எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு அதற்கான சகல ஏற்பாடுகளும் நடத்தப்பட்டுவருகின்ற அதேநேரம், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று இறுதிமுடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதில் இழுபறிகள் தோன்றியுள்ளன. இதற்கு முன்னர் ஆட்சியாளர்களாகவிருந்தவர்களை பார்க்குமிடத்து டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ரணசிங்க பிரேமதாஸ, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்பொழுது இருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ இவ்வாட்சியாளர்கள் அனைவருமே தமிழ் இனத்தினை ஏமாற்றியே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த வரலாறுகளே இதுவரை காணப்படுகின்றது
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டுமே அற்றுப்போயுள்ள நிலையில் இருக்கக்கூடிய கோவணத்தையாவது தக்கவைத்துக்கொள்வதற்கு அதாவது தமிழினத்தினை காப்பாற்றுவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், அதிலுள்ள தமிழரசுக்கட்சியும் சரியான முடிவுகளை எடுப்பது சிறந்ததொன்றாகும். காலத்திற்குக் காலம் அரசியல் மாற்றம் பெற்றுக்கொண்டே செல்ல, சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கு துரோகத்தினை ஏற்படுத்திய வரலாறுகளே இதுவரை காலமும் இருந்துவந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க போன்றோர் இருந்த காலப்பகுதியில் இனக்கலவரத்தினை தோற்றுவித்திருந்தனர்.
விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுவதாகக் கூறி இந்திய அரசுடன் இணைந்து சதி வேலைகளில் ஈடுபட்டார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அதன்பின்னர் ஆட்சிபீடத்திற்கு வந்த ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குவது போன்றும், தமிழினத்தினைக் காப்பாற்றுவது போன்றும் நாடகமாடி விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை அழித்தொழிப்பதற்கான திட்டங்களை வகுத்தார். அதன் காரணமாகவே விடுதலைப்புலிகளினால் ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் கொலை செய்யப்பட்டார்.
அது மட்டுமல்லாது இவர்களோடு ஒத்து ஊதுகுழல் பாடிய இயக்கங்களும் உள்ளடக்கப்படுகின்றன. ஆனால் இவ்வியக்கங்கள் அனைத்தும் தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் காப்பந்து அரசாங்கம் தமிழினத்திற்கு எதிராக சதித்திட்டங்களைத் தீட்டியது. சந்திரிக்காவினுடைய காலகட்டத்தில், விடுதலைப்புலிகள் தமிழினத்தின் வெற்றியை நூற்றுக்கு 50 வீதமாக சமப்படுத்திக்கொண்டிருந்த போது, தமிழீழம் தமிழ் மக்களுடைய கையில் என்ற நிலையில் இருந்தபோது அமெரிக்காவுடன் இணைந்து சதித்திட்டங்களை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளையும், தமிழினத்தினையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சந்திரிக்காவின் அரசு தீவிரம் காட்டியது.
ஓஸ்லோ பேச்சுவார்த்தைகள் என்று ஆரம்பித்து டோக்கியோ போன்ற பல நாடுகளிலும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் நிறைவடைந்தன. இதில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கள்ளத்தனம், குள்ளநரி விளையாட்டுக்களும் உள்ளடக்கப்படுகின்றன. தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் சந்திரிக்கரசு மஹிந்தவிடம் ஆட்சியை கைமாற்றிக்கொடுத்தது. இதனுடைய விளைவுகளே தற்பொழுது அரங்கேறிவருகின்றன. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவினைப் பொறுத்தவரையில் முன்னைய அரசாங்கங்களைவிட கடன் வாங்கியோ வாங்காமலோ தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆனால் இதற்கு முந்தைய அரசாங்கங்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செயற்பட்டது போன்று செயற்படவில்லை.
