இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக’ செய்ய வாருங்கள்.
மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை’ நிர்வாணமாக நிற்க வைத்துள்ளது ஜநா மனித உரிமைப் பேரவை அறிக்கை.
மலையக மக்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டை தொட்டு நிற்கின்ற அதாவது 200 வருடங்களை எட்டியுள்ள இவ் வேளையில் ஜநா மனித உரிமைப் பேரவை ‘மலையக மக்கள் நவீன அடிமைத்தனத்தின் சின்னமாக’ உள்ளதை வெளி உலகுக்குப் பறைசாற்றி நிற்கின்றது.
இது ஒன்றும் பரம ரகசியமில்லை. காலம் காலமாக பேசப்பட்ட விடயம்தான். சர்வதேசரீதியில் பேசப்பட்டபோதும் ஜநாவில் முதன் முறையாக மலையக விவகாரம் வந்துள்ளது.
மலையக மக்களின் ‘பிச்சைக் காசில்’ வயிறு வளர்க்கும் ஒரு இளம் தொழிற்சங்க அரசியல்வாதி ‘நாட்டை நாம் காட்டிக் கொடுப்பதா எனக் கூறி மலையகம் குறித்து காண முயன்ற விடயங்களைத் திசை திருப்பிவிட முயன்றதாகத் தகவல். சிங்கள தேசமே அணிதிரண்டு ஜநா வாசலில் நிற்கும்போது மலையக நிலையை அறிக்கையிட வந்தவர்களை திசைதிருப்பிவிட முயன்றதை மலையக மக்கள் மன்றத்தின் முன் வைக்கின்றேன்.’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளில் இது ஒரு உதாரணம். துரதிஸ்டவசமாக மலையக தொழிற்சங்க அரசியலில் இன்று பதம் பார்க்காமலே நிலைமையைக் கூறிவிடலாம்.
மலையக தொழிற்சங்க அரசியலில் இன்று ஒரு நடேச ஜயரைப் பார்க்க முடியாதுள்ளது. ஒரு வெள்ளையனையோ அல்லது ராஜலிங்கத்தையோ தேடிப் பார்க்க முடியாதுள்ளது துரதிஸ்டவசமே.!
– நீங்கள் யார்? என்று ஒரு மலையக மகனையோ அல்லது மகளையோ கேட்டால்,
எங்களை மலையகத் தமிழர்கள் என்பர்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர் என்பர்
சிங்கள மொழியில் நாம் ‘வத்தே தெமழ.’
வடக்கு கிழக்கு மொழியில் நாம் ‘வடக்கத்தையான்’
எமக்கு ‘தோட்டக்காட்டான்’ என்ற பெயரும் உண்டு.
அன்று எமது வறுமை விலை போனது. அதனால் பல தொண்டர்களின் வாழ்வு வளமாகியது. இன்று எமது வாக்குகள் விலைபோகின்றன.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வாக்குகளை விற்று எமது மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் சுகபோகத்தில் திளைக்கின்றனர்.
முன்பு வேலை செய்து வயிறு கழுவ தோட்ட வேலை இருந்தது. இன்று அது பறிபோய்க் கொண்டிருக்கின்றது.
நாம் கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட காய்ச்சிகளாக மாற்றப்பட்டு நிச்சயமற்ற வாழ்க்கையுடன் வீதியில் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கொரனா அதனைத் தொடர்ந்து இன்றைய பொருளாதார நெருக்கடி எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.
கொரனாவும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.இவைகளில் இருந்து மீண்டெழ மற்றவர்களால் முடியும். இதற்கென கொஞ்சகாலம் எடுக்கலாம். ஆனால் நாம் அரசியல் அநாதைகள். எமக்கென யார் இருக்கின்றனர்.
எமது வாழ்க்கையே அன்றாடம் போராட்டமாகவே போய்க் கொண்டிருக்கின்றது.
