ஊனால் ஆகிய இந்த உடம்பு மதிப்பு மிக்கதாகவும், மகத்துவம் பொருந்தியதாகவும் உள்ளது. மகத்தான பல உறுப்புக்கள் உடல் என்கிற கட்டமைப்புக்குள் அடங்குகின்றது. அவ்வாறான எம் உடலில் ஒரு சில உறுப்புக்கள் குறைபாடுகள் பொருந்தியதாக விளங்குகின்றது. அவற்றையே ஊனம் என்று கூறுகின்றனர். பிறப்பாலேயோ, விபத்துக்களாலேயோ, நோய் நொடிகளாலோ, யுத்த சூழ்நிலைகள் போன்ற காரணங் களால் ஊனமாக்கப்படுதல் ஏற்படுகின்றது.
பிறப்பு, இறப்பு, நிறம், அழகு, தாய், தந்தை என்பவை நாம் தீர்மானிப்பவை அல்ல. அது உலக நியதிப்படி நிகழ்ந்து விடுகின்றது. அதேபோல் இந்த ஊனமும் யார் வேண்டியும் வருவதில்லை. உலக நியதி, சந்தர்ப்பம், சூழ்நிலைகள் இவற்றை நடத்திவிடுகின்றன. உடம்பிலுள்ள குறைகள் எல்லாம் ஊனமில்லை என்று கவிஞர்கள் பாடுகின்றனர். ஆம் ஊனம் என்பது வெறுமனே உடல் உறுப்பு சார்ந்த பிரச்சினையாகும்.
ஆனால் இவர்களை பலர் மாற்றுத் திறனாளிகளாக, சமூகத்தில் ஒரு வராக பார்ப்பதில்லை. இதனால் தான் மாற்றுத்திறனாளிகள் நாம் வாழும் சமூகத்தில் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. இந்தக் கண்ணோட்டம் தான் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் குறைவாகக் காணப் படுகின்றமைக்கான காரணம். பாதுகாப்பு வலுவூட்டல் போன்றவற்றின் விழிப்புலன் நகர்தல், செவிப்புலன், புரிந்து கொள்ளும் ஆற்றல், பேச்சு, உளம் சார் விடயம் என்பன இழப்பை கருத்தில் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக இலங்கையிலுள்ள அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகுமுறை வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார உபகரணங்கள் (உதவிக் கருவிகள்) இல்லாமை போன்ற பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுதல் அல்லது ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக் கப்படுகின்றார்கள். இலங்கையில் 1.6 மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளாக காணப்படுவதாகவும், இது மொத்த சனத்தொகையில் 7.9 விகிதம் என்றும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்படுகின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்படுவதாவது மாற்றுத் திறனாளிக்கு அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதாரங்களை வழங்கி பொருளாதார ரீதியில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் மதிப்பு பெற்று, அவர்களையும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். புள்ளி விபரத்திணைக்களத்தின் தக வலின் படி ஒவ்வொரு 1000 ஆண்களின் 77 ஆண்கள் மாற்றுத் திறனாளிகளாகவும், 1000 பெண்களில் 96 பெண்கள் மாற்றுத் திறனாளிகளாகவும் காணப்படுவதாக அத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள மொத்த மாற்றுத் திறனாளிகளில்,
996,936 – விழிப்புனர்வற்றோர். (பார்வை குறைபாட்டாளர்கள்)
734,213 – கால்கள் ஊன மானவர்கள்
389,077 – செவிப்புலனற்றோர்.
