மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்

358

தமிழ் மக்களுக்கானப் உரிமைப் போராட்டம் என்பது 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்கள் தமது உயிரைத் துச்சமென மதித்து ஒரு விடுதலையை நோக்கிப் போராடப் புறப்பட்டனர். பூகோள அரசியலினால் இப்போராட்டங்கள் அனைத்தும் தற்போது முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளை நம்பி இறுதியில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு என்கிற நிலைப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஒற்றை யாட்சியின் கீழ் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவே இக்கட்சிகள் ஆயுதமேந்திப் போராடி வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இடைக்கால நிர்வாக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சில மனக் கசப்புக்கள் அல்லது தமிழ் மக்கள் தமிழீழத்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிற காரணத்தினால் தான் அரசாங்கம் மீண்டும் தமிழினத்திற்கெதிரானப் போரைக் கட்டவிழ்த்துவிட்டது. 52 நாடுகளின் உதவியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முற்றுகைக்குள் கொண்டு வந்தது இலங்கையரசு.

தமிழாயுதக் கட்சிகள் ஒரு பலமாக ஒரு குடையின் கீழ் போராடிய காலத்தில் அவர்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்தை இந்தியாவும், இலங்கையும் திறம்பட கையாண்டது. விடுதலைப் புலிகளுடன் இணைந்துப் பயணிக்க இயலாத அனைத்து ஆயுதக்கட்சிகளும் ஆயுத ரீதியாக ஒடுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் மாத்திரம் ஆயுத ரீதியாக 2009 வரை போரிட்டார்கள். அதேநேரம் தமது தற்பாதுகாப்புக்காக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் அரச கைக்கூலிகளாக அக்காலகட்டத்தில் செயற்படவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. தற்பொழுதும் ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழினத்தை அடக்கியாளுகின்ற ஒரு இராஜதந்திர நகர்வை இலங்கையரசு மேற்கொண்டு வருகின்றது.

ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளை ஏனைய ஆயுதக்கட்சிகளிடமிருந்து வேறு படுத்திய இந்திய அரசாங்கம் தொடர் பரிமாற்றமாக அதனை இலங்கை அரசிடம் கையளித்தது. வேறு இடம் செல்ல வழியின்றி இலங்கை இராணுவத்துடன் இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இவ்வாயுதக்கட்சிகள் நிர்பந்திக்கப்பட்டனர். தொடர்ந்தும் அரசியல் நெழிவு சுழிவு குறித்துப் பேசுகின்றவர்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும். வடகிழக்கு இணைப்பு என்பது இலங்கையரசால் தாம்பாளத்தில் வைத்துத் தரப்போவது கிடையாது. எனவே எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். அதற்கான பலத்தை தமிழ் ஆயுதப்போராட்டக் குழுக்கள் கொண்டிருப்பதே இதற்குச் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப்புலிகள் கடல், வான், தரை என முப்படைகளையும் கொண்டிருந்தவேளையில் அர சாங்கம் பேச்சுவார்த்தைக்கு என அடிபணிந்து வந்தது. சிங்கள அரசியல் தலைமைகளோ, சிங்கள இராணுவமோ ஒருபோதும் தமிழினத்தைப் போராடி வென்றுவிடமுடியாது. குறிப்பாக சீனா, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடனேயே இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது. ஆனால் அரசியல் ரீதியான போராட்டங்கள் தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடக்கவுள்ள நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம். எந்தவொரு நாட்டிலும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலில் மாற்றம் நிகழ்ந்தே ஆகும்.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 வருடங்களைக் கடந்தும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட வில்லையெனில் தொடர்ந்தும் நாம் அரசுடன் அரசியல் பேசிக்கொண்டிருப்பதில் பயன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சற்றுச் சிந்திக்கவேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இறுதிக்கட்டத்தில் தமிழ் ஆயுதக்குழுக்களின் ஒத்துழைப்போடும் தான் துண்டாடப்பட்டது. பிரபாகரன் சர்வாதிகாரி எனக் கூறுகின்ற ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் தற்போது அவரது தலைமை இல்லாத நிலையில் மாற்றுவழியாக தமிழ் மக்களுக்கான ஒரு வலிந்த போராட்டக் களங்களை ஆரம்பித்து வைப்பதில் தவறேதுமில்லை. இல்லையெனில் தமிழினம் தமது விடுதலைக்காகப் போராடிய வரலாறுகள் அனைத்தும் அழிக்கப்படும். இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற நிலைப்பாடும் உறுதிப்படுத்தப்படும்.

