மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தயசாலை பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை உறுதிப்படுத்தும் முகமாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பணிப்பாளர் கு.அகிலேந்திரனை இடமாற்றம் செய்யவுள்ளதாக நான் அறிந்திருந்தேன். இவ் இடமாற்றம் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் ஓர் இடமாற்றமாகும்.
எனினும் பாரிய வைத்தியசாலைகக்கு சிரேஸ்ட மருத்துவ நிர்வாகத்துறையை சேர்ந்தவர்களே நியமிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் தற்போது இதற்கு பாரிய வெற்றிடம் காணப்பட்டு வரும் நிலையில் மருத்துவத்துறையில் நிர்வாக அதிகாரியான வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனை இவ்வாறு இடமாற்றம் செய்வது எமது பிரதேசங்களுக்கு பாரிய இழப்பாகும். வவுனியா வைத்தியசாலை இவருடைய காலத்தில் பல்துறையிலும் அபிவிருத்தி அடைந்து வருவதுடன் சிறந்த முகாமைத்துவத்தையும் மேற்கொண்டிருந்தார். இந் நிலையில் இவருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப்பெறவுள்ளதாக அறிந்திருந்தேன். எனினும் இவ் இடமாற்றத்தினை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர்களுடன் கலந்துரையாடுவேன் என்பதுடன் சுகாதார அமைச்சருக்கும் எடுத்துக்கூறுவேன் எனவும் தெரிவித்தார்