343,689 – உளவளப்பிரச்சினை உள்ளவர்கள்,
197,575 – சுய பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் உள்ளனர். இலங்கையில் காணப்படும் 1.6 மில்லியன் மாற்றுத் திறனாளி களில் 43% ஆண்களாகவும், 57% பெண்களாகவும் காணப் படுகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற நீண்ட கால யுத்தத்தின் பின்னர் இலங்கையானது சமூக பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அரசினால் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் தமது அவய வங்களை இழந்து, சித்திரவதை களுக்குள்ளாகி மாற்றுத் திறனாளிகளை செயற்கை யாக உருவாக்கிய அரசு இன்று அவர்களை நிர்க்கதி யாக்கியுள்ளது. யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் பாரிய மனித வளம் அழிக்கப்பட்டமையால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளனர்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவர்களுக்காக சாய்தளம் வசதியாக அமைக்கப்பட்டு வருவதை காண முடிகிறது. ஆனால் இலங்கையில் பொது சேவை மையங்களில் பொது கட்டடத்தில் சாய்தள அமைப்பு இன்மையால் சக்கர நாட்காலி பயன்படுத்துபவர்கள் தங்களது தேவையை தாங்கள் நிறைவு செய்துகொள்ள முடியாமல், தமது தேவையை நிறைவு செய்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து இன்னொருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலை காணப்படுவதால் இது உள ரீதியான பிரச்சினைகளையும் உரு வாக்குகின்றது.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசனம் ஒதுக்கப்பட்டபோதிலும் அதனை அனுபவிக்கின்ற வகையில் அவைகள் வழங்கப்படவில்லை. அறிவுறுத்தல்களை ஏனைய வர்களோ நடத்துனர்களோ பின்பற்றுவதில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதேவேளை சக்கர நாற்காலிக்கும் பணம் கொடுக்கும் நிலை காணப்படுகின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளை பொறுத்தவரையில் இவர்க ளுக்கான சகல வசதிகளையும் அந் நாடுகள் செயற்படுத்துகின்றன. 1992 முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3ம் திகதி மாற்றுத்திறனாளி தினம் சிறப்பிக்கப்படுகிறது.
இவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1982ம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி பிறந்தவர். இவர் பிறவியிலேயே டெட்ரா-அமலியா சின்டரோம் என்னும் நோயால் இரு கைகளும் இரு கால்களும் இல்லாதவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளானவர். பல தடைவை தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் மரணம் கூட அவரை அரவணைக்க மறுத்தது. பின்னாளில் இவர் தன்னுடைய சோதனைகளை சாதனையாக்கினார். அதேவேளை இவர் தன்னுடைய 16 வயதில் லைப் வித் அவுட் லிமிட்ஸ் (Life with out) என்ற புத்தகத்தை வெளியிட்டார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 நாடுகளில் 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களுடன் உரை யாடி உள்ளார். உலகிலேயே தலைசிறந்த பேச்சாளராக விளங்குகின்றார். பின்னாளில் இவ் உலகிற்கு இன்னும் பல நூல்களை பிரசவித்தார். சிகரத்தில் வாழும் மிகப் பெரிய மனிதனுக்கு ஒரு அறிமுகம் தேவையில்லை.அவர் தான் நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிக் என்று அறியப்படுபவர்.
இவரைப்போல உலகில் பிரபல்யம் வாய்ந்தவர்களில் பலர் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றார்கள் அல்லது மாற்று திறனாளிகள் வேதனைகளை வென்று சாதனையாளர்களாக மாறியிருக்கின்றார்களா? என்று தெரியவில்லை. Muniba Mazari, Stephen Hawking இவர்களும் சாதனையாளர்கள் பட்டியலில் அடங்குகின்றனர். இறைவன் சிலரை எந்த அங்கவீனமும் இல்லாமல் படைக்கின்றான். சிலர் இயற்கையாக, செயற்கையாக அங்கவீனமாகின்றனர். இருப் பினும் அவ்வாறானவர்களிடத்தில் ஆற்றல், ஆளுமைகள் மறைந்து காணப்படுகின்றது. அவ்வாறு காணப்படும் ஆற்றல் கண்டு வலுப்படுத்தப்படுகின்ற பொழுது அவர்கள் சாதனையாளர்களாக, வெற்றியாளர்களாக சமூக நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.
மாறாக வாழும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் போது, அவர்களின் உரி மைகள் மறுக்கப்படும் போது, அவர்களை சமூக நீரோட்டத்தில் இணைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படாத போது அவர்களுக்குள் உறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த முடியாது. வெல்ல முடியாது. ஒதுங்கி ஓரமாக வாழும் நிலை உருவாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையும் கூட இவர்கள் பல்வேறு பிரச்சினை களைச் சுமந்தவர்களாக நம் மத்தியில் வாழ்கின்றனர்.
இந்த உலகத்தில் அவர்களும் வாழப் பிறந்தவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். சம அந்தஸ்துள்ளவர்கள். அவர்களும் எம்மைப்போல் மனிதர்களே. அவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க முனைப்புடன் செயற்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது. உடல் அங்கங்களில் ஏற்படும் குறை ஒரு குறை அல்ல. அவர்களிடம் இருக்கும் திறமை, ஆளுமை அல்லது முயற்சி செய்து மாற்றுத் திறனை வளர்ப்பதற்கு ஒரு தூண்டு சக்தியாக சமுதாயமோ, குடும்பமோ அல்லது அரசாங்கமோ இல்லாமல் இருப்பது தான் குறை.