முதல் பெண் பத்திரிக்கையாளரை சிறப்பித்த கூகுள்

247

உலகின் முதல் பெண் பத்திரிகையாளரின் 173-வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் அவரது புகைப்படத்தை முகப்பில் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது.

உலகின் முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மின்னா கேந்த். டாம்பியர் நகரில் 1844 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி பிறந்தார்.

இயற்பெயர் அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன். பத்திரிகையாளரான மின்னா, ஐரோப்பாவில் பெண்களின் உரிமைக்காகத் தீவிரமாக போராடி சமூக மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஆகவே இவரது பிறந்தநாளை பின்லாந்து, சமூக சமத்துவ நாளாகக் கொண்டாடி வருகிறது.

உலகளவில் புகழ்பெற்ற மின்னா கேந்த்தின் எழுத்துகள், சிந்தனை முழுவதும் பெண்ணியம் சார்ந்தவையாகவே இருக்கும். பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒரு குடிகார கணவனிடம் மனைவி, எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் ‘டியோமிஹேன் வைமோ’ எனும் நாடாக நூலை இவர் எழுதியுள்ளார்.

மின்னா கேந்த்தின் புரட்சிமிகு எழுத்துக்களின் மூலம் 1906 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை பெற்ற முதல் ஐரோப்பிய நாடு, பின்லாந்து என்ற பெருமையை பெற்றது.

அடுத்த ஆண்டே, நாடாளுமன்றத்தில் பெண்களைத் தேர்வு செய்த முதல் நாடு என்ற பெருமையையும் பின்லாந்து பெற்றது. இதற்கு வித்திட்டவர் எழுத்தாளர், நாடக ஆசிரியர், சமூக ஆர்வலர் என பல துறைகளில் புகழ்பெற்ற மின்னா கேந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1897ம் ஆண்டு மே 12 ம் திகதி இறந்தார்.

இன்று இவரது 173 வது பிறந்தநாள். கூகுள் நிறுவனம், கூகுள் முகப்பில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.

SHARE