உதவிகளை வழங்கிய அதே மஹிந்த ராஜபக்ஷ 2009ம் ஆண்டு தமிழினச் சுத்திகரிப்பினை மேற்கொண்டார். அது மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், காhணமற்போயுமுள்ளனர். இதனை இல்லை என்று மஹிந்த அவர்களும் தரப்பினரும் மாற்றிவிடமுடியாது. அவ்வாறு தான் நடந்துகொள்ளவிலலை என அரச தரப்பு கூறிவருகின்றபொழுதிலும், மனித உரிமை ஆணையகங்கள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நாடுகள் சபை போன்றன மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு இனச் சுத்திகரிப்பினையே மேற்கொண்டார் என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துவருகின்றன. அதற்கு உறுதுணையாக சனல் 4 தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு இருகின்ற காலகட்டத்தில் மாகாணசபையினூடாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திகளை மேற்கொண்டுவரும் அதேநேரம் அமைச்சினூடாகவும் பல்வேறு சலுகைகளையும் அபிவிருத்திகளையும் வழங்கிவருகின்றார்.
காரணம் அவருடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே. அதனைவிடுத்து தமிழ் மக்களின் மீது அக்கறையுடன் செயற்படுகிறார் என நாம் விளங்கிக்கொண்டோமானால் அது தவறாகும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினைப் பொறுத்தவரையிலும தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை கிடப்பில் போட்டுவிட்டு அறவழியில் போராட்டங்களை ஆரம்பித்து, வடகிழக்கில் சுபீட்சமானதொரு தீர்வு கிடைக்கவேண்டுமென்று தற்பொழுது கூறிவருகின்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்துவந்தனர். தற்பொழுது அவர்களுடைய பரிணாமங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறுவதை தமிழ் மக்கள் நடைமுறைப்படுத்த தயாராகவிருக்கின்ற அதேநேரம், பிழையான நடவடிக்கைகளின் மூலம் தமிழினத்தினை மீண்டுமொரு வன்முறை கலாசாரத்திற்குள் இட்டுச்செல்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
அதேநேரம் இந்தியாவின் ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும நம்பி ஏமாற்றமடைந்த வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டும். விக்னேஸ்வரனோ அல்லது ஏனைய அரசியல்வாதிகளோ கூறுவதைப்போன்று இந்தியாவினால் தான் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறுவது இந்திய அரசினை பப்பா மரத்தில் ஏற்றும் ஒரு செயலாகும். இது தவிர இந்திய அரசினால் தமிழினத்திற்கு எந்தவித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் காப்பாற்றத் தவறிய இந்தியரசு இனித்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தரப்போகின்றதா? என்பதனை சிந்தித்துப் பார்க்கவேண்டும். தலைவர் பிரபாகரன் கூறியதைப்போன்று ஆயுதப்போராட்டத்தினால் தான் போராடி ஒரு நிலையில் நின்றுகொண்டு, எமது தமிழர் தாயகத்தினை அரசிடம் கேட்கவேண்டுமே தவிர அவைகளோடு ஒத்துப்பாடி கைகோர்த்துச்சென்றால் மீண்டும் அவர்கள் எம்மை காலால் மிதிப்பார்கள். ஆயுதப்போராட்டம் இல்லையென்றாலும் அஹிம்சை வழியில் போராடியாவது வடகிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களை வென்றெடுக்கவேண்டும்.
தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் எம் தமிழினத்திற்கு செய்துவந்தது வரலாற்றுத்துரோகமே. சரத் பொன்சேகோ மட்டும் நல்லவரல்ல. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நூற்றுக்கு 85வீதமான சமர்க்களங்களில் போராடியவர் மட்டுமல்லாது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலும் அவருடைய அணியினர் ஈடுபட்டனர். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல இராணுவ வீரர்கள் பதவி விலக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்ரன் பாலசிங்கம் கூட தற்போதைய அரசாங்கம் தொடர்பிலும், ரணில் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறிருக்கும் என்பது பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அது எவ்வாறெனில் ரணில் ஒரு குள்ளநரி. அதனை விட மஹிந்த மற்றுமொரு குள்ளநரி. இருவருமே தமிழினத்திற்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. அதற்கு பௌத்த சிங்கள இனவாதிகளும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். மாறாக வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் உதவியுடன் வடகிழக்கினை பிரித்தெடுத்தல் சாத்தியப்படுமே தவிர, ருNP அரசிற்கு வாக்களித்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். அதாவது அண்ணன் வந்தாலும் தம்பி வந்தாலும் ஒன்று என்ற பழமொழிக்கேற்ப இவை அமையப்பெறுகின்றன.
– இரணியன் –