்கள். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும், நலிவுகளையும், துயரங்களையும், அவலங்களையும் கண்கண்டு களிப்பதற்காக வடபகுதிக்கு தென்பகுதியிலிருந்து சுற்றுலாப்பயணிகள் செல்லத்தொடங்கினர். பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்கமும் ஒன்றுசேர்ந்து இப்போக்குவரத்து வசதிகளை செய்து, கைச்செலவுக்கும் பணம் கொடுத்து இச்சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தார்கள். வெற்றிக்களிப்புக்கும் எக்காளத்துக்கும் எல்லையே இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிமுகாம்களிலும் நிம்மதியாக வாழவிடப்படவில்லை.

1560616_687534201298218_1626205361_n 10303754_747078738677097_6468857166754261344_n 1378829523srilanka_military22

விசாரணை, விளக்கம் என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் ஒருபுறம், நோய், பசிபட்டினியால் உயிர்நீத்தோர் ஒருபுறம், பொலிஸ் – இராணுவ பாலியல் கொடுமைகளுக்கும், துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாகிச் சருகாகிப்போன யுவதிகள், சிறுவர்கள் ஒருபுறம். சில ஸ்தாபனங்கள், சட்டத்தரணிகள் மூலம் மனித உரிமை வழக்குகள் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டன. சட்டரீதியற்ற, சட்டத்துக்கு புறம்பான வகையில் பெருந்தொகையிலான மக்கள் தடுத்துவைக்கப்பட்டதை எடுத்துக்காட்டிய இவ்வழக்குகள் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டன. எதுவித சட்டரீதியான காரணமுமின்றி மக்களைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு உரிமையிருக்கிறது என்ற ரீதியில் தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். இந்நிலையில் தான் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளும் இன்னல்களும் சித்திரவதைகளும் இன ஒழிப்புக் கைங்கரியங்களும் வெளியுலகத்துக்கு மெள்ள கசியத்தொடங்கின. இதன் விளைவாக ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு ஓர் அறிக்கையைச் சமர்பித்தது. அந்த அறிக்கை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற சட்ட வல்லுனர்கள், நீதித்துறை, புலனாய்வுத்துறையில் அனுபவம் வாய்ந்த பாரபட்சமற்ற நடு நிலையாளர்கள் அடங்கிய இக்குழு, போரின் இறுதி நாட்களிகளில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அக்கிரமங்களையும் விவரமாக வெளியிட்டது. சர்வதேசத்தின் மனச்சாட்சி நெருடப்பட்டதால் எற்பட்ட விளைவு தான், அதன் பின்னர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஜெனீவா அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும். இலங்கை அரசாங்கம் தனது சர்வ வல்லமைகளையும் உபயோகித்து இத்தீர்மானங்களை மழுங்கடிக்கும் நோக்கில் சகல இராஜதந்திர நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் கபடயுக்திகளையும் கையாண்ட பொழுதும், இந்தியா, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை சார்பாக பகீரத பிராயத்தனங்களை மேற்கொண்ட போதும் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையிலும் உலகெங்கிலும் வாழ் தமிழ் மக்களுக்கு ஓரளவு மன ஆறுதலைத் அளித்தது. இத்தீர்மானத்தின் 10ஆவது பிரிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் இலங்கை இராணுவத்தினால் புரிந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் முகமாக ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்கும் அதிகாரத்தை அளித்தது.

