மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?

462

பாகம் – 01

2005 காலப்பகுதியில் அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை. ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன. இராணுவத்துக்கான போர் பயிற்சிகளிலும் ஆயுத கொள்வனவுகளிலும் ஸ்ரீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாக தெரிந்து இருந்தது. மஹிந்த அரசு பாரிய போர் ஒத்திகை ஒன்றை தொடங்க போகிறது என்பது உறுதியாக தெரிந்து இருந்தது.
அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல போர் நிறுத்தம் மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய செயற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா படையினர் இறங்கி இருந்தனர்.

ஸ்ரீலங்காவின் இந்த போரை எதிர்கொள்ள தமிழீழ தேசியத்தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருந்தார். அதில் வான் புலிகளின் தாக்குதல் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம். விடுதலை புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்தபோதும் அதற்கான தடையமோ ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை (1998)ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழீழ வான்படையினர் மலர்தூவி தமது முதல் பறப்பை மேற்கொண்டு இருந்தனர். அதன்பின்னர் வான்புலிகளின் பறப்பை (2005) காலப்பகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது. வன்னி வான்பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. தமிழீழ தேசிய தலைவரை சுமந்துகொண்டு தமிழீழ வான்படை வன்னி வான்பரப்பில் வட்டமடித்தது.

இந்த பறப்பு செய்திகள் கூட விடுதலை புலிகளின் தளபதிகள் போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே தெரிந்தது. மாவிலாற்றில் மஹிந்த அரசு போரைதொடங்கி கிழக்கை ஆக்கிரமிக்க தொடங்கிய போது வன்னியில் பெரும் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வன்னிப்பகுதியில் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து இருந்தன. இதில் போராளிகள் மட்டுமில்லை மக்களும் இழப்பை சந்தித்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில் தான் (05-01-2008) சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலைப் புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. காரணம் சாள்ஸ் பொட்டு அம்மனுக்கு அடுத்த நிலையிலிருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வு தாக்குதல் தளபதி பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அன்றைய விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு இருந்தது. விடுதலைப்புலிகளின் பல கரும்புலித்தாக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்க கரும்புலி தாக்குதல்வரை எந்த தாக்குதல் நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும்.

தென்னிலங்கையில் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் எழுந்தபோது முடியும் என்று பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி காட்டியவர் கேணல் சாள்ஸ். ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகிற அளவுக்கு பொட்டு அம்மனுக்கு அடுத்து சாள்ஸ் அவர்களே இருந்தார். ஸ்ரீலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கை பிரதேசம் எங்கும் விடுதலை புலிகள் நடவடிக்கை என்றால் சாள்ஸ் அவர்கள் தான் முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்தன. சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடவடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயற்பட்டனர்.

ஸ்ரீலங்கா தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னாரில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக்கொண்டு இருந்தார். அந்த பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுக்க காரணம் மன்னாரில் விடுதலை புலிகள் கட்டுபாட்டு பிரதேசம் எங்கிலும் செல்பேசிக்கான கவரேச் உள்ளது அத்துடன் டயலாக் ரன்கத்த மோட்டரோல என்பவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்கனல் கூட சிலவேளைகளில் கிடைக்கும் எனும் அளவிற்கு பல தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் அங்கு தொடர்ச்சியாக இருந்தது. இது சாள்சின் நடவடிக்கைக்கு இலகுவாக இருந்தது.

