காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அது இங்கே….
“அண்மையில் மும்பை சென்றிருந்தபோது, எனது தோழியுடன் பிரபலமான பீச்சில் இருந்த காபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கடலழகையும், காபியையும் ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் உரையாடல் எங்கெங்கோ சென்று, எப்படியோ காமாத்திபுராவில் வந்து நின்றது. ஆடம்பரமான இந்த காபி ஷாப்பிலிருந்து காமாத்திபுரா வெகுதூரத்தில் இருக்கும் என நினைத்தேன். ஆனால் மிக அருகில்தான் உள்ளது என்றாள் தோழி. திடீரென அங்கு செல்லலாம் என எங்களுக்கு தோன்றியது.
எப்படி அல்லது ஏன் காமாத்திபுரா செல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. அநேகமாக அது காமத்திபுராவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமாக இருக்கலாம் அல்லது எங்களுக்கு நாங்களே எதையாவது நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியாக இருக்கலாம். இந்த எண்ணம் ஏற்பட்ட உடனேயே முதலில் அது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் அடுத்த நிமிடம் நாங்கள் சாலையில் இறங்கி நின்றதை உணர்ந்தோம். பின்னர், அவ்வழியாக செல்லும் டாக்ஸி ஒன்றை நிறுத்தி டிரைவரிடம், ” காமாத்திபுரா போக வேண்டும்!’ என்றதும், அவர் எங்களை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக பார்த்துவிட்டு, முடியாது என தலையை அசைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அடுத்தபடியாக வேறொரு டேக்ஸியை நிறுத்தி, போகுமிடத்தை சொன்னதும், சில நொடிகள் ஆச்சர்யம் மேலிட எங்களை பார்த்தவர், எங்கள் முதுகிற்கு பின்னால் தொங்கிய கேமராவை பார்த்துவிட்டு, ” நீங்கள் என்ன பத்திரிகையாளர்களா…?’ என கேட்டார். ” ஆமாம்…ஆமாம்..!” என்று பொய் சொன்னோம்.
உடனே எங்களை டேக்ஸியில் ஏற்றிக்கொண்டார். வானுயர்ந்து நிற்கும் பல மாடி கட்டடங்களை அண்ணாந்து பார்த்தபடியே தெற்கு மும்பை வழியாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.இந்த பளபளப்பும், ஆடம்பரமும் கைகோர்த்து காட்சி தரும் இத்தகையதொரு இடத்தில்தான் காமாத்திபுராவும் மறைந்துகொண்டிருக்கிறது என்ற உண்மை எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
நாங்கள் சென்றுகொண்டிருந்த டேக்ஸி, திடீரென ஒரு வளைவில் திரும்பி, சிறிய சாலை ஒன்றில் நுழையவுமே, அந்த வீதியின் வெளிப்புற தோற்றமும், mood ம் திடீரென மாறியது. அதுதான் காமாத்திபுரா என்பதை உணர்ந்துகொண்டோம். உயர்ந்த கட்டடங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. வெறுமனே பழைய, வர்ணம் உதிர்ந்த, அழுக்கு படிந்த கட்டடங்கள் சாலையின் இருபக்கமும் காட்சியளித்தன. உள்ளே செல்ல செல்ல அந்த வீதி மேலும் குறுகிக்கொண்டே போனது. எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்களாக கிடந்தன. காரின் ஜன்னல் கண்ணாடியை இன்னும் அகலமாக திறந்து பார்த்தபோது, நாங்கள் எதிர்பார்த்ததை கண்டோமா என்பதை எங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஒரு இந்தி திரைப்படத்தின் காட்சியை நாங்கள் அங்கு எதிர்பார்த்தோமா? என தெரியவில்லை. வீடுகளில் ஒலித்த பாடல்கள் எங்கள் காதை தொட்டது. கடைகளில் வெற்றிலையும், பூக்களும் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன.
சிகரெட் விற்கும் பெட்டி கடைகளையும், ஒரு சில சிறிய மளிகை கடைகளையும், ஒரு மிகச்சிறிய மொபைல் போன் விற்பனை கடைகளையும் கூட நாங்கள் பார்த்தபடி சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென வீதியின் ஒரு இடத்தில் ஏராளமான ஆண்கள் குரூப் குரூப்பாக பெட்டி கடைகள் முன்பு சிகரெட் பிடித்தபடியே பேசிக்கொண்டு நின்றனர். ஒரு சில ஆண்கள் எங்களது டேக்ஸிக்குள் எட்டி பார்க்கவும் முயன்றனர். நாங்கள் உடனடியாக இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து இருந்துகொண்டோம்.
அங்கு கண்ட காட்சிகளெல்லாம் எங்களுக்கு ஏதோ இந்தியாவின் அண்டை ஏழை நாடு ஒன்றை பார்ப்பது போன்றே இருந்தது. வீட்டு பால்கனியில் துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. குழந்தைகள் வீதிகள் ஓடிக்கொண்டிருந்தனர் அல்லது மாடி வீடுகளின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதன்பிறகுதான் நாங்கள் அவர்களை பார்த்தோம்… அவர்கள் காமாத்திபுரா பெண்கள்.
சிலர் வீதியின் முனைகளில் அல்லது வீடுகளின் முன்னால் தனியாக நின்றுகொண்டிருந்தனர். சிலர் இரண்டு பேர் அல்லது மூன்று பேராக குழுவாக தங்களுக்குள் அரட்டை அடித்து பேசியபடி நின்றுகொண்டிருந்தனர். வழக்கமான ஒரு நாளில் சாதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்கள் போலதான் எங்களுக்கு அது தோன்றியது – அவர்கள் முகங்களை பார்க்கும் வரை!