எனினும் இதில் தமிழ் மக்களுக்கு ஒரு சங்கடம் உருவாகியது. அதாவது மனித உரிமை மீறல்கள் என்னும் பதம், இதுவரை ஸ்ரீ லங்கா அரசங்கத்தினாலும் இராணுவத்தினாராலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், இன அழிப்பு, இன சுத்திகரிப்பு “war crimes, ethnic cleansing, genocide” போன்ற குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குப் பதிலாக சாதாரண மனித உரிமை மீறல்களுக்கு மாத்திரமே தீர்மானம் மட்டுப்படுத்தப்பட்டதாக கருத்து நிலவியது. இதன் எதிரொலியாக தமிழகத்திலுள்ள தமிழர் செயற்பாட்டுக் குழுக்களும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தன. மானிட நெறிகளுக்கு அப்பாற்பட்டு ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் ஆடிய வெறியாட்டங்கள் சம்பந்தமாக மிக மென்மையான எதிர்கொள்ளலையே (response) ஐ.நா மேற்கொண்டிருப்பதாக கருத்து நிலவியது. இதற்கு பதிலளிக்குமுகமாக, இத்தீர்மானத்தின் அணிந்துரையிலேயே (preamble) பதில் அடங்கி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, மனிதபிமானச் சட்டத்தின் (Humanitarian Law) எற்பாடுகளை மீறிய இராணுவச்செயற்பாடுளை விசாரிக்கும் ஆணையை இத்தீர்மானம் உள்ளடக்கியிருப்பது பல சட்ட அறிஞர்களினால் அவதானிக்கப்பட்டதுடன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும், அதற்கு முன்னரும் அதன் பின்னரும் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், யுத்தத்தைக் கைவிட்டு நிராயுத பாணிகளான போராளிகள், சரணடைந்த போராளிகள் ஆகியவர்களை படுகொலை செய்தது. சித்திரவதை செய்து துன்புறுத்தியது, திட்டமிட்ட முறையில் ஒரு நிலப்பகுதியில் குடி கொண்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள், மனிதபிமான உதவிகள் என்பவற்றை தடுத்து நிறுத்தியது, மக்களின் வாழ்வாதரங்களைச் சிதைத்து, பாலியல் வல்லுறவு, துஸ்பிரயோகம் என்பவற்றை இராணுவ தந்திரோபாயங்களாக பாவித்தது (rape as a weapon of war), மனிதர் வாழும் நிலப்பகுதிகளையும், குடியிருப்புகளையும் வாழ்வாதரங்களையும் சிதைத்ததன் மூலம் அமைப்புரீதியான இனச்சுத்துகரிப்பினை (structural genocide) மேற்கொண்டது ஆகியவற்றுக்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் கொண்டிருப்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 1949ம் ஆண்டின் ஜெனிவா உடன்படிக்கையின் படியும் 1977ம் ஆண்டின் கடப்பாடின் படியும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் போரின் போதும் போரை ஒத்த சூழ் நிலையிலும் ( war and war – like situation) இயைபுடையதாக ஆகின்றன.