அத்துடன் தென்னிலங்கை பகுதிகளுக்கு தாக்குதல் நடத்த மன்னார் கடல் பகுதியும் கரையை ஒட்டிய காட்டு பகுதியும் இலகுவாக இருந்தது கடல் வழியாக புத்தளம் சில்பத்துக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தென்னிலங்கை ஏனைய பகுதிகளுக்கு நகர்த்துவதும் இலகுவாக இருந்தது. இதனால் மன்னாரே சாள்சின் பிரதான தளமாக மாறியிருந்தது. ஒரு காலத்தில் அந்த பாதை படையினரின் முற்றுகைக்கு உள்ளானதால் மன்னாரின் கட்டையடம்பன் மடு போன்ற பகுதிகள் ஊடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனூடாக போராளிகளும் வெடிபொருட்களும் நகர்த்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இவ்வாறு விடுதலை புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தேசிய தலைவர் அவர்களுடன் அந்த வான் பரப்பில் ஈடுபட்டார். இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்து கொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதை கேட்டதிலேயே விடுதலை போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சாள்ஸ் விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலை தளபதியாக செயல்பட்டவர் உண்மையில் விடுதலை புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உலகநாடுகள் எங்கும் இயங்கிகொண்டு இருப்பது சிறந்த புலனாய்வு கட்டமைப்பினரால் தான் அதற்கு முக்கிய காரணங்களில் சாள்ஸ்ம் ஒருவர். சிலவேளைகளில் தாக்குதல் நடத்த போகும் கரும்புலிகளுக்கு கூட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது. கரும்புலிகளுக்கு ஆனாதிடத்தினை வேறு தளபதிகள் தான் வழிநடத்துவார்கள். இதனால் சாள்ஸ் பற்றி சாதாரண போராளிக்கு கூட தெரிந்திருக்கவில்லை. இவ்வாறாக செயற்பட்டதனால் தான் சாள்ஸ் கால் படாத இடமே இலங்கையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். மட்டகளப்பில் நின்றுகூட தனது தென்பகுதி நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.விடுதலை புலிகளின் கொரிலா பாணியிலான நடவடிக்கைகள் மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும். இதனால்தான் விடுதலை புலிகளின் புலனாய்வு துறையின் இரண்டாம் நிலை பொறுப்பாளராக உயர முடிந்தது. அன்று எமது விமானபடை தளத்திற்கு தளபதிகள் அழைத்து வரபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு தலைவர் அவர்களும் நின்றிருந்தார் அதில் நானும் கலந்து கொண்டேன் எமது இயக்கத்தின் முதன்மை தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானப்படையினை அறிமுகம் செய்து வைக்கிறார். இதில் விமானபடைப்பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அதன் பின்பு நான்கு நான்கு பேராக விமானத்தில் பரப்பில் ஈடுபட்டார்கள். எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமான தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது. விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறமைகளையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார். அதன் பின்பு தான் தளபதி அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள். இரண்டு விமானங்கள் மாறி மாறி பரப்பில் ஈடுபட்டன. அப்போது தலைவர் அவர்களும் பறப்பதுக்காக விமானம் ஒன்றில் ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும் போது அவரது பாதுகாப்புக்காக நானும் அதில் ஏறுவதற்கு முற்பட்டேன். அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள் பொட்டு நான் தனியா போறேன் பிறகு நீ போ. நான் போனால் நீ பார் என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான்பரப்பில் வட்டமிட்டுவிட்டு கீழே இறங்கினார். அங்கு நின்றவர்களுக்கு அப்போது தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது.அதாவது விமானத்தில் நான் போகும்போது ஏதாவது நடந்தால் இயக்கத்தை நீ பார் என்பது தான் அர்த்தம். அதன் பின்புதான் நான் பறப்பதுக்கு சென்றேன். அப்போது தளபதி சாள்ஸ் நான் ஏறிய விமானத்தில் எனது பாதுகாப்புக்காக ஏறினார்.

அப்போது தலைவர் அவர்கள் சாள்ஸை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார். இவங்களுடைய விமானங்களை நம்பி எல்லோரும் ஒன்றாய் பறக்க வேண்டாம் முதலில் பொட்டு அம்மான் போகட்டும் பிறகு நீ போ என்று சொன்னார். ஏன் என்றால் பொட்டு இல்லாவிட்டால் நீதான் புலனாய்வு துறையை கொண்டுநடத்த வேணும் என்று சொன்னார். அந்த அளவுக்கு சாள்ஸ் திறமையான தளபதியாக இருந்தார். அதன் பின்பு எல்லா தளபதிகளும் பரப்பில் ஈடுபட்டனர் என்றார். இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்த்தியிருந்தது. ஆனால் அதன் பின்னர் (26-03-2007) தமிழீழ வான்படை கட்டுநாயக்க மீது முதல் தாக்குதலை நடத்தி உலகத்திற்கு அறிமுகப்படுத்தி கொண்டது. தமிழின வரலாற்றில் முதல் வான்படை அமைத்த தலைவன் என்னும் பெருமை தமிழீழ தேசிய தலைவருக்கு கிடைத்தது. இத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலை புலிகள் வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்று இருந்தனர். ஆனால் இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலை புலிகள் இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து செயலிழந்து போனார்கள்???