தமிழினத்திற்கான விடுதலையைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று பேசுகின்ற இவ்வாயுதக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மாத்திரம் கொக்கரிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது. சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரை எமக்கான உரிமைகளை ஒருபோதும் பெற்றுத்தரப்போவதில்லை. மாறாக அவர்கள் ஒரு அரசினை ஆதரித்துச் செயற்படுவதில் தான் தீவிரம் காட்டுவார்கள். தனிப்பட்ட ரீதியில் ஆயுதக்கட்சிகளின் தலைவர்களிடம் பேசுகின்றபோது, நிச்சயமாக ஒரு போராட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கின்றோம் என்பார்கள். ஆனால் இதனை ஒரு செயல்வடிவமாக்குவதுதான் சிக்கலான விடயம். யுத்தக்கள அனுபவங்களைப் பொறுத்தவரை முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கின் கட்டளைத் தளபதி கருணா அவர்களால் இது சாத்தியமாகலாம். ஆனால் இவருடன் இவ்வாயுதக் கட்சிகள் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறியான விடயமே.
தொடர்ந்தும் தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் வன்முறை களுக்குள் உட்படுத்தப் படுவார்களாகவிருந்தால் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் கருணாவோடு இணைந்து இலங்கையரசுக்கு எதிராக ஒரு ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. மீண்டும் ஒரு கறுப்பு யூலையைக் காணவே அரசு காத்திருக்கிறது.

தமிழ் மக்களுக்கான சர்வதேச மட்டத்திலான நீதி வழங்கும் வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகள் நசுக்கப்படுகிறது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டார்கள் என முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் சாட்சியமளித்திருந்தார்.

தேசியம், சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த 35 தமிழ் ஊடகவியலாளர்கள், 245 அரசியல்வாதிகள், 152 புத்திஜீவிகள் என இந்தச் சிங்களக் காடையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தான் அரசு தமிழ் இளைஞர்களை ஒட்டுக்குழுக்களாக வைத்துள்ளது. வடகிழக்கில் புலனாய்வாளர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. வடகிழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகளை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஆரம்பித்து கொடுப்பனவுகளை வழங்கி அத்துடன் இப்பிரச்சினையை முடித்துவைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்களையோ, இராணுவ உயர் அதிகாரிகளையோ, இராணுவ வீரர்களையோ சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்றைய அரசும் கூடத் தயாராகவில்லை. மாறாக யுத்தக் குற்றவாளி எனப் பெயரிடப்பட்டிருக்கும் சர்வேந்திர டி சில்வாவுக்கு இலங்கை இராணுவ பிரதானியாக உயர் பதவியை வழங்கியுள்ளது அரசு.

தமிழினத்திற்கான அழிவுகளை மேற்கொண்டவர்கள் தற்போது உல்லாச வாழ்வை அனுபவித்து வருகிறார்கள். ஆகவே தமிழ் மக்களாகிய நாம் போரியல் சமநிலையை உருவாக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டி ருக்கின்றோம் அல்லது அரசியல் சமநிலையை நாம் சர்வதேச ரீதியாக ஏற்படுத்தவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களை காலத்திற்குக் காலம் அரசாங்கம் அவர்களது கைக்கூலியாகவே செயற்படுத்தி வந்தது. தமிழ் மக்கள் ஒரு பிரச்சினையை முன்னெடுக்கின்றபோது அதனை திசைதிருப்பும் நோக்கில் மற்றொரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு நகர்த்தப்படுவதன் ஊடாக சரியான ஒரு நிலையைஎமது அரசியல் தலைமைகள் எடுக்க முடியாத சூழ்நிலைகள் உருவாக்கப்படுகிறது. சிங்கள அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி தமிழினம் ஒரு அடிமையான இனமாகவே வாழவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். ஒரு பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுத்துச் செல்லும் போது பௌத்த துறவிகளை ஏவிவிட்டு பிரச்சினைகளை பூதாகர மாக்குகிறார்கள். இந்நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு இவ்வாண்டுக்குள் கிடைக்கும் அல்லது போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும், சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்வோம் என போலியான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே காலத்திற்குக் காலம் ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று மேற்குறிப்பிடப்பட்ட ஆயுதக்கட்சிகள் இலங்கையரசிற்கு எதிராக மீண்டும் ஆயுதமேந்திப் போராடும் சூழ்நிலைக்கு இந்த அரசாங்கமும் தள்ளி இருக்கிறது எனலாம். இவ்வாறானதொரு யுத்தம் ஆரம்பிக்கப்படுமாகவிருந்தால் இதற்கு இலங்கையரசே பொறுப்புக் கூறவேண்டும். மீண்டும் ஒரு போராட்டத்தை இலங்கையரசு மறைமுகமாக செயற்படுத்த எத்தணிக்கிறதா என்கிற கேள்வியும் இவ்வாயுதக் கட்சிகளுக்கிடையில் எழுந்துள்ளது. பூனைக்கு மணி கட்டப்போவது யார்?

இரணியன் 

SHARE