மாத்தளை நகரில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான திராவகம் நிரப்பப்பட்ட சில கொள்கலன்கள், ஒரே இலக்கங்களைக் கொண்ட மூன்று தேசிய அடையாள அட்டைகள், நான்கு வாகன இலக்கத் தகடுகள் என்பவற்றைக் கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் இரு வர்த்தகர்களையும் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட திராவகங்கள் அடங்கிய கொள்கலன்களில் எச்சரிக்கை சுலோகங்கள் காணப்படுவ தாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு இராணுவத்தினர் மாத்தளை நகரில் வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள், வீடுகள் உட்பட அனைத்து இடங்களையும் திடீர் சோதனைக்குட்படுத்தினர்.
அதன்போதே இரு வர்த்தகர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தளைப் பொலிஸாரிடம் கையளித்தனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள திராவகங்கள் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் என சந்தேகித்து, அவற்றை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் மாத்தளை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவிருந்ததாகவும் தெரிவித்தனர்.