மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு,- சுரேஸ் பிறேமச்சந்திரன்,

595

மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட ஊக்குவிப்பதும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் போக எஞ்சியுள்ள மிகச்சொற்ப அளவு காணிகளில் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச்செய்கையின் விளைச்சலைக்கூட சிங்கள மக்கள் அடாத்தாக அறுவடை செய்து கொண்டு போவதற்கு உதவி வழங்குவதும் எப்படி மனிதாபிமான நடவடிக்கை ஆகும்? என்று சுரேஸ் க.பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்துக்கான விஜயத்தினை கடந்த 10.08.2014 ஞாயிறு அன்று மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
மூதூர் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
மூதூர் அகத்தியாவனம், முதலைமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 293 ஏக்கர் காணியில் கடந்த ஆறு வருடங்களாக, அதாவது கிழக்கு மாகாணத்தை அரசு தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் காவல்துறையினரின் அனுசரணையுடன் சிங்கள மக்களால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எமது மக்கள் அனைத்து இடங்களிலும் முறையீடு செய்தும் கூட இதுவரையில் தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளை கையளிக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். கூடவே மல்லிகைத்தீவுக்கு வருகின்ற மாவிலாறு தண்ணீர் தெஹிவத்த ரணதுங்ககேட் எனும் இடத்தில் மறிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரும் மறுக்கப்படுகிறது.
மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட ஊக்குவிப்பதும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் போக எஞ்சியுள்ள மிகச்சொற்ப அளவு காணிகளில் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச்செய்கையின் விளைச்சலைக்கூட சிங்கள மக்கள் அடாத்தாக அறுவடை செய்து கொண்டு போவதற்கு உதவி வழங்குவதும் எப்படி மனிதாபிமான நடவடிக்கை ஆகும்?
அரசின் இத்தகைய வெஞ்சின நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், எமது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் நாம் சர்வதேசத்தை நம்புவதுடன் எமது எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் மிகப்பலமாக காட்ட வேண்டும். அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வலுவுள்ளதாக இருக்க வேண்டும். நாம் வெகுஜன இயக்கங்களை ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
எமது பொறுமைக்கும் எல்லையுண்டு. அரசு தொடர்ந்தும் இத்தகைய செயல்களை மேற்கொள்ளுமாக இருந்தால் நாம் மக்களை திரட்டி சர்வதேச சமுகத்தின் கவனத்தை எமது தரப்பின் நியாயத்தை நோக்கி ஈர்ப்பதற்கு எம்மால் முடிந்த அனைத்து வழிகளையும் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மேற்கொள்வோம்.
எமது போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சமுக கட்டுமானத்தின் சகல தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் தமிழ் தேசியசபை ஒன்றை கட்டுவதற்கான அவசியம் எழுந்துள்ளது. இதனை முன்னெடுத்து செல்லுகின்ற பணியில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் தாங்கள் சார்ந்துள்ள அமைப்பினை தமிழ் தேசியசபையுடன் இணைத்துக்கொண்டு எமது உரிமை போராட்டத்தின் வெற்றிக்காக பாடுபட முன்வர வேண்டும்.
தனி ஒரு கட்சியோ அல்லது ஒரு அமைப்போ தனித்து நின்று போராடி சமுக விடுதலையை வென்றதாக வரலாறு இல்லை. ஆகவே தமிழ் பேசும் சமுகம் முழுவதும் ஒன்றிணைந்து தமிழ் தேசியசபை எனும் பொது அமைப்பின் கீழ் ஐக்கியப்பட்டு பறி போயுள்ள எமது உரிமையை வென்றெடுப்பதற்கு அணி திரள வேண்டும்.
காணி பிரச்சினை, மீள்குடியேற்றத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மல்லிகைத்தீவு கிராமத்தில் வசிக்கும் மக்கள் நீங்கள் எமக்கு எடுத்துரைத்தீர்கள். இதிலிருந்து எமது பிரச்சினைக்கு நாம் தான் குரல் கொடுக்க வேண்டும். வானத்திலிருந்து தீர்வுப்பொதி வந்திறங்கி விடாது எனும் உண்மைநிலை தெளிவாகிறது. எமது தரப்பின் நியாயம் சந்தேகத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்கப்படும் போதுதான் வெளிச்சக்திகள் எமக்கு துணை புரிய முன்வரும். ஐக்கியப்படுவோம். வலுப்பெறுவோம். போராடுவோம். வெற்றி பெறுவோம் என்று சுரேஸ் க.பிறேமச்சந்திரன் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வெருகல் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, 
மாரி மழைக்காலத்தில் வெருகல் ஆறு பெருக்கெடுத்து பாயும் போது, வாழைத்தோட்டம், முட்டிச்சேனை, கல்லடி, சூறைநகர் கிராமங்களுக்குள் வெள்ளம் ஊடுவி விவசாயம் அழிவடைவதாகவும், வீடுகள் வெள்ளத்துள் மூழ்கி தாம் அவஸ்தை படுவதாகவும், தமது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதுடன் போக்குவரத்துகள் தடைப்படுவதாகவும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இப்பிரச்சினைக்கு வெருகல் நாதன்ஓடை கட்டைப்பகுதியில் அணை அமைத்து தீர்வை பெற்றுத்தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டமைப்பின் பிரமுகர் நாகராஜாவின் (சங்கர்) ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விரு மக்கள் சந்திப்புகளிலும் மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன், வெருகல் பிரதேசசபை உறுப்பினர் ஞானதாஸ், மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள் நாகேஸ்வரன், மோகன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.  72 (1)364510

 

SHARE