ஆயுதப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்டிருப்பதனால், போரின் போது சட்டங்கள் மெளனிக்கின்றன எனக் கூறுவது தவறு. மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள் போரின் பொழுதும் சாதாரண காலங்களிலும் அமுலில் இருக்க வேண்டும். மனிதாபிமானச் சட்டங்கள் போரின் போதும் போர்க்காலச் சூழலிலும் பாவனையிலிருக்கும் சட்டங்களாகும். ஹேக் விதிகளின் 25வது ஷரத்தின் படி “ நகரங்கள், கிராமங்கள், கட்டடங்கள்,குடியிருப்புகள் மீது தாக்குதலோ, குண்டு வீச்சுகளோ எந்த வகையிலும் செய்யலாகாது. போரில் ஈடுபடும் எந்த ஒரு தரப்பும் குடிமக்களையோ, குடி மக்களுடைய மக்களுக்குரிய சாதனங்களையோ (civilians or civilian objects ) தாக்குதலில் இருந்து தவிர் ப்பதற்கான எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்திருக்கவேண்டும்.” கைது செய்யப்பட்டவர்களை கொல்வது அல்லது சித்திரவதை செய்வது, பணயக்கைதிகளாகச் சிறைப்பிடித்து ஒட்டு மொத்தமாக பெருந்தொகை மக்களுக்கு தண்டனை கொடுப்பது, தவிர்க்க கூடிய இடர்பாடுகளை தவிர்க்க கூடிய சூழ் நிலையிலும் அவற்றை சிவிலியன்கள் மீது திணிப்பது போனறவற்றுக்கு எதிரான பிரத்தியேக விதிமுறைகளை சர்வதேச மனிதபிமானச் சட்டங்கள் கொண்டிருக்கின்றன. இந்த சர்வதேசசட்டங்களை, மனிதபிமானச் சட்ட விதிமுறைகள் என்பவற்றை எல்லையற்ற வகையில் ஸ்ரீ லங்கா அரசில் இராணுவம் மீறியுள்ளன என்பதற்கு அதிகளவான சான்றுகள் உள்ளன. செய்மதி மூலம் எடுக்கப்பட்ட பிரதிமைகளும் Channel 4 போன்ற ஊடகங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களும் இதனை வலியுறுத்துகின்றன. எனவே ஸ்ரீ லங்காவில் போர்க்குற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் என்பவற்றினை உள்ளடக்கியதாகவே இத்தீர்மானம் அமைந்துள்ளதெனக் கருதுவதற்கு இடமுண்டு. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள் துரிதகதியில் நடக்கத்தொடங்கின. இதன் நடவடிக்கைகளை முன்னின்று செயல்படுத்த சர்வதேச நிபுணர் குழு நிறுவப்பட்டது. இக்குழுவிற்கு அநுசரணையளிக்கும் வண்ணம் புலன்விசாரணைக்குழு அமைக்கப்பட்டு தகைமை வாய்ந்த செயற்பாட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட நவநீதம் பிள்ளை அம்மையார் (Madam Navaneetham Pillai) இன் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் Prince Zeid al-Hussein அவர்களின் வழி நடத்திலில் சர்வதேச விசாரணைக்குழு தனது பணியை தொடர்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வாய்மொழிமூலமான சமர்ப்பணம், இந்த விசாரணை எந்த வழியில் செல்லக்கூடியதென்பதற்கு ஓரளவு பூடமாக சில விடங்களைக் கூறி நிற்கிறது. இந்த விசாரணைக்குழுவுக்கு சவாலாக இருக்கும் பிரதானமான விடயம் என்பது, நடந்த சம்பவங்களுக்கான, விசாரணைக்குட்படுத்தக்கூடிய நிகழ்வுகளுக்கான சான்றுகளைச் சேகரிப்பது தான். இந்தச் சான்றுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சித்திரைவதைக்கு உள்ளானவர்கள், சட்டரீதியாகவன்றி கைது செய்யப்பட்டவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள், காணமல் போனவரகளின் குடும்ப உறுப்பினர்கள் போன்ற பலர் ஏற்கனவே வெளி நாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்களின் சாட்சியங்கள், வாக்குமூலங்ள் எற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சாட்சியங்களின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எனினும் உள்நாட்டில் வாழும் மக்களின் சாட்சியங்களும் அத்தியவசியமானது எனத் கருதப்படுகிறது. யுத்தத்தின் போது நடந்தேறிய அக்கிரமங்களை கண்கூடாகக் கண்டவர்கள், யுத்த பூமியில் பார்வையாளர்களாயிருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் இவ்விசாரணை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கண் கூடாக பார்த்த நேரடிச்சாட்சிகளாவர். இவர்கள் நாடெங்கிலும் சிதறி வாழ்கிறார்கள். இவர்களை இனம் கண்டு ஒன்று சேர்த்து சாட்சியங்களை சேகரிப்பது இலகுவான செயல் அல்ல. இப்படிப்பட்ட மக்கள் தங்களது சொந்தங்களை இழந்து, பெற்றோர், சகோதரர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்களை இழந்து மனம் பேதலித்து வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியயையும் துயரத்திலேயே கழிப்பவர்கள். இவர்களில் பலர் தமது அன்றாட சீவியத்துக்கும் அடுத்த நேர உணவுக்கும் உத்தரவாதமின்றி, வாழ்வாதரங்களை இழந்தவர்கள். இவர்கள் தாங்களாகவே முன்வந்து சாட்சியங்களை முன்வைப்பதற்கு உரிய நிலையில் இருப்பார்கள் என்று கூற முடியாது. இதற்காக, பெறுமதி வாய்ந்த இவர்களின் சாட்சியங்கள் எடுக்கப்படாமலே விட்டுப் போகுமோ என்று விசனம் உணரப்ப்டுகின்றது. சமூகத்திற்கு விடியலைக் கொடுப்பதற்கான வாய்ப்பு , இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்துவற்கான சந்தர்ப்பம் வீணாக்கப்படாமல் நன்கு உபயோகப்படுத்த வேண்டும்.

