மாமனிதர் சிவராம் : ஊடகத்துறையில் ஒரு வரலாற்று நாயகன்-சிறப்புப்பார்வை
“தராக்கி” என அழைக்கப்படும் மாமனிதர் சிவராம் ஒரு தமிழ் ஊடகவியலாளர். இப்படித் தான் பலரும் இவரை அறிந்து வைத்துள்ளார்கள்.ஏன் ஈழத்தமிழ் மக்கள் பலரும் கூட அவ்வாறு தான் அறிந்துள்ளார்கள். ஆனால் உண்மையில் சிவராம் என்பவர் யார் நீண்ட நெடிய தமிழ் மக்களின் வரலாற்றில்
தற்கால தமிழ் மனிதனாக அவர் செலுத்திய உழைப்பு என்ன என்பதை தற்போதைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது எமது முக்கிய பணியாகிறது.
விடுதலைப் போராளியாக..!
இலங்கைத் தீவில் நிலவி வந்த தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக 1972 ஆம் ஆண்டே தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோற்றம் பெற்றது.சிவராம் தன்னை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில்(PLOTE) தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டார். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களை பலி வாங்கியது.2 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானார்கள்.
இது கறுப்பு ஜூலை கலவரம் எனவும் வரலாற்றில் அழைக்கப்படுகிறது. சிங்கள பேரினவாதத்தின் தாங்க முடியாத அடக்குமுறைகளால் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க முடிவு செய்த தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக விடுதலை இயக்கங்களில் இணைந்து போராட துவங்கினர்.
சிவராம் பின்னர் புளொட் அமைப்பின் தேர்தல் அணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக புளொட் அமைப்பில் இருந்து வெளியேறினார்.
“தராக்கி”
அமைப்பில் இருந்து வெளியேறிய சிவராம் அவர்கள் ”சர்வதேச செய்திச் சேவை” நிறுவனத்தில் செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.அதன் பிறகு பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய சிவராம் ஒரு சிறந்த அரசியல் – இராணுவ ஆய்வாளரும் ஆவார்.பல்வேறு இலங்கை நாளிதழ்களில் அவருடைய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தன.ஆரம்பிக்க காலங்களில் “தராக்கி” எனும் புனை பெயர் தாங்கி தான் அவரது கட்டுரைகள் வெளியாகின.அதனால் தான் அவர் “தராக்கி” சிவராம் என அழைக்கப்படுகிறார். தாரகா என்றால் நட்சத்திரம் என்று பொருள்.தாரகா எனும் பெயரைத் தழுவியது தான் “தராக்கி” எனும் அவரின் புனை பெயர்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆழமாக நேசித்தவர் மாமனிதர் சிவராம்.ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தியவர்.
விடுதலை இயக்கத்தை சிதைத்த பீகான் திட்டம் (Project Beacon)
ஈழத்தமிழரின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் நோக்கோடு அமெரிக்கா-இந்தியா-சிங்களம் மற்றும் மேற்குலக நாடுகளால் வரையப்பட்ட பீகான் திட்டத்தை அம்பலப்படுத்தியவர் மாமனிதர் சிவராம் ஆவார்.இதை விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் யோகி அவர்கள் 2008 ஆம் ஆண்டு நிகழ்த்திய “பொங்கு தமிழ்” உரையிலும் உலகத்த தமிழர்களுக்கு இச்சதித் திட்டத்தைப் பற்றி வெளிப்படுத்தினார்.
சர்வதேசத்தின் சதியை முன்னுணர்ந்த சிவராம்” புலிகளை இலங்கை இந்திய அரசுகளால் மட்டுமல்ல யாராலும் சண்டையிட்டு அழிக்க முடியாது. ஆனால் அனைவரினதும் பின்கதவு கூட்டு சதியும் சூழ்ச்சியும் துரோகமும் அவர்களை அழிக்கலாம்” என்று கூறினார்.
சிவராமின் பார்வையில் தமிழகம்
சிவராம் அவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் குறித்தும் நன்கு பரிட்சயம் இருந்தது.அவரின் தமிழ் இராணுவவியல்(On Tamil militarism) எனும் ஆங்கில ஆய்வுத் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்கள் குறித்தான சரியான மதிப்பீடுகளையும் அவரின் கட்டுரைகளில் காணலாம். விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் தங்களுக்கான உண்மையான நண்பர்களாக தமிழ்நாடு விடுதலைப் படையையும் புரட்சிகர மா-லெ இயக்கத்தையுமே நம்ப முடியும் என்று 1989 ஆம் ஆண்டே தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவராம். 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ இனப்படுகொலையின் போது சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் துரோகத்தை கண்ட புலிகள் அதை உணர்ந்திருப்பர்.
மாமனிதரான சிவராம்!
சிங்கள புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட சிவராம் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாகத் தான் மீட்கப்பட்டார்.இவரின் தேசியப் பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஈழ தேசத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” பட்டத்தை வழங்கி பெருமைப் படுத்தினார்.பல்வேறு சர்வதேச ஊடகவியலாளர்களின் அமைப்புகளும் சிவராமின் படுகொலைக்கு தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.
“தமிழ்த்தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்த்து அதை சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிடக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பவாதிகளின் நுனி நாவில் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராக அது இருக்குமாயின் – எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படபோகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாததாகிவிடும்”
என்னும் இந்த மாமனிதனின் எச்சரிக்கையை உள்வாங்கி செயல்பட்டால் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களும் – ஈழத்தமிழர்களும் விடுதலைப் பாதையில் நடைபோட முடியும்.