எமது சந்ததியினர் தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடினர்.
சுதந்திர இலங்கை எம்மை அரசியல் அநாதைகளாக்கியது.
அரசியல் உரிமைகளுக்காக பிரஜா உரிமைக்காக எமது போராட்டம் தொடர்ந்தது.
1977இல் சௌமியமூர்த்தி தொண்டமானை நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதியாக அனுப்பினோம்.
பிரஜா உரிமைப் பிரச்சனைக்கு இறுதியாக 1988 இல் கொண்டுவரப்பட்ட நாடற்றோருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனால் நாம் இன ஒடுக்குமுறை மனித உரிமை மீறல் மட்டுமல்ல நாம் இன்றும் இரண்டாந்தரப் பிரஜைகளே.
எமது நிகழ்கால எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கின்றது.
இவ்வேளையில் ஜநாவில் நாம் பேசு பொருளாக வந்துள்ளோம். இது எமது விடியலை நோக்கிய பயணத்தின் முதல்படி என நினைக்கின்றோம்.
மலையக மக்களை ஜநா அறிக்கையாவது விழித்தெழ வைக்கட்டும் என்றே கூறுவர்.
மலையகத்தைப் பொருத்து மேலோட்டமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
- சுதந்திரத்துக்கு முந்தைய காலம்
- சுதந்திரத்துக்கு பிந்தைய காலம்
- சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம்
- சௌமிய மூர்த்தி தொண்டமானுக்குப் பிந்தைய காலம்.
மூன்று நான்கு மலையக தலைமுறையை தின்ற வரலாறு இது. இன்றும் அதே வரலாறுதான்.கொஞ்சம் மாற்றத்துடன் தொடர்கின்றது.
இப்போது இந்தச் சமுதாயம் சமத்துவத்திற்கும் கௌரவத்திற்காகவும் போராடி வருகின்றது. வாழ்க்கை நிலைமைகள் முன்னேறியிருந்தாலும் செம்மையான சமத்துவம் எனும் அந்தஸ்தினை இம்மக்கள் அனுபவிப்பதற்கு இன்னும் அதிக விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மிகவும் முக்கியமான முதல் விடயமாக மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடப்படவேண்டும் என்று The plight of Tamils of Indian origin in Sri Lanka என்ற தலைப்பில் ‘த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் வி.சூர்யநாராயணன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
மலையக மக்களின் பிரச்சனைகளை ஸ்தலத்தில் கண்டறிவதற்காக ஐ.நா. விசேட தூதுவரான டொமொயா ஒபொகடா 2021நவம்பர் 26 இற்கும் டிசம்பர் 3 இற்கும் இடையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த தூதுவர் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்தார். தான் கண்டறிந்த விடயங்களின் பூர்வாங்க அறிக்கையினைத் தூதுவர் 2021 நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதி அறிக்கையானதுதற்போது2022செப்டெம்பரில்ஐநாவில்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி;.
- மலையக மக்கள் என்றுமே வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இன்று பொருளாதார நெருக்கடி அவர்களை எழுந்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கத்தை செலுத்தியுள்ளமையை காண முடிகின்றது
- தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். தனிநபர் வருமானம் வாழ்க்கை நிலைமைகள் நீண்ட ஆயுள் கல்வி அடைவுகள் மற்றும் பெண்களின் நிலை – இவற்றைக் கணிப்பிட எந்த அளவுகோலையும் பிரயோகியுங்கள் – அவர்கள் ஏணியின் அடியிலேயே இருக்கின்றனர்.
- ஐ.நா. விசேட தூதுவர் பின்வருமாறு கோடிட்டுக்காட்டியுள்ளார்:
- நவீன அடிமை முறைகள் இனத்துவப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக 200 வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்களின் வம்சாவளியின் அடிப்படையில் பல்வேறு வடிவிலான பாகுபாடுகளுக்கு இன்றும் முகங்கொடுத்து வருகின்றனர்.’
