மழை பாதுகாப்பு இன்சூரன்ஸ் ; விருந்தனரைக் கவரும் சிங்கப்பூர் ஹோட்டல்

88

 

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல், மழையால் விருந்தினர்களின் திட்டம் பாதிக்கப்பட்டால், ஒரு இரவு தங்குவதற்கான பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட வருடத்தில் பாதி நாட்கள் மழை பெய்துகொண்டே இருக்கும். இதனால் விடுமுறை நாள் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டும் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு அந்நாட்டில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று மாற்று யோசனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. லயன் சிட்டியில் அமைந்துள்ள இன்டர் கான்டினென்டல் சிங்கப்பூர் என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் தங்கள் விருந்தினர்களின் விடுமுறையை கெடுக்காமல் இருப்பதை உறுதிசெய்ய மழை பாதுகாப்பு இன்சூரன்ஸ் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆடம்பரப் பயணத்தில் அடுத்தது என்ன என்பதைப் பற்றி நண்பர்கள் குழுவுடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவர், நல்ல வானிலைக்கு உத்தரவாதம் இருந்தால் தான் அடுத்த பயணத்தைத் திட்டமிட முடியும் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

அதிலிருந்துதான் ‘ரெயின் ரெசிஸ்ட் ப்ளிஸ்’ என்ற இன்சூரன்ஸ் திட்டதைக் கொண்டுவந்தோம்” என்று ஹோட்டலின் பொது மேலாளர் ஆண்ட்ரியாஸ் க்ரேமர் சொல்கிறார்.

ஆனால், இந்த சலுகை சூட் அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த ஹோட்டலில் ஜூனியர் சூட் அறை ஒன்றின் ஓர் இரவுக்கான வாடகை 633 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000) முதல் தொடங்குகிறது.

பிரசிடெண்ட் சூட் அறைக்கு 3,349 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.2 லட்சம்) வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்தச் சலுகைக்குப் பெறுவதற்கு மற்றொரு நிபந்தனையும் உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நான்கு மணிநேர இடைவெளியில் 2 மணிநேரம் மழை பெய்தால் இந்தச் சலுகையைப் பெறலாம்.

உதாரணமாக மாலை 4:00 முதல் 5:30 மணி வரை (90 நிமிடங்கள்) மற்றும் மாலை 6:00 முதல் 6:30 மணி வரை (30 நிமிடங்கள்) தொடர்ந்து மழை பெய்தால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வவுச்சர் கிடைக்கும் என ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் முகமையால் வானிலை குறித்த தரவு வெளியிடப்பட்ட, ஏழு வேலை நாட்களுக்குள் வவுச்சர் வழங்கப்படும் என்றும் இன்டர் கான்டினென்டல் சிங்கப்பூர் ஹோட்டல் தெரிவித்துள்ளது.

வவுச்சரை வழங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

SHARE