முதல்கட்ட தியானம் செய்வது எப்படி?

338
முதல்கட்ட தியானம் செய்வது எப்படி?

தியானம்
நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுகற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும் இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை எடுத்துகொள்ளலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

நான் தளர்வாக இருக்கிறேன்,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,

நான் தயாராக இருக்கிறேன்,

என் மனம் முழுவதும் என் மூச்சுகற்றின் மீது கவனமாக இருக்கிறது,

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்

இவ்வார்த்தைகளை எல்லாம் மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமைவதை நம்மால் உணர முடியும்.

பிறகு ஒரு நிமிடம் மௌனமாக இருந்து மூச்சுகாற்றினை கவனிக்கவேண்டும். நாசித்துவாரங்களின் வழியே உள்ளே வரும் காற்றையும் வெளியே செல்லும் காற்றையும் கவனித்து வரவும்.

அம்பு எய்ய தயாராக் இருப்பவன் எப்படி உலகை மறந்து தன இலக்கை மட்டுமே நோக்கி இருப்பானோ அதுபோல் உங்கள் மனமானது மூச்சுக்காற்றை மட்டுமே கவனித்திருக்க வேண்டும். இதுவே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இதற்கு இடையே மனம் ஏதாவது சிந்தனையில் ஒடச்செய்தால் உங்கள் மன ஓட்டத்தையே சற்று நேரம் கவனித்து வரவும். இதில் ஏதும் தவறு இல்லை. நம் இலக்கு மூச்சுகாற்றினை கவனிப்பதே. குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லாமல் உழைப்பதுதான் நமது லட்சியமாகும்.

மேற்சொன்னவாறு மூச்சுகாற்றினை ஐந்து நிமிடம் கவனித்தது முடிந்து விட்டது என்றால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு முடியுங்கள். நாளுக்குநாள் பிரார்த்தனைகளை மாற்ற கூடாது.

உங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனை முடிந்தவுடன் நம்பிக்கையோடு எழுந்து இருக்கவேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று எண்ணிக்கொண்டு வெற்றிநடை போடுங்கள். நீங்கள் செய்கிற ஐந்து நிமிட தியானமானது நீங்கள் பணியாற்றும் எட்டு மணி நேரத்திற்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையே.

இந்த முதல் கட்ட தியான முறையை முதல் ஐந்து நாட்கள் ஐந்து நிமிடங்களும் அடுத்த ஐந்து நாட்களில் பத்து நிமிடங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த முறையை மட்டும் நீங்கள் நாள் தவறாமல் பழகி வந்தால் இதற்கு அடுத்து வரும் தியான நேரமானது மிக இனிமையாக அமைந்து வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றி பெற உதவும்.

SHARE