- 2017ஆம் ஆண்டில் இலங்கை தேயிலைத் தொழிற்துறையின் 150ஆவது வருடப் பூர்த்தியினைக் கொண்டாடியது. பொருளாதாரத்தில் தேயிலைத் தொழிற்துறையின் வகிபாத்திரத்தினைக் கோடிட்டுக்காட்டுவதற்கும் துறையின் உற்பத்தியினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும் துறையினை எவ்வாறு நவீனமயப்படுத்துவது என்பது பற்றியும் அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- ஆனால் கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் மட்டுமே உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலைக் களிப்பினை வழங்கும் இரண்டு இலைகளையும் ஒரு கொழுந்தினையும் (கலாநிதி முல்க் ராஜ் ஆனந்தினால் எழுதப்பட்ட நாவல்) உற்பத்திசெய்பவர்கள் பற்றிய ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. தோட்ட உரிமையாளர்களினதும் தொழிலாளர்களினதும் மாறுபடும் வாழ்க்கைகள் கட்டாயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும் என்றும் வி.சூர்யநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் சகாப்தத்திற்கு பிற்பட்ட இன்றைய மலையக வரலாற்றுடன் தொடர்புபட்டவர்கள். இவர்களில் பலர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களும் உள்ளனர். தொண்டமன் அவர்கள் என்ன செய்தார் என்று உங்களில் பலர் கேள்வி எழப்பலாம்.
இலக்கின்றி மலையகத் தலைமைகள்.
நடேச ஜயர், மலையக காந்தி ராஜலிங்கம், வெள்ளையன், அஸீஸ்,தொண்டமான் இவ்வாறு பலர் அங்குலம் அங்குலமாக செதுக்கிய மலையகத்தில் இன்றைய தெழிற்சங்க அரசியல்வாதிகள் சுகமாக அமர்ந்து தொழிற்சங்க அரசியலை செய்கின்றீர்கள். மலையகம்குறித்த எதிர்காலப் பார்வை,பயணிக்க வேண்டிய இலக்கு என்பன நடேச ஜயர் ,இராஜலிங்கம், வெள்ளையன்,அஸீஸ் ,தொண்டமான் போன்றவர்களுக்கு இருந்தது.
மலையகம்குறித்த இன்றைய தொழிற்சங்க அரசியல் தலைவர்களின் இலக்கு என்ன? எதிர்காலப் பார்வை என்ன?
துரதிஸ்டவசமாக இன்றைய மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளிடம் மலையகம்குறித்த எதிர்காலச் சிந்தனை ,இலக்கு என்பன இன்றியே தெழிங்சங்க அரசியலை செய்கின்றனர்.
வாக்கு சேகரிக்கும் முகவர்கள்
‘கட்சித் தலைகள்’ பிரிந்து நின்று தேசியக் கட்சிகளில் போட்டியிடுவதை மலையகத்தில் பார்க்கலாம். சில சந்தர்ப்பங்களில் ஒரே கட்சியில் பிரிந்து நின்று தேசியக் கட்சிகளின் ஒரு சின்னத்தில் போட்டியிடுவதும் நடைபெறுகின்றது.
இவ்வாறு போட்டியிடுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாவது, அமைச்சர்களாவது தமது ‘ஆலவட்டங்களுக்கு’ உயர்பதவிகளைப் பெற்றுக் கொடுப்பது போன்றவைகளைத் தவிற இவர்களால் பெரிதாக சாதித்ததாக இல்லை.
உண்மையில் இவர்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ பிரிந்து நின்றோ போட்டியிட்டு மலையக வாக்குகளை தேசியக் கட்சிகளுக்கு வாரி வழங்கும் “முகவர்களாகவே “செயற்படுகின்றனர். இதற்கான கையூட்டே அமைச்சர் பதவிகள் மற்றும் தமது ‘ஆலவட்டங்களுக்கான’ உயர் பதவிகள்.
மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளிடம் சில கேள்விகள்..!
நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து நிற்கும் பெருந் தோட்டக் கம்பெனிகளை வழிக்குக் கொண்டுவர உங்களால் முடிந்ததா?
தோட்டத்தொழிலாளர்கள்அன்றாடம்காய்ச்சிகளாகமாற்றப்படுகின்றனர்.உங்களால் தடுத்து நிறுத்த முடிந்ததா?
இதனால் அவர்களுக்கான EPF மற்றும் சலுகைகள் மறுக்கப்படுகின்றனவே.
2015 ஆம் ஆண்டில் இருந்து பேசப்படும் 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாமற் போனதேன்?.
மலையகம் குறித்து பொது வேலைத்திட்டம் உள்ளதா?
மலையக மக்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் திட்டங்கள் உள்ளனவா?
தொழிற்சங்கங்களுக்குள் போட்டி ஏன். தொழிலாளர்களுக்காக ஒற்றுமைப்பட முடியாதா?
சந்தா இல்லாததால் பொது வேலைத்திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தற்போது பேசுகின்றன. உண்மைதானே?
தீப் பிடிக்கும் தோட்டக் குடியிருப்புகள். தொடர்ச்சியாக இது தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட தோட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிகின்றது.
எரிந்து நாசமாகியது நூற்றாண்டு கால பழமையான காலணித்துவ சின்னங்கள் மாத்திரமல்ல 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிறுக சிறுக சேர்த்த உடமைகளும் கஷ;டப்பட்டுத் தேடிவைத்த ஆவணங்களும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?
பாலங்கள் இன்றி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மக்கள்.
மண்சரிவு அபாயத்தில் இடம் பெயர்ந்தோர். மீரியபத்தை மக்களை நோக்கி வந்த உதவிகளுக்கு என்ன நடந்தது?
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 25 ஆயிரம் ஹெக்டர் தோட்டக் காணிகள் காடாக்கப்பட உள்ளன. இந்தத் தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களினதும் எதிர்காலம் கேள்விக் குறியாக நிற்கின்றது.
‘சிஸ்டம் சேன்ஜ்’பற்றி பேசும் தலைமைகள்
இன்னும் பேசலாம். ஆனால் நீங்களோ இலங்கையின் அரசியல் ‘சிஸ்டம் சேன்ஜ்’பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இது பற்றி பேசும் மலையக தொழிங்சங்க அரசியல்வாதிகளே இந்த மாற்றத்தால் மலையகத்தில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன என்று கூறுவீர்களா?
கடந்த 74 வருடங்களுக்கு மேல் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் வடக்குக் கிழக்கு மக்களே ‘சிஸ்டம் சேன்ஜ்’ தமக்கு ஒன்றும் கொண்டு வந்துவிடாது என ஒதுங்கி இருக்கும் போது நீங்கள் மலையக மக்களுக்கு இதன்மூலம் பெற்றுக் கொடுக்க முயல்வது என்ன?
ஆற்றைக் கடக்க முயன்ற தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளும் அள்ளுண்டு போனதை தெலைக்காட்சிகள் உங்கள் கண் முன் காட்டியபோது நீங்கள் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக இராஜாங்க அமைச்சர்களாக இருப்பது மக்கள் ஆற்றிலும் மண்சரிவிலும் அள்ளுண்டுபோவதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கா என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.
சில வேளைகளில் உங்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கான கதவுகளைத் திறப்பதாக ‘சிஸ்டம் சேன்ஜ்’ இருக்கலாம். பதுளை மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஒரு மலையக தொழிற்சங்க அரசியல்வாதி கூறிய வார்த்தை இது.
‘இப்பொழுது நான் ஒரு எம்பியாக உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கின்றேன் அடுத்த முறை நான் ஒரு அமைச்சராக உங்கள் முன் நிற்பேன்’ என்று கூறியதை இங்கு பதிவு செய்கின்றேன்.
