மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை? – விஜயகுமார்

298

விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அதன் கொள்கை நடைமுறைகளை ஏற்று அங்கீகரித்து வருகின்றனர். எனினும் மறுபுறம் மலையக மக்களிடம் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பதான தோற்றப்பட்டடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும் இவர்களுக்கிடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய கருத்தாடல் இடம்பெறாமையானது துரதிஸ்டமே.
தொழிலாளர் தேசிய சங்கமும் பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரசும் இன்று அரசியல் புரிந்துணர்வடன் செயற்பட்டு வருகிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தலே இந்த கூட்டணியின் இலக்கு என்பது வெளிப்படை. இந்த இரு கட்சிகள் கூட்டணியாக செயற்படுவதில் ‘கொள்கை’ ரீதியான தடைகள் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகள், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து செயற்படுவதிலும் எந்தவித பிழையும் இல்லாத நிலையில் அந்த இரு அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று வியக்கத்தக்கதல்ல.
கூட்டு ஒப்பந்தம் மலையக மக்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் பொறிமுறையாக வந்த பின்னர் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் தவிர்ந்த ஏனைய சங்கங்கள் கூட்டணிகளை அமைத்து அறிக்கைகளையும் ஊடக சந்திப்புகளையும் நாடாத்தி வந்த போதும் அது நிரந்தர கூட்டணியாக இருந்ததில்லை. இக்கூட்டணி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை உறுதிபடுத்துவதற்கு தொடர்ச்சியாக செயற்படாமையில் இருந்து அது பருவகால கூட்டணி என்பது வெளிப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து குரல் கொடுக்க மாட்டோம் என்ற வெளிப்பாட்டையும் அது மக்களுக்கு வழங்கியுள்ளது.
இன்றைய ஐ.ம.சு.மு அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை திட்டமிட்டு சிதைத்து அவற்றை பலமிலக்கச் செய்துள்ளதாக கருத்துக்கள் உண்டு. இந்த கருத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிளவுகளில் இருந்து காணலாம். எனினும் மலையகத்தில் தொழிற் சங்க அரசியல் என்பது பல்வேறு பிளவுண்ட அரசியல் அமைப்புகளை வரலாற்று ரீதியாகவே ஏற்படுத்தி இருக்கின்றன. இடதுசாரி தொழிற் சங்கங்களுக்கிடையே பிளவுகள் ஏற்பட்ட போதும் அவை பொதுவில் கொள்கை அடிப்படையில் அமைந்ததோடு தனித்து மலையக அரசியல் என்ற வரையறைக்குள் உட்படுத்தி பார்ப்ப முடியாதவைகளாகும். மலையகத்துக்கு மட்டும் மலையக தேசியவாத அரசியல்ஃ தொழிற்சங்க அமைப்புகளுக்கிடைய கொள்கையளவில் இருந்த சிற்சில வேறுபாடுகளும் இன்று அருகி ஒன்று கலக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே, நிலையில் ஐ.ம.சு.மு அரசாங்கத்திற்கு மைய நீரோட்ட மலையக அரசியல் தொழிற்சங்க சக்திகளை பிளவுபடுத்த வேண்டிய தேவை இல்லை மாறாக அவை அனைத்தையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் இணைத்து விட வேண்டிய தேவை மட்டமே உள்ளது.
முன்பு இ.தொ.கா மட்டும் கொண்டிருந்த எது ஆளும் கட்சியோ அதில் அங்கம் வகிப்பது என்ற எழுதப்படாத விதியானது இன்று மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக கட்சிகளினதும் கொள்கையாகி விட்டது. இப்பின்னணியில் மலையக அரசியலை தனது அரசியல் நிகழ்சி நிரலுக்குள் இணைத்துக் கொள்வதற்கான விசேட பிரயத்தனங்கான தேவை இருப்பதில்லை.
இன்று ஐ.ம.சு.மு அரசாங்கம் மலையக அரசியல் கட்சிகள் இன்றியே தமது ஆட்சியை கொண்டு செல்ல கூடிய வலிமையை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கிறது. அத்தோடு மலையக அரசியல் எந்த வித குறிப்பான அரசியல் புரிந்துணர்வு வேலைத்தின் அடிப்படையில் அரசாங்கத்துடன் சேர்ந்தவைகள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. எனவே அரசாங்கத்துக்கு மலையக மக்கள் சார்பாக நின்று அழுத்தங்களை வழங்கும் நிலையில் இல்லை. 2005 மஹிந்த சிந்தனையில் மலையக மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரும் சக்தியைக் கூட மலையக தலைமைகள் கொண்டிருக்கவில்லை.
ஐ.ம.சு.மு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதியிடமும் நாமே மலையக மக்களிடத்தில் அதிக செல்வாக்கை கொண்டவர்கள் என்பதை தேர்தல் காலத்தில் வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிஃதொழிற்சங்கங்களுக்குமான பிரதான பணியாக உள்ளது. எனவே தமக்கிடையிலான உள்ளக போட்டியில் கட்சிகள் பெறும் வாக்குகள் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் அரசாங்கத் தரப்புடன் இருப்பதனை உறுதி செயவதுடன் அமைச்சுக்களையும் பெற்றுத்தரும். எனினும் அவைகள் அனைத்தும் அரசாங்கத்தின் தனிச்சையான முடிவை அடிப்படையாக கொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுற்றவுடன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் இருக்கும் நிலையில் தற்போதைய ஜனாதிபதிக்கு மலையக மக்களின் வாக்கினை வழங்கி வைக்கும் பணியே அவர்களின் அடுத்தக்கட்ட மிக பிரதான பணியாக இருக்கப் போகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பன ஐ.ம.சு.மு. அரசாங்கத்தில் இருந்து தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட போதும் அவர்களின் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதனூடாக அவர்களின் கொள்கையை அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளில் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். எனினும் மலையக அரசியல் தலைமைகளிடத்தில் முழுமையான சரணடைவை மீண்ட அரசியல் என்பது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாயிற்று.
மக்கள் சார்பாக நின்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்று கூறி மக்கள் சார்பாக இருப்பதனை புறக்கணித்து வருகின்றனர். மலையக மக்களோ வாக்களிக்கும் அந்த கணப் பொழுது ஜனநாயகத்தை அனுபவிக்க உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். எனவே வாக்களிக்கும் கணப் பொழுக்கு மட்டுமான ஜனநாயகத்தை தாண்டி மலையக மக்களின் அரசியல் பயணம் என்பது தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தங்களுக்கிடையிலான போட்டி அரசியலிலோ அல்லது அவற்றுக்கிடையிலான கூட்டணிகளிலோ அல்ல என்பது தெளிவு.
SHARE