பாகம் – 2

தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றிலே மாற்றத்தை ஏற்படுத்திய (2002) ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்த சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நிர்வாக பகுதியான வன்னி பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டு பிரமுகர்களின் வருகை வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த வேளையில்தான் விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன. இதனை முறியடிக்க இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களை தடுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவினர் வன்னி பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டு இருந்ததால் சந்தேகத்திற்கு இடமானவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது மக்களிடையே சில மனகசப்பும் ஏற்படத்தான் செய்தது. எனினும் தாயகத்தின் பாதுகாப்பு என்றவகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஆதரவு வழங்கினர். இதே வேளை விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்கான பொருளாதார தடை தளர்த்தப்பட்டது. விடுதலை புலிகளும் வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கு சற்று வழியையும் ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் இது மறைமுகமாக தமிழீழ விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு மறைமுக பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டிருந்ததையும் மறுப்பதற்கு இல்லை.

இவ்வாறான வன்னி மக்கள் மீதான பொருளாதார தடை ஸ்ரீலங்கா அரசால் நீக்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்கள் நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலை புலிகளால் ஸ்ரீலங்கா படையினரிடம் கோரிக்கை விடப்பட்டது. இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கப்பட்ட பிரச்சனை தான் மாவிலாற்று பிரச்சனை. இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகிறது. இயற்கை துறைமுகம் விமானபடைத்தளம் எண்ணெய் சேமிப்பு கிணறுகள் என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணப்படுகிறது. விஞ்ஞானி ஆதார் சீ கிளாக் அவர்கள் கூட ஆசிய கண்டத்தில் திருகோணமலையை முக்கிய இடமாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்ககூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார். அதேவேளை பல்வேறு நாடுகளும் திருகோணமலையை முதன்மை இடமாக கருதுகின்றன. இந்நிலையில் திருகோணமலையில் சில இடங்கள் ஸ்ரீலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தன. இவ்வாறு அமையபெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலை புலிகள் (2003) ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய துரோகத்தினை களைவனுக்கு படையெடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள். கிழக்கில் இருந்து விடுதலை போராட்டத்தின் துரோகிகள் விரட்டியடிக்கப்பட்டு பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவரப்பட்டதின் பின்னர் அங்கு விடுதலை புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் மீண்டும் செயற்பட தொடங்கின.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான (50) மீற்றர் கரையோர பகுதி விடுதலை புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. பல கிராமங்களை உள்ளடக்கிய இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும் கடல் தொழிலையும் தமது தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கல்வியில் சற்று குறைவான நிலையிலே இங்கு காணப்பட்டது. இம்மக்கள் தமது அன்றாட பொருட்களை கூட ஸ்ரீலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் ஊடாகவும் ஈசிலம்பறு வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் ஊடாகவும் கதிரவெளி மக்கள் வாழைச்செனை படை சோதனை நிலையம் ஊடாகவும் சென்றே பொருட்களை பெறவேண்டும்.

ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு செல்லலாம். பெருமளவு பொருட்கள் எடுத்துச்சென்றால் அவர் படையினரால் சந்தேகிக்கப்பட்டு விசாரிக்கப்படுவார். இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை ஸ்ரீலங்கா படையினரால் போடப்பட்டு இருந்தது. இவற்றின் மத்தியில்தான் விடுதலை புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள். காட்டு வழியாகவும் கடல் வழியாகவும் பொருட்களை கொள்வனவு செய்தே விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தை நடத்தினார்கள். அங்கு பல பயிற்சி தளங்களை நிறுவினார்கள். பலநூறு போராளிகளை உருவாக்கினார்கள். மறைமுகமாக அங்கு விடுதலைப்புலிகளின் கடற்படைத்தளங்கள் நிறுவப்பட்டன. இதன் பிரகாரம் புலம்பெயர்வால் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒருதொகுதி இறக்கப்படுகிறதது. இவ்வாறு அங்கு கடல்புலிகளின் நிலைப்படுத்தல் உயர்ந்து கொண்டு சென்றது. இதனாலேயே விடுதலைப்புலிகளின் கடல்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படும் காலப்பகுதியாக (2003) ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதி அமைந்தது. கடல்புலிகளின் பலமே விடுதலைப்புலிகளின் பலம் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பலமான அணியாக கடற்புலிகள் அணி செயல்பட்டது. இது ஸ்ரீலங்கா கடற்படைக்கு மட்டுமில்லை தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது. தங்களுக்கான படையினரின் பலத்தை பெருக்கிக்கொண்டும் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்துகொண்டு இருந்த ஸ்ரீலங்கா படையினருக்கு விடுதலை புலிகள் தங்கள் படைப்பலத்தை பெருக்கிறார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியத. இதனால் தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்டு விடுதலை புலிகள் சமாதான காலத்திலும் ஆயுத கொள்வனவிலும் புதிய போராளிகளை இணைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இதன் ஒரு கட்டமாக எழுந்த அழுத்தம் காரணமாக சமாதான தூதுவர்களாக இருந்த நோர்வையின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைபுலிகளின் கடற்படையின் படகு கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடகிறார்கள்.

கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படகுகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள். இவை தொடர்பான தகவல்கள் ஸ்ரீலங்கா படையினரை சென்றடைகின்றன. இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைபுலிகளின் உத்தியோகபூர்வ படகுசேவை ஊடாகவும் விடுதலைபுலிகளின் கடற்புலிகளின் பலத்தினை ஸ்ரீலங்கா படைபுலனாய்வாளர்கள் ஆராய்கின்றார்கள். அத்துடன் சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்புக்களை கொடுக்கலாம் என்றும் ஏற்கனவே கடல்புலிகள் வெளிப்படையாக காட்டியிருந்தார்கள்.

இதன் பிரகாரம் புதிதாக ஸ்ரீலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகனிப் படகுகள் கடல்புலிகளின் சிறிய ரக தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள். அவைதான் பின்னாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகை படகுகள். கடல்புலிகளின் படகுகளை பார்த்தே இந்த படகுகளை ஸ்ரீலங்கா படையினர் வடிவமைத்து கொண்டார்கள். இந்த அரோ வகை படகுகளில் சில நவீன வசதிகளை ஸ்ரீலங்கா கடற்படையினர் ஏற்படுத்தினார்கள். இதன் நவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவிகள் கிடைத்திருந்தது. இவ்வாறான சுமார் நூறு வரையான அரோ படகுகளை கடல்புலிகளை எதிர்ப்பதுக்காக என்றே ஸ்ரீலங்கா படையினர் உருவாக்கியிருந்தார்கள்.
இதேநேரம் கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைபுலிகள் ஈடுபட்டார்கள். சமாதான காலத்தை பயன்படுத்தி சமபூர் ஈசிலம்பற்று வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள் பாலங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்த புனரமைப்புக்கு ஸ்ரீலங்கா அரசே உதவுகின்றது. இதனூடாக படையினர் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்கானிக்கின்றார்கள். இதனிடையே ஒட்டுகுழுக்களின் துரோகத்தனமும் ஊடுருவல்களும் தலைதூக்குகின்றன. இவற்றையும் விடுதலைபுலிகள் முறியடிக்கின்றார்கள்.

இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப் கேணல் அறிவு திறம்பட செயல்படுகிறார்.
அத்துடன் அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனங்காணப்பட்டு கல்வி கழகம் ஊடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனங்காணப்பட்டு உயர்தரம் படித்த தொண்டர் ஆசிரியர் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். மருத்துவ பிரச்சனை இனங்காணப்பட்டு வன்னியில் இருந்து தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவழைக்கப்பட்டு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு மக்களின் நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கடல்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் ஊடாக கடல் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்பு ஊக்குவிக்கப்படகின்றது. சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மாற்றம் கண்டு வந்துகொண்டு இருந்தார்கள்.
அத்துடன் பொருண்மிக கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க தமிழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது. நீதி நிர்வாகம் அங்கு கொண்டு செல்லப்படுகின்றது. மக்களிடையேயான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. பிரச்சனை களையப்படுகிறது.

விடுதலை புலிகளின் இந்த சீரான நிர்வாக கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றது. இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள். மூதுரை பொருத்தமட்டில் மூதூர் இஸ்லாம் மக்களை கொண்ட நகரமாக காணப்படுகிறது. தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சனைகள் தமிழீழ விடுதலைபுலிகளால் தீர்க்கப்பட்டு இரு பகுதியினருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்கப்படுகிறது. இவ்வாறு அங்கு விடுதலை புலிகளின் கட்டுமானங்கள் அங்கு திறம்பட செயல்படுகின்றன. இந்நிலையில் வன்னியில் இருந்து தளபதி பால்ராஜ் தலைவர் அவர்களால் திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்.

