நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 369 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
அவுஸ்திரேலியா 383
வெல்லிங்டனில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்களும், நியூசிலாந்து 179 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, சௌதீ பந்துவீச்சில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அடுத்து களமிறங்கிய பந்துவீச்சாளர் நாதன் லயன் பவுண்டரிகளை விரட்டி அதிரடியாக 41 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை கடைபிடித்த கவாஜா, 69 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, பிலிப்ஸின் மாயாஜால சுழலில் ஹெட் (29), மிட்செல் மார்ஷ் (0), அலெக்ஸ் கேரி (3) மற்றும் கேமரூன் கிரீன் (34) ஆகியோர் நடையைக் கட்டினர்.
கிளென் பிலிப்ஸ்
இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் ஜீதன் படேலுக்கு(2008) பிறகு 5 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு இதுவாகும்.
அவுஸ்திரேலியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளாக கம்மின்ஸ் (8), ஸ்டார்க் (12) ஆகியோர் மேட் ஹென்றி பந்துவீச்சில் அவுட் ஆக, அந்த அணி 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனைத் தொடர்ந்து, 369 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்களும், டேர்ல் மிட்செல் 12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.