முகத்தில் அடர்த்தியாக போடப்பட்ட மேக் அப்பும், உதடுகளில் பூசப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூச்சும், புருவங்களில் தீட்டப்பட்ட அடர்த்தியான கண் மையுமாக நின்றுகொண்டிருந்த அவர்களை அழைத்து செல்வதற்காக அவ்வப்போது அங்கு வந்து நிற்கும் வாகனங்களில் அவர்கள் ஏறுகின்றனர். மேக் அப்பில் அவர்கள் முகம் பளீரென காட்சியளித்தாலும், அந்த கண்களில் இத்தொழிலின் மீதான அவர்களது விருப்பமின்மையையும், துயரத்தையும் பார்க்க முடிந்தது.
இதில் எது எங்களை மிகவும் பாதித்தது என்றால், அவர்களது முகம் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், ஒருவித இறுக்கத்துடன் இருப்பதை பார்த்ததுதான். அநேகமாக ஆண்டு கணக்கில் அடக்கி வைத்திருக்கும் அவர்களது துயரங்கள்தான் அவர்களது முகத்தை அவ்வாறு ஆக்கி இருக்கும். மேலும் அங்கே வாழ்வதற்கான அவர்களுக்கு தெரிந்த ஒரே வழியாகவும் அதுவாக இருக்கலாம்.
ஜனத்திரள் நிரம்பிய அந்த வீதியின் வழியாக எங்களது டேக்சி தொடர்ந்து மெதுவாக ஊர்ந்து சென்றது. வீதியின் ஒரு முனையில் வந்ததும் ஒரு சில பாழடைந்த கட்டடங்களை பார்த்தோம். ஒருவருக்கு ஒருவர் நெருக்கடியடித்தபடி நின்றுகொண்டிருக்கும் பெண்களால் நிரம்பி வழிந்தது அந்த கட்டடங்கள். உள்ளே நின்றுகொண்டிருக்கும் பெண்களில் சிலர் கதவுகள் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். சில குழந்தைகளையும் அங்கே பார்க்க முடிந்தது.
மேலும் 12 முதல் 13 வயது வரையிலான சிறுமிகள் சிலரும், பெரிய பெண்களை போன்று மேக் அப் போட்டு, அரைகுறை ஆடையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் தங்களை கவர்ச்சியாக காட்ட முயன்றபோதிலும், அவர்களது உடல் குழந்தைதனத்தையே வெளிப்படுத்தியது.
சாலைக்கு வெளியே ஒரு பெண், ஏறக்குறைய தனது வயதில் இருமடங்கு உடைய தொப்பை வயிறுடன் காட்சியளித்த நபருடன் பேசிக்கொண்டிருந்தார். இறுக்கமான கறுப்பு பனியனும், சிவப்பு நிற டாப்ஸும் அணிந்து நின்ற அந்த பெண்ணின் முகத்தில் அப்பியிருந்த மேக் அப்பை பார்த்தபோது வேதனை கலந்த வேடிக்கையாக இருந்தது. நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த பெண், அந்த நபரை அருகில் உள்ள கட்டடத்தின் உள்ளே அழைத்து சென்றார்.
டேக்ஸியில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு, அவர்களை ஏதோ ஒரு காட்சி பொருள் போன்று பார்ப்பது குறித்து திடீரென எங்களுக்கே வெட்கமாக இருந்தது. எங்களிடம் கேமரா தயாராக இருந்தபோதிலும், எங்களால் அங்கு ஒரு படத்தை கூட க்ளிக் செய்ய முடியவில்லை. அப்படி செய்வது ஏதோ ஒரு அநாகரிகமான செயலாக எங்களுக்கு பட்டது. நாங்கள் அவர்களை புகைப்படம் எடுத்து, அதனை இந்த உலகம் பார்க்கும்படி செய்தால், அது அவர்களது privacy யை எட்டிபார்ப்பது போன்று மட்டுமல்லாது, அவர்களை மேலும் அவமதிப்பது போலவும் ஆகிவிடும்.
இந்நிலையில் எனது உடல் நோயில் விழுந்தது போன்று நான் உணர்ந்தேன். எனது தைரியத்தை யாரோ ஒருவர் பிடித்து முறுக்கியது போன்று எனது அடிவயிற்றில் ஒரு பய பந்து சுருண்டு எழுந்ததைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது கண்களின் முன்னால் நான் பார்த்த அந்த காட்சிகள் எனக்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. இன்னும் என்னால் நான் பார்த்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து எனது பார்வையை அகற்ற முடியவில்லை. ஏதோ ஒரு அழுகிய புண்ணின் வாடையை நுகர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்ட அதே நேரத்தில், அதனை பார்ப்பதில் ஒரு ஆர்வமும் இருப்பதை உணர்ந்தேன்.
கடைசியில் நாங்கள் எங்கள் இடத்திற்கு திரும்ப முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதிகம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இந்த பயணம் எங்களை மிகவும் உலுக்கி போட்டிருந்தது. மீண்டும் மரைன் டிரைவ் கடற்கரைக்கு வந்த உடன், நடக்க முடிவு செய்தோம். ஜில்லென்ற ஃபிரெஷ்ஷான, குளிர்ந்த காற்று எங்கள் முகத்தை தழுவி சென்றது. எங்களுக்கு முன்னால் இருக்கும் பரந்து விரிந்த அந்த கடலை பார்த்தபோது, நாங்கள் எதை பார்த்து வந்தோமோ அதனை மறக்க விரும்பியதாகவே உணர்ந்தேன்.”