முன்னாள் போராளிகள் என்ற சொற்பதம் மாற்றப்படவேண்டும் – இது தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயல்

738

30 வருட காலங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்கானப் போராட்டம் நகர்த்தப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் ஒரே கொள்கையுடன் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் போரிட்டது. அதற்கான ஆயுத உதவி, பயிற்சிகள் அனைத்தும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. துரதிஷ்டவசமாக விடுதலைப்புலிகளினால் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட போடா தடைச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஆயுதக்குழுக்கள் தடைசெய்யப்பட்டது. அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கடல், வான், தரை என முப்படைகளையும் கொண்டதொரு இயக்கமாகவும், நிர்வாகக் கட்டமைப்புக்களையுடைய ஒரு இயக்கமாகவும் சர்வதேச அளவில் திகழ்கிறது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள் முன்னாள் போராளிகள் என்றோ, ஜனநாயகப் போராளிகள் என்றோ தமது இயக்கத்திற்கு முன்னாள் ஒரு அடைமொழியினைப் போட்டுக்கொள்ளவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிவுகள் தற்போது உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் சதித்திட்டத்தில் விடுதலைப்புலிகளது அமைப்பை துண்டுதுண்டாக சீர்குலைப்பது என்பதேயாகும். அதற்குத் துணைபோனவர்களாகவே தற்போது இலங்கையில் இயங்கக்கூடிய விடுதலைப்புலிகளின் பெயரை வைத்து அதற்கு முன்னாள் போராளிகள், முன்னாள் விடுதலைப்புலிகள் என்றெல்லாம் கூறிக்கொண்டு இராணுவப்புலனாய்வின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்பவே இவர்களது செயற்பாடுகள் அமையப்பெறுகிறது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்பாகிய நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சர்வதேச ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகத் திகழ்கிறார்கள். வடகிழக்கில் நாடு கடந்த தமிழீழ அரசு தமது அரசியல் பணிகளைச் செய்வதற்கு இலங்கையரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாகவிருந்தால் 24 மணி நேரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கான அரசியல் பணிகளைத் தொடர்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

சமாதான காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகமானது வடகிழக்கில் இயங்கி வந்தது. இவர்களது அரசியல் முன்னெடுப்புக்கள் சிறந்ததொரு முறையில் பயணித்துக்கொண்டிருக்கும் போதுதான் அதனைப் பொறுக்கமுடியாத சிங்கள தேசம் மாவிலாறில் தண்ணீர்ப் பிரச்சினையைக் காரணங்காட்டி விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டுமென்று பன்னாட்டு உதவிகளுடன் தமது இராஜதந்திர அரசியல் நகர்வுகளை நடாத்தி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் போர் நடவடிக்கைகள் மௌனிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து 11000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களில் இருந்த போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் தளபதிகளும் அடங்குவர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த எந்தவொரு நபரும் தன்னை முன்னாள் போராளி என்று அடையாளப்படுத்தவேண்டிய தேவை இல்லை. குறித்த சொற்பதம் தவறானது. முன்னாள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்று யாராவது கூறுகின்றார்களா? இவர்கள் விடுதலைப்புலிகளது போராட்டத்தையும் அவர்களுடைய சிறந்த பண்புகளையும் சர்வதேச ரீதியாக குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களை இலங்கை அரசாங்கம் திறந்த வெளியில் தமது செயற்பாடுகளைச் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் என தற்போது அனுஷ்டிப்பதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது. இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை எந்த சட்டத்தின் கீழ் இவற்றினைச் செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்கிற கேள்வியும் எழுப்பப்படும் இவ்வேளை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியானது செயற்படுவதற்கான அனுமதியை அரசாங்கம் ஏன் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவதன் ஊடாக இந்த முன்னாள் போராளிகள் என்கிற சொற்பதம் இல்லாமல் போகும்.

முன்னாள் போராளிகள் எனச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியொன்றை உருவாக்கி அதனை நடைமுறையில் கொண்டுவரவேண்டும். முதலில் விடுதலைப்புலிகளுடைய போராளிகளுக்கு ஒற்றுமை அவசியம். அதற்கான ஒரு தனிச் செயலனியை உருவாக்கிச் செயற்படுவதன் ஊடாகவே விடுதலைப்புலிகளது அரசியல் கட்டமைப்பை தொடர்ந்தும் இந்நாட்டில் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.

விடுதலைப்புலிகளது அரசியல், ஆயுதக் கட்டமைப்பும் சரியான பாதையில் இயங்கிக்கொண்டிருந்த போது போனஸ் அடங்கலாக 22 பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்று பெரும் கட்டமைப்பினை விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர். போர் மௌனிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டிய தேவை போராளிகள், விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த ஒவ்வொரு போராளியினதும் கடமையாகும். இவ்வாறு ஏன் இந்த போராளிகள் சிந்திக்கவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம். விடுதலைப்புலிகளுடைய விசேட வேவு அணி, அரசியல் துறைப் பொறுப்பாளர்கள், விடுதலைப்புலிகளின் 58 கட்டமைப்புக்களில் பணியாற்றியவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளது அரசியல் அமைப்பு என்று இயங்குவது சாலச் சிறந்தது. இவர்களுக்கு முன்னாள் போராளிகள் என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவது பாரதூரமான முடிவைச் சந்திக்கும் செயற்பாடாகும்.

தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைப் பொறுத்தவரை வடகிழக்கு இணைந்து சுயாட்சியை அமுல்படுத்தவேண்டும் என்பதே. அதற்கான ஒத்துழைப்புக்களை குறித்த போராளிகள் வழங்கவேண்டும். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. இவர்கள் யாருடைய நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. போராளிகளே போராளிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் பலம் பெரும் நிலைமைகளே உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளது போராட்ட கட்டமைப்பு இருந்த காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்தது. அந்த நெருக்கடிகள் தற்போது முற்றாக அற்றுப்போயுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும் இவ்வரசாங்கம் வழங்குவதற்குத் தயாராக இல்லை. ஆயுத பலத்தை மீண்டும் கொண்டுவரவேண்டிய தேவை குறித்த போராளிகளுக்கு இருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாததன் காரணமாகவும் 1983 ஜூலைக் கலவரம் உருவாக்கப்பட்டது. மீண்டும் ஒரு கலவரத்திற்கே இவ் நல்லாட்சி அரசாங்கம் வழி வகுத்துச் செல்கின்றது எனலாம்.

மீளவும் விடுதலைப்புலிகளின் போராட்டம் உருவாகக்கூடாது என்பதில் அரசு முனைப்பாகச் செயற்படுகின்றது. ஏற்கனவே அரசில் அடிவருடிகளாகச் செயற்பட்டு வந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களை அரசு தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. இவர்களால் அரசாங்கம் ஒருபோதும் பயப்படப்போவதில்லை மாறாக விடுதலைப்புலிகள் என்ற கட்டமைப்பு மீண்டும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராடினால் அதனோடு வருகின்ற தாக்கங்களை ஜீரணிக்க முடியாது போகும் என்ற காரணத்தினாலேயே விடுதலைப்புலிகளது அமைப்பை அவர்களுடைய பேச்சுக்களை அவர்களது செயற்பாடுகளை போர் இடம்பெற்றது என்ற அடையாளமே இல்லாத வகையில் முடக்குவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே முன்னாள் போராளிகள் என்ற சொற்பதங்கள் பிரயோகிக்கப்பட்டு பலர் முகநூல் ஊடாகவும், இணையத்தளங்கள் ஊடாகவும் அரசினால் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனை தமிழ் மக்களாகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். போராட்டம் பற்றிய வரலாறு தெரியாதவர்களே இன்று முகப்புத்தகம் வழியாக போராட்டம் பற்றிப் பேசுகின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டங்களில் முகப்புத்தகம் ஊடாக தமிழர் போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்கில் அரசு தீவிரமாக செயற்படுகிறது.

காலத்திற்குக்காலம் விடுதலைப்போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்ட வரலாறு ஒரு பக்கம் இருக்க தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற்றுத்தரப்படாது போனால் மீண்டும் தமிழினம் சிந்தித்துச் செயற்படவேண்டிய சூழ்நிலை உருவாக்கப்படும். அது அரசியல் போராட்டமாகவும் அல்லது ஆயுதப்போராட்டமாகவும் அமையலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் இலங்கை அரசினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் போராளிகள் என்று விடுதலைப்புலிகளின் பெயரை வைத்து உருவாக்கப்படுகின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமிழினத்திற்கு மீண்டும் மீண்டும் துரோகத்தினை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள். இருக்கக்கூடிய தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்தி அதனது தவறுகளை உணரும் பட்சத்தில் அவர்களை சீர்திருத்தி கொண்டுசெல்லும் நடவடிக்கைகளுக்காக செயற்படுங்கள். இருக்கக்கூடிய அதிகாரம் கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக கொண்டுசெல்ல முடியாதது ஏன் என்பது ஆராயப்படவேண்டும்.

புதிதாக அமைப்புக்கள், கட்சிகள் உருவாகி எந்த காலத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்போகிறது. அவர்கள் தமது கட்சியைப் பலப்படுத்த பல வருடங்கள் எடுக்கும். அதற்குள் எம் நாட்டில் போராட்டம் இடம்பெற்றதா என்று அடுத்த தலைமுறைகளுக்குக் கூட தெரியாமல் போய்விடும். ஆகவே குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். எந்தவொரு பிரச்சினையும் நீண்ட தூரம் செல்லுமாகவிருந்தால் அது தோல்வியில் முடிந்ததே வரலாறு. ஆகவே முன்னாள் போராளிகள், ஜனநாயக போராளிகள், மக்கள் புலிகள் கட்சி என்றெல்லாம் பெயர் வைத்து மக்கள் மத்தியில் பிரபல்யம் தேட முயற்சிக்கவேண்டாம். இக்கட்டுரையின் நோக்கம் தமிழினம் ஒரு குடையின் கீழ் நின்று தமிழினத்தின் விடிவினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே. இக்கட்டுரையினை வாசித்த பின் நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு சரியாக செயற்படுகிறீர்களா என்பது பற்றி சிந்தியுங்கள்.

இரணியன்

SHARE