மஹேல ஜெயவர்தனே பற்றிய ஒரு கண்ணோட்டம்

644

இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரராக விளங்கிய மஹேல ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ளார்.

இது மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

தெனகமகே பிரபாத் மகேல ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன 1977ம் ஆண்டு மே 27ம் திகதி இலங்கை, கொழும்புவில் பிறந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான இவர் அணியில் சிறந்த மட்டையாளராக இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் 2006 ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபையால் ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் சராசரியாக 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் சராசரியாக 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

கிரிக்கெட்டில் கால்பதிப்பு

மஹேல ஜெயவர்தனே டெஸ்ட் போட்டியில் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.

1998ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அன்று ஜிம்பாப்வே – இலங்கை இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும், 20 ஓவர் போட்டியிலும், பின்னர் 2004ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் திகதி அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப் – சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும் விளையாடினார்.

வெற்றிப்பயணம்

ஏப்ரல் 2006ல் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இவர் இலங்கை அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்றிருந்தார். இங்கிலாந்துக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியை திறம்பட வழிநடத்தி 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார்.

மேலும் இத்தொடரின் இரடண்டாவது போட்டியில் 66 ஓட்டங்களும், மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்களும், நான்காவது போட்டியில் 100 ஓட்டங்களும் குவித்து அசத்தினார்.

இத்தொடரின் 5 வது போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 321 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 324 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது இவரது தலைமைக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும்.

டெஸ்ட் போட்டிகளிலும் இவரது சாதனைக்கு அளவில்லை எனலாம். இவர் முதன்முதலாக இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார்.

இதற்கடுத்து நியுசிலாந்திற்க்கெதிரான தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு அரை சதங்களும், இரண்டாவது டெஸ்டில் 167 ஓட்டங்களும் குவித்தார்.

மேலும் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இதே அணிக்கெதிராக 242 ஓட்டங்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

2006ல் தென்ஆப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சங்ககாராவுடன் இணைந்து புதிய சாதனையைப் படைத்தார். சங்ககாரா 287 ஓட்டங்கள் அடிக்க, இவர் 374 ஓட்டங்கள் குவித்தார்.

ஒரு நாள் போட்டியிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி இவர் ஒரு திறமையான துடுப்பாட்டக்காரர் என்பது மட்டுமின்றி, சிறப்பான அணித்தலைவர் என்ற திறமையையும் தன்வசம் வைத்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடினார்.

மேலும் இவரது தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

தலைமைப் பொறுப்பும் எழுந்த சர்ச்சைகளும்

தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலில் இருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும் கருதப்படக்கூடிய அர்ஜுன ரணதுங்கவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைவராக மஹேல ஜெயவர்த்தன இருந்தார்.

இலங்கையின் மிகக் கடினமான காலகட்டத்தில் தலைமை தாங்கிய மிகச் சிறந்த தலைவராக மஹேலவை கருதலாம். மஹேல இலங்கை அணியில் இளவயது வீரராக அணிக்குள் வரும்போதே எதிர்கால அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு இவர் மீது வைக்கப்பட்டிருந்தது.

இளம் வயதிலேயே அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் துடுப்பாட்டம் சற்றுத் தளம்ப ஆரம்பிக்க, உப தலைமைப் பதவி பாரத்தை நீக்கிக் கொண்டார்.

இலங்கையில் வைத்து பாகிஸ்தானிடம் தோல்வியடந்ததன் மூலம் எழுந்த விமர்சனங்களுக்கு மஹேல பதிலளிக்க எடுத்துக்கொண்ட களம், இங்கிலாந்து. முதலாவது போட்டியில் இன்னிங்ஸினால் தோல்வியடைய இருந்த இலங்கை அணியைத் தனியொருவராக மற்றும் தலைவராக நின்று காப்பாற்றி வெற்றி தோல்வியற்ற நிலையைப் பெற்றுக் கொடுத்தார் மஹேல.

இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணி தோற்றாலும், மூன்றாவது டெஸ்ட்டில் வென்று இலங்கை தொடரை சமப்படுத்திப் பெருமையோடு நாடு திரும்பி இலங்கை அணியின் புதிய பொற்காலத்தை உருவாக்கும் ஒருவராக மஹேல திகழ்ந்தார்.

2009இல் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அணி, முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணியை வெற்றி கொண்ட நேரத்தில் மஹேல முதல் தடவையாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் தலைமைப் பதவியைக் காவுகொள்ளும் அளவுக்கு அவை எவையுமே இருக்கவில்லை.

ஆனாலும் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி ஓர் ஆறுதல் வெற்றியைப் பெற்ற பின்னர் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் மஹேல ஜெயவர்த்தன தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து புதிய தலைவராக குமார் சங்கக்கார பொறுப்பெடுத்த பின்னர் ஒரு சிறந்த வீரராக, ஆலோசனைகளில் மஹேலவின் பங்களிப்பு, புதிய தலைவருக்கு மிகப் பயனுடையதாக அமைந்ததோடு துடுப்பாட்ட வீரராக மேலும் பரிணமித்தது.

அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதை மஹேல நிரூபித்த மற்றொரு சந்தர்ப்பம் 2011 உலகக்கிண்ணம். சங்கக்காரவைப் பலப்படுத்த மஹேல அனுபவம் குறைவான இலங்கை அணியின் உபதலைவராகவும் பணியாற்ற சம்மதித்தார்.

அதற்குப் பின் டில்ஷானின் தலைமை அணியில் நுழைய, உறுதியற்ற அணியாக வெற்றிகள் வறண்டு போயின. அதன் பின்னர் டில்ஷான் பதவி விலகிக் கொண்டார்.

தலைமைத்துவத்துக்கான நீண்ட காலத் தேடலுக்கு முன்னதாக இலங்கை அணியின் புதிய ஒரு தலைவரை இனம் காணவும் மீண்டும் இலங்கைக்குக் கிடைத்த தீர்வு மஹேல மட்டும் தான்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் பெற்ற வெற்றிகளும், இறுதிவரை இலங்கை அணி வந்ததும் மஹேலவின் தலைமையில் மீண்டும் இலங்கை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையை அளித்தது.

தான் மீண்டும் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே இங்கிலாந்துக்கெதிராக 180 ஓட்டங்களை எடுத்து இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின் தொடர்ந்த சர்ச்சைகளும், பிரச்சனைகளும் டி20 போட்டிகளில் இருந்து அவரை ஓய்வு பெறச் செய்தது.

2014ஆம் வருடத்திற்க்கான டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி அவரின் கைகளில் கிண்ணத்தைக் கொடுத்து அவர் பெருமைப்படுத்தியது. அத்துடன் அவர் அரங்கத்தில் இருந்து விடைபெற்றார்.

சாதனைகள்

கிரிக்கெட் உலகில் சிறந்த வீரராக வலம் வந்த மஹேல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை தாண்டி சாதனை படைத்துள்ளார். தலைமைப் பொறுப்பில் இவர் ஆற்றிய பங்குகள் மிகச் சிறப்பானவை.

சிறந்த ஆலோசனைகள் மூலம் இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த இவரின் வெற்றிகளும் சாதனைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

SHARE