பாகம் – 3

ஸ்ரீலங்கா தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் போது மறுதரப்பான விடுதலைபுலிகள் அமைதியாக இருந்து விட்டால் அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். ஸ்ரீலங்கா போர் ஒன்றை தொடுக்கும் போது அதனை எதிர்கொள்ளமுடியாத ஒரு நிலையை விடுதலைபுலிகளுக்கு ஏற்படுத்திவிடும். இதனால்தான் சமாதானத்துக்கான சரியான வழி எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஸ் தெரிவித்தாரே. எனவே ஸ்ரீலங்கா பலத்தை பெருக்கிக்கொண்டு இருக்கும்போது விடுதலைபுலிகள் மௌனமாக இருந்துவிடமுடியாது. அவர்களும் தமது பமைவலுவை கட்டியெழுப்ப வேண்டியது சமாதான காலத்திலும் அவசியமாயிருந்தது.

இந்த நிலையில்தான் தலைவர் அவர்களால் பால்ராஜ் தலைநகர் திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். (2004) ம் ஆண்டின் ஆரம்பத்தில் திருகோணமலையில் தளபதி பிரிக்கேடியர் பால்ராஜ் கால் பதிக்கின்றார். வாகரையில் புதிய பயிற்சி தளங்களை அவர் நிறுவுகிறார். போராளிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கிழக்குக்கு தேவையான ஆயுத தளபாடங்களை தரை வழியாக கொண்டு சென்று சேர்ப்பதை விட கடல்வழியாக இறக்குவதே சுலபமாக இருந்தது. எனவே அந்த மாவட்டத்துக்கு தேவையான ஆயுதங்கள் கடல் வழியாக இறக்கப்படுகின்றன. பெருமளவு மோட்டார்கள் இறக்கப்பட்டு அதனை இலக்குநோக்கி வீசுவதுக்கான பயிற்ச்சிகள் போராளிகளுக்கு வழங்கப்படுகின்றது. புதிய குறியீட்டு (சினைப்பர்) அணியினர் உருவாக்கப்படுகின்றார்கள். குறிப்பிட்டு கூறுவதனால் பால்ராஜ் அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதலைபுலிகள் படையணிகள் அங்கு பலம் பெறத் தொடங்கியிருந்தன.

இதேவேளை சமாதான காலமான இக் காலத்தில் பிரிக்கேடியர் சு.ப. தமிழ்செல்வன் கிழக்கு மாகாணத்தை பார்வையிட ஸ்ரீலங்கா படைப்புலங்குவானூர்தியில் திருகோணமலை சேனையூரில் வந்திறங்குகிறார். அவர் சம்பூர் தொடக்கம் வாகரை வரை சென்று பார்வையிட்டு பொறுப்பாளர் தளபதிகள் ஆகியோரை சந்தித்து மக்களுடன் கலந்துரையாடுகிறார். இதேநேரம் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வழித்துணையுடன் போராளிகள் கடல்வழியாக பயணங்களை கிழக்கிற்கு மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தமிழீழ விடுதலைபுலிகள் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டுஅவர்களும் வன்னியில் இருந்து காடு மற்றும் கடல் வழிகளுடாக இரகசிய பயணம் ஒன்றை திருகோணமலைக்கு மேற்கொண்டார். அங்கு சொர்ணம் அவர்களுடன் இணைந்து அங்குள்ள கள நிலைமைகளை ஆராய்கின்றார். அங்கு மக்களை சந்தித்து உரையாடிவிட்டு வன்னி திரும்புகின்றார். அன்று இது ஒரு இரகசிய பயணமாகவே இருந்தது. இதன் பின்னர் விடுதலைப்புலிகளின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் கல்லடி என்னும் கிராமத்தில் வானொலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் தொலைத்தொடர்பு வான்படை கடல் வழி அவதானிப்பு கருவிகளை இணைப்பதுக்காக இரண்டு கோபுரங்கள் (டவர்கள்) அமைக்கப்படுகின்றன. கடற்கரைய அண்மித்ததாக மலையில் (120) அடி உயரம் (200) அடி உயரம் உடையதுமான இரண்டு கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனை அறிந்த ஸ்ரீலங்கா படைபுலனாய்வாளர்கள் இது குறித்து ஆராய்கின்றார்கள். பின்பு ஸ்ரீலங்கா வானொலியொன்றில் இது செய்தியாக வெளியிடப்படுகின்றது. திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் விமானத்தளம் அமைப்பதுக்கான கண்காணிப்பு கோபுரம் வெருகல் பிரதேசத்தில் அமைப்பட்டு வருகின்றது என்ற செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்துகின்றது. இந்த கோபுரம் அருகிலுள்ள சிங்கள கிராமங்களுக்கும் தெரிவதால் அங்குள்ள சிங்கள மக்களுக்கும் ஊர்வலம் படையினரின் மனங்களிலும் சிறு அச்சம் ஏற்படுகின்றது.