மொத்தத்தில் மலையக தொழிற்சங்க வரலாற்றில் நடேச ஜயர் காலம் ஒரு சகாப்தம். வெள்ளையன் இராஜலிங்கம் காலம் அப்பழுக்கற்ற அரசியலின் சின்னம். சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் பலம் பலவீனம் இதற்கப்பால் ஒரு சகாப்தம்.’கிங் மேக்கர்’ அரசியலை உருவாக்கியவர்.
தங்கத்தை உரசலாம் வெற்றுக் கோதுகளை?
இந்த வரிசையில் இன்றைய மலையக தொழிங்சங்க அரசியலின் சாதனை என்ன? தங்கத்தை உரசிப் பார்த்து அறியலாம். துரதிஷ;டவசமாக உரசிப் பார்த்து அறியும் நிலையில் இல்லை. ஒன்றும் இல்லா ‘கோது’ என்பதை மக்கள் அறிவர்.
இதனை வெளிப்படையாக மக்கள் கூறுகின்றனர். தொலைக்காட்சிகளில் கோபக் கனல் கக்க’ மக்கள் மலையக அரசியல்வாதிகள் மீது கொப்பளிக்கும் வார்தiதைகளே இதற்குச் சான்று.’
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியல் ‘சிஸ்டம்’ மலையக மக்களை எவ்வாறு வைத்திருக்கின்றது என்பதை தோலுரித்துக் காட்டுவதே ஜநா அறிக்கை. இன்று தென்னிலங்கை கோரி நிற்கின்ற ‘அரகலயா சிஸ்டம் சேன்ஜ்சில்’; வடக்குக் கிழக்கு மக்கள் பற்றியோ முஸ்லிம் மக்கள்பற்றியோ பேசவில்லை. மலையக மக்களை ஆர்ப்பாட்டத்தில் இறக்கிய மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகளிடம் மலையக மக்கள்பற்றி ‘அரகலயா’ தமது நிகழ்ச்சி நிரலில் என்ன கூறி இருக்கின்றதென தெளிவுபடுத்த வேண்டும்.
ஆதற்காக ‘அரகலயா சிந்தனை’ தேவையில்லை என்பதல்ல அர்த்தம். இந்த சிந்தனைமூலம் தென்னிலங்கை தமக்கான அரசியல் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. ஜனநாயகத்தின் குறைந்தபட்ச இந்தக் கோரிக்கைக்கே இன்று பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு ‘அரகலயா போராட்டக்காரர்கள்’ பயங்கரவாத தடைச் சட்டத்தின்மூலம் வேட்டையாடப்படுகின்றனர்.
மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளே மலையக மக்களை வைத்து அரசியல் செய்து உங்களுக்காகவும் உங்களைச் சார்ந்தோருக்காகவும் ‘அறுவடையாக்கியது’ போதும். நீங்கள் மலையகத்திற்கு போதிக்கின்ற ‘சிஸ்டம் சேன்ஜில்’ ஊழல் மோசடி என்பனவும் முக்கிய அம்சமாக உள்ளது என்பதை உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.
உங்களின் நேர்மைக்கு உங்களின் மனச்சாட்சிமாத்திரமல்ல மக்களும் சாட்சியாக உள்ளனர்.
இன்றைய மலையகத் தலைமைகளே இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலை’ செய்ய வாருங்கள். உங்களால் மலையகத்திற்கென புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். அது உங்களில் ஏற்படுகின்ற மனமாற்றத்திலும் அர்ப்பணிப்பிலுமே தங்கியுள்ளது.
மலையகம் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கும் மலையக நலன் விரும்பிகளுக்கும் ஒரு வேண்டுகோள் !மலையகத்தை தலைமை ஏற்று வழி நடத்த தயாராகுங்கள். – நமது மலையகம்