பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கைக் காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தாண்டி, பூமியின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே! தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்குக் கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்துத் தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக வீழ்படிவுகளைக் கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும் உண்டு. உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் நதிதான், இயற்கையின் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கும் மற்ற குத்தகைதாரர்களை விட வேகமாகவும் வீரியமாகவும் செயல்படக் கூடியது. போட்டு வைத்த திட்டத்தை நிறைவேற்றாமல் இதற்கு தூக்கமே வராது. எல்லா நதிகளுமே தன் சக்திக்கேற்ப பள்ளத்தாக்கு தோண்டுகின்றன. அந்தப் பள்ளத்தாக்குக்கு உள்ளே அரிப்பதும், சேர்ப்பதுமாக, ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. நாம் இப்போது நதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் இந்தக் கேள்விக்கான பதில் எதிர்காலத்தில் மாற்றமடையக் கூடும். |