இவ்வாறு இருக்கையில் (2004) ம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டகளப்பு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஆயுத தளபாடங்கள் கடல்வழியாக இறக்கபடுகின்றன. கடல்புலிகளால் ஆயுதங்கள் பாதுகாப்பாக இறக்கபட்டு மட்டகளப்பு மாவட்ட தளபதி பானுவிடம் ஒப்படைக்கபடுகின்றன. வன்னியில் இருந்த ஆயுத பயிற்சி ஆசிரியர்கள் நிர்வாக திறன்மிக்க போராளிகள் தாக்குதல் வியூகங்களை வகுக்கும் தளபதிக்கு இரகசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டகளப்பு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி வகுப்புக்கள் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். அங்குள்ள போராளிகளுக்கு கற்பிக்கின்றார்கள். மரபுவழி படையணிகள் கட்டி வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ஜெயந்தன் படையணி அன்பரசி படையணி மோட்டார் படையணி என்பன சிறப்புற கட்டியமைக்கப்படுகின்றன.

இவற்றுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா படையின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கொண்டு செயற்படும் துரோகிகள் களையப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது. விடுதலைக்கு ஆதரவாக செயற்படுபவர்களை படைப் புலனாய்வாளர்களும் படுகொலை செய்துகொண்டு இருந்தமையால் இதனை தடுத்து நிறுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு இறுக்கமான நிலை ஏற்படுகிறது. இதனால் இதற்காக விசேட அணியொன்று பிஸ்டல் குருப் என்ற பெயரில் இரகசியமாக உருவாக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைக்காக துரோகத்தனங்களில் ஈடுபட்ட துரோகிகள் படைப்புலனாய்வாளர்கள் இக்குழுவின் இலக்கிற்குள் அகப்பட்டுக்கொள்கின்றார்கள். இரு பகுதிக்கும் இடையே ஒரு மறைமுக மோதலாக இது இடம்பெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் (2004)ம் ஆண்டு (12)ம் மாதம் (26)ம் நாள் சுனாமி தமிழீழ கரையெங்கும் தாக்குகின்றது. திருகோணமலையில் விடுதலைபகுதியில் நிர்வாக பகுதியான சம்பூர தொடக்கம் வாகரை மாங்கேணி கடற்கரை வரை தாக்கிய சுனாமியால் ஆயிர கணக்கான மக்கள் காவுகொள்ளப்படுகின்றனர். மக்களின் உடைமைகள் அளிக்கப்படுகின்றன. இதன்போதும் வாகரையில் விடுதலைபுலிகளின் சிலதளங்கள் பாதிப்படைகின்றன. குறிப்பாக அங்கிருந்த மோட்டார் தளங்களில் கடல் தாக்கம் ஏற்படுகின்றது. இந்த பாதிப்புக்குள் தளபதி பால்ராஜ் உள்ளாகின்றார்.

இதனை தொடர்ந்து திருகோணமலையில் மக்களை மீள்கட்டுமானம் செய்யும் பணிகளில் விடுதலைபுலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் செயற்படுகின்றன. கொல்லப்பட்ட மக்களின் உடலங்களை எடுத்து அடக்கம் செய்யும் மக்களுக்கான இருப்பிட வசதிகள் உணவு வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக்கொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இதே வேளை இந்த சுனாமியால் படையினரின் வளங்களும் பாதிக்கப்பட்டு அவர்களின் போர் முனைப்புக்கள் தமதம்மடைகின்றன. போர் ஒன்றை ஸ்ரீலங்கா இராணுவம் ஆரம்பிக்க முடியாத நிலையை இந்த சுனாமி ஏற்படுத்தியது.

SHARE