மயான பூமியாக மாரும் இத்தாலி பெரும் சோகத்தில் மக்கள்

496

உலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் இதுவரை 30 ஆயிரத்து 880 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 184 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3,516 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் புதிய நோயாளர்கள் 66 ஆயிரத்து 767பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் நிறைவுபெற்ற வழக்குகளில் உயிரிழந்தோரின் வீதம் 18 ஆக அதிகரித்துள்ளது. குணமடைதோர் 82 வீதமாக உள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடான இத்தாலியில் தொற்று நோயின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 889 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அங்கு புதிதாக 6 ஆயிரம் பேருக்கு தொற்று பரவியதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 92 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக இத்தாலி 4.8 பில்லியன் டொலர் செலவிட வேண்டியுள்ளதாக கணக்கிட்டுள்ளதால் அந்நாட்டு பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் கொரோனாவின் பாதிப்பு கடுமையாக உணரப்படுகிறது. புதிதாக நேற்று 7 ஆயிரத்து 516 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 73 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயினில் 844 பேர் மரணித்த நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 பேராக அதிகரித்துள்ளது. அங்கு மேலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, இதுவரை இல்லாதவாறு நேற்று ஒரேநாளில் அமெரிக்காவில் 525 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக பதிவாகியுள்ளது.

அங்கு நேற்று மட்டும் 19 ஆயிரத்து 452 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு மொத்தமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தமாக 2,227 உயிரிழப்புக்கள் இதுவரை பதிவாகியுள்ளதுடன் நியூயோர்க் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு 53 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 883 ஆகக் காணப்படுகிறது.

இதேபோல், மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்சில் நேற்று மட்டும் 319 பேர் மரணித்ததைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதால் இதுவரை 37 ஆயிரத்து 575 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், பிரித்தானியாவும் வைரஸ் தொற்றார் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. அங்கு நேற்று மட்டும் 260 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 17 ஆயிரத்து 89ஆகக் காணப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள பெரிய விழா அரங்குகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக மூன்று பெரிய அரங்குகள் தெரிவுசெய்யப்பட்டு முதல் அரங்கில் மருத்துவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. அதிகரித்துவரும் பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையில் மருத்துவமனைகளின் தேவை அதிகரித்து வருகின்றதால்  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, ஈரானில் நேற்று மட்டும் 139பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 517 ஆகக் காணப்படுகிறது.

நெதர்லாந்தில் 93 பேரும் ஜேர்மனியில் 82 பேரும் பில்ஜியத்தில் 64 பேரும் நேற்று மரணித்த அதேவேளை, துருக்கி, போர்த்துக்கல், அயர்லாந்து போன்ற நாடுகளிலும் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

இதேவேளை, கனடாவில் மொத்தமாக 5 ஆயிரத்து 655 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று புதிதாக 80இற்கும் மேல் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 உயிரிழப்பு பதிவாகி மொத்த உயிரிழப்பு 60ஆக அதிகரித்துள்ளது.

SHARE