வாராது வாய்த்த இந்த வாய்ப்பு இப்போது பயன்படாவிட்டால் வாழ் நாள் முழுவதற்கும் எங்கள் தலை முறை வருத்தப்பட வேண்டி வரும் என்ற விடயத்தை நன்கு நினைவு கொள்ளவேண்டும். மக்கள் பயந்திருந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது.இவ்வளவு கொடுமைகளையும் தாங்கி விட்டோம், இனிமேல் பயங்கொண்டு காப்பற்றுவதற்கு மீதமென்ன இருக்கிறது. என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், சட்டத்தரணிகள், தொழில் சார் நிபுணர்கள், சமூக சேவையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் சரித்திர முக்கியத்துவம் மிக்க தங்கள் கடமைகயை உணர்ந்து இச்சாட்சியங்களை சரியான வகையில் நெறிப்படுத்தி தகுந்த பொறிமுறைகள் மூலமாக சர்வதேச விசாரணைக் குழுவிற்கு அனுப்புவதற்கு கடமைப்பட்டவர்கள். அதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியும். தெரியாவிட்டால் இது பற்றி நன்கறிந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அணுகலாம். பாதுகாப்பாக , சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கைகளை ஆற்றக்கூடிய வாய்ப்புள்ளது. இச்சான்றுகளும் சாட்சியங்களும் சென்றடைவதற்கு இம்மாதம் ஒக்ரோபர் 31ம் திகதி வரையே கால அவகாசம் உள்ளது. இச்சாட்சியங்கள் பிரதானமாக, சத்தியக்கடதாசிகள் மூலம் (affidavit) அளிக்கப்படவேண்டும். சத்தியக்கடதாசிகள் மூலம் அளிக்கப்படும் சான்றுகள் நீதிமன்றங்களில் கூட ஏற்கப்படும் தன்மையுள்ளன. தாங்கள் நேரடியாக அனுபவித்த, பார்த்த சம்பவங்களைக் கோவையாக, தெளிவாக பதிவிடல் வேண்டும். இக்கால கட்டத்தில், காணாமல் போனோரின் விடயமும், அவர்களது உற்றார் உறவினர்களின் முடிவுறாத போராட்டங்களும் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட வேண்டியவை ஆகும். உயிரிழப்புகள், கைதுகள், துன்புறுத்தலுக்கு ஆனோர்கள் கூட வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் உள்ளாகி ஓரளவு மனம் தளர்ந்தாலும் கூட காணமல் போனோரின் உறவுகள் தங்கள் உறுதி குறையாமல் மேல்மேலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியாக உள்ளார்கள். மனத்துணிவுடன் நீதிமன்றை நாடி ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்து தங்கள் உறவுகளுக்கும் தமிழ் சமூகத்திற்கும் நேர்ந்த இன்னல்களை முறையாக பதிவு செய்ததில் முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். இவர்கள் மூலமாக வெளிப்பட்டுள்ள சான்றுகளும் பதிவுகளும் சர்வதேச விசாரணைகளை பலப்படுத்தும் என்பது நிச்சயம்.

முன்னர் குறிப்பிட்ட நபர்கள், ஸ்தாபனங்கள் யாவும் சுயாதீனமாக, அச்சுறுத்தலின்றி செயற்படுவதற்கு சில சிக்கல்கள் உள்ளன. தகவல் தர முன் வருபவர்களை சுதந்திரமாக விசாரித்து வழிநடத்திச் செல்வதற்கான உபாயங்கள், காரியாலயங்கள், உட்கட்டமைப்புகள் விடயத்தில் குறைபாடுகள் நிலவிய போதும், தாங்களாகவே முன்வந்து, சொந்த பாதுகாப்புக் கரிசினைகளையும் புறந்தள்ளி, சாட்சியங்களை முறையாகப் பெற்று குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலைமையில், உத்தியோகபூர்வமாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களால் அபரீதமாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக வடமாகாணசபை விளங்குகிறது. அதுமட்டுமன்றி சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி முன்னேற்றகரமான ஆனதீர்மானம் ஒன்றினை முன்னுதாரணமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் வடமாகணசபை உறுப்பினர்கள். அவர்கள் அத்துடன் நிற்காது, மக்களின் சாட்சியங்களை முன்னெடுத்துச் சரியானவகையில் காலஅவகாசத்துக்குள் அனுப்புவதற்கும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கான அனுசரணையையும் உத்வேகத்தினையும் கொடுப்பது அத்தியாவசியமாகிறது. வடமாகாணத் தமிழ் மக்கள் தங்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகத்தினையும் பொருட்டாக மதிக்காது மாகாணசபையைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். இவர்களனைவரும் இராணுவத்தினரின் கொடுமைகளுக்கு முகம்கொடுத்து, சொல்லில் அடங்கா இழப்புக்களை சந்தித்தவர்கள். இவர்களுக்கும் பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இவற்றில் முதன்மையானது பொறுப்புகூறல் கடமை சம்பந்தப்பட்டதாகும். தங்களுக்கிழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் விடயத்தில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதெனில் கொடுமை இழைத்தவர்கள் அடயாளம் காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இதனை வேறு விதத்தில் கூறவேண்டுமென்றால் பொறுப்புக்கூறும் கடமையும், கட்டளைச்சங்கிலியின் தொடர்ச்சியும் இனம் காணப்படவேண்டும் என்பதாகும். பொறுப்புகூறல் எனும் கடமைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பதில் – அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை. பொதுமக்களுக்கு zero இழப்புக்களுடன் இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதாகும்.

