மஹிந்தவின் பாதையில் குறுக்கிடும் சோதனைகள்!

366

 

முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றப் பிரவேசமானது ராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் தலைவலியாகவே இப்போது மாறியிருக்கிறது.
5742-mahinda-rajapaksa-anda-sarath-fonseka-fight-for-kurunegala648678705

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வெற்றி வீரனாகப் போற்றப்பட்ட முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மகிமையானது 2010 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் வீழ்ச்சியடைந்து போனது.

அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்று போட்டியிட்டது மட்டுமே சரத் பொன்சேகா இழைத்த தவறென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது அரசியல் எழுச்சியே அன்றைய அதல பாதாள வீழ்ச்சிக்கும் காரணமாகியது.

சரத் பொன்சேகா அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் மஹிந்த ராஜபக்ச மீது விசுவாசம் காண்பித்திருப்பாரேயானால் அமைச்சர் பதவி வரை அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கக் கூடியவர் மஹிந்த ராஜபக்ச.

2010 தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியுற்றது எவ்வா​றென்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. சரத்

பொன்சேகாவுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவருக்குமே எதிர்பாராததொரு தேர்தல் முடிவு இது.  ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியானதும் சரத் பொன்சேகாவின் தலைவிதியே தலைகீழாகிப் போனது.

உலக நாடுகளில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களுக்கு உச்சக்கட்ட உதாரணமாக பொன்சேகாவுக்கு நடந்த கொடுமைகளை இங்கு கூற முடியும். அவர் பல்வேறு வழக்குகளிலும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பதவி, பதக்கங்கள் பறிக்கப்பட்டு சாதாரண குடிமகனிலும் பார்க்க கேவலப்படுத்தப்பட்டார்.

இலங்கையில் ராஜபக்சக்களுக்கு நிகராக அரசியலில் வெறெவரும் தோற்றம் பெற்று விடக்கூடாதென்ற நோக்கத்துக்காகவே பொன்சேகாவுக்குப் பாடம் புகட்டப்பட்டதென்பதைப் புரிந்து கொள்வது அன்றைய வேளையில் அவ்வளவு கடினமாக இருக்கவில்​லை.

சரத் பொன்சேகா உண்மையிலேயே நெஞ்சுரம் மிக்கவர். ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பின், அன்றைய வேளையிலேயே அவர் அஸ்தமனமாகிப் போயிருப்பார். உண்மையானதொரு இராணுவ வீரனுக்கு இருக்க வேண்டிய ஆத்ம பலத்தை அவர் கொண்டிருந்தார். சாம்பலில் இருந்து உயிர் பெற்ற பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டெழுந்த பொன்சேகா பல மடங்கு பலம் பெற்றவராகிப் போனார்.

ஆட்சி மாற்றத்தையடுத்து அனைத்துமே காலடி தேடி வந்தன. இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்ற கௌரவத்தைப் பெற்றதுடன் மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார் அவர்.

சரத் பொன்சேகா எப்போதுமே வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவர். யுத்த கள அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள் குறித்தெல்லாம் அவரிடம் ஒளிவுமறைவு பெரும்பாலும் இருப்பதில்லை.

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது பிரசார மேடைகளில் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசியதே ராஜபக்ச குடும்பத்தினரை சீற்றம் கொள்ள வைத்தது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஆட்சியாளர்களென்ற வகையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினர் கொண்டிருந்த பெருமையை ஆட்டம் காண வைத்ததும் பொன்சேகாவின் வெளிப்படையான பேச்சுகள்தான்.

முன்னாள் இராணுவத் தளபதியும் இன்றைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா இப்போதெல்லாம் பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி செய்தியாளர் சந்திப்புகளிலும் மிகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் மரணம், கோத்தபாயவின் அமெரிக்க வாழ்க்கை என்றெல்லாம் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு வருகிறார்

அவர். வெறுமனே எம்.பி பதவியைக் கொண்டுள்ள ஒருவர் எவ்வாறு நாட்டின் தலைமைப் பதவியைக் கோர முடியும் என்று நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ச தொடர்பாக கேள்வி எழுப்பி பரபரப்பை உண்டாக்கினார் பொன்சேகா. அச்செய்தியை ஊடகங்கள் முக்கியத்துவமளித்து வெளியிட்டன.

தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வெற்றியின் நாயகர்கள் தாங்களே என்று உரிமை கொண்டாடி செல்வாக்கு அலையைப் பெருக்கிக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாகவுள்ள ராஜபக்ச குடும்பத்தினரைப் பொறுத்த வரை, பொன்சேகாவின் வார்த்தைகள் பின்னடைவை ஏற்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.

யுத்தம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலப் பகுதியில், ராஜபக்ச சகோதரர்கள் எவ்வாறு யுத்த வெற்றிக்குப் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டனரென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது வெளியிடுகின்ற தகவல்கள் நிச்சயம் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாமல் விடப் போவதில்லை.

அதேசமயம் யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவத் தளபதியென்ற வகையில் சிங்கள மக்கள் மத்தியில் சரத் பொன்சேகா இன்னும் கூட கீர்த்தி மிக்கவராகவே விளங்குகிறாரென்பதையும் மறந்து விட முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் செல்வாக்கைச் சீர்படுத்துவதில் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அடுத்தடுத்து தடங்கல்களையும் அதிர்ச்சிகளையுமே சந்திக்க வேண்டியிருக்கிறது.

SHARE