இன்றைய இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக முதுகுவலி உள்ளது.உணவுகளில் அக்கறையின்மை, விட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை முதுகுவலி ஏற்படுகிறது.முதுகெலும்பின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு
முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (Servaical), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (Thoracic), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (Lumbar), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (Sacral), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது. இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது. குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும். முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? டிஸ்க் ப்ரொலாப்ஸ்(Disk Prolapse): முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும். ஸ்பாண்டிலோசிஸ்(Spondylosis): வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும். ஆஸ்டியோபொரோஸிஸ்(Osteoporosis): உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம். ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்(Spondylolisthesis): முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. ஆர்த்ரைட்டிஸ்(Arthritis): மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும். உணவு முறை பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள். கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள விட்டமின் டி அத்தியாவசியம். அதே போல விட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த விட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிர விட்டமின் ஏ, விட்டமின், சி, விட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவை. வலி மிகுந்த நேரத்தில் சூடான குளியல் போடுவது, உற்சாகத்தை தரும், வாரம் ஒருமுறை மசாஜ் செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். நவீன சிகிச்சை டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். மேலும், நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கு, சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும். |