வடக்கு கிழக்கில் பாரிய முன்னேற்றத்திட்டங்கள் நடைபெறுகின்றன. உட்கட்டமைப்பு திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன எனவும் கூறி சர்வதேசத்தை திசைதிருப்பும் முயற்சி நடைபெறுகிறது. வடமாகாணசபை இவ்வாறான பிரசாரங்களுக்கு எடுபட்டுவிடக்கூடாது. இதுசாதாரண நிர்வாகப் பிரச்சினையோ முன்னேற்றத்திட்ட முனைவுகளோ அல்ல. இறுதியில் அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச்சினையாகும்.

தொலைநோக்குடன் செயல்படுவதற்கு தமிழ்தலைமைகள் கடப்பாடு உடையவர்களாவர். வெறுமனே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு காலத்தையும் போக்கி மூக்குடைபட்ட உதாரணங்கள் சமீபத்திய அரசியல் வரலாற்றில் உண்டு. அரசாங்கத்தின் ஆசைவார்த்தைகளுக்கு மயங்கியோ, அண்டை நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியோ பேச்சுவார்த்தை என்ற கானல் நீரில் மூழ்குவதும், பொறுப்புகூறல் என்ற அடிப்படைக் கோரிக்கையிலிருந்து விலகுவதும், தமிழ் இனம் முழுவதற்கும் இழைக்கப்படுகின்ற மாபெரும் துரோகமாகக் கணிக்கப்படும். 2009ஆம் ஆண்டில் போரின் முடிவின் போதும் அதன் முன்னரும் பின்னரும் நடந்த இனப்படுகொலைகளை சர்வதேச விசாரணை மன்றுக்கு முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவைகளை சாதாரண மனித உரிமைகளாக சித்தரித்து அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்கும் சமரசப் போக்கில் அரசு சார்பானவர்கள் மட்டுமல்லாது, தமிழ் மக்களின் பிரதி நிதிகள் எனக் கூறிக்கொள்பவர்களும் ஈடுபட்டுள்ளது, புரியாத புதிராக இருப்பதுடன் வேதனைக்குரியதொன்றாகும்.

ஸ்ரீ லங்கா அரசு உள் நாட்டில் எதுவித எதிர்ப்பையும் இலகுவாக முறியடிப்பதுடன், தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி பெற்று, முழு நாட்டையும் இராணுவ கடடாட்சிக்குள் கொண்டு வந்து, தமிழ் மக்களின் வாழ்வையும் இருப்புகளையும் கபளிகரம் செய்து கொண்டு இருக்கும் இத்தருணத்தில், அரசுக்கு எதிராக உள்ள ஒரே ஒரு சவால் ஐ.நா முன்னெடுக்கும் சர்வதேச விசாரணை ஆகும். இனப்படுகொலை என்ற பதத்தின் வரைவிலக்கணத்திற்கு அமைவாக விசாரணைகள் சட்டரீதியாக ஏற்கப்படுமா என்கிற நுணுக்கமான சர்ச்சைகளுக்குள் இப்பொழுதே இறங்காமல், இனப்படுகொலைகள் நடந்ததை உலகறியச் செய்வதும் அதற்கான சான்றுகளை சேகரிக்க உதவுவதும் தமிழ் மக்களினதும் அவர்களின் பிரதி நிதிகளினதும் கடமையாகும்.

நடந்தேறிய இனப் படுகொலையை, இனப்படுகொலை என்று தமிழ் மக்களே சொல்லாவிட்டால் , வேறு எவர் இருக்கிறார்கள் அவ்வாறு கூறுவதற்கு? விசாரணை மன்றங்கள் முடிவு செய்வதற்கு முன்னரே நாமாகவே எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு துரும்புச்சீட்டை கை நழுவ விடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகும். சர்வதேச விசாரணைகளை நோக்கிய தமிழ் மக்களினது நீண்ட நெடும் பயணத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் தமிழ் நாட்டு உணர்வாளர்களும் மாபெரும் உந்துசக்தியாக விளங்குகிறார்கள்.

இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் மக்களின் போராட்டம் ஏற்கனவே முற்றுமுழுதாக முறியடிக்கப்பட்டிருக்கும். எங்கள் விவகாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் இதில் தலையீடு செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறுவது, யதார்த்த நிலையை உணராதவர்களின் கூற்று என்பதுடன், கண்களை விற்று சித்திரம் வாங்கியதற்கு ஒப்பானதாகும். –

SHARE