முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள்

936

வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.

British newspapers expose cold-blooded killing of LTTE leaders in Sri Lanka (வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின) என்ற தலைப்பில் றொபேட் ஸ் ரீவன்ஸ் என்பவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை த உலக சோசலிஸ்ட் இணையத்தில் (The World Socialist Website) யூன் 03, 2009 அன்று வெளியானது. அதன் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.

கடந்த வாரம் பிரித்தானிய செய்தித்தாள்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மே 18 அன்று ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்வதற்கு சற்று முன்பதாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராசதந்திரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரும் (United Nations secretary general’s chief of staff ) ஈடுபட்டிருந்தார்.

The Guardian and the Sunday Times நாளேடுகள் வி.புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் இருவரும் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரோடு ஒரு ஊடகவியாளர் மற்றும் பிரித்தானிய இராசதந்திரிகளது தூதுக்குழு ஆகிய இடையீட்டாளர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என செய்தி வெளியிட்டன.

The Guardian ஏடு இறப்பதற்கு முன்னர் வி.புலித் தலைவர்கள் நோர்வே நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்கேய்ம் அவர்களோடும் தொடர்பில் இருந்ததாகக் கூறியது. ஸ்ரீலங்காவின் நீண்ட உள்நாட்டுப் போரில் 2002 இல் ஒரு அமைதி உடன்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஒரு சிறப்புத் தூதுவராக கொல்கேய்ம் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Sunday Times ஏட்டில் ஊடகவியலாளர் மேரி கொல்வின் (Journalist Marie Colvin) ”புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டை செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அவர் வி.புலிகள், மற்றும் பிரித்தானியா, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அய்நா அதிகாரிகள் இடையில் தொடக்க தொடர்பு தன் மூலமாக இடம் பெற்றது என எழுதியிருந்தார்.

மேரி கொல்வின் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 5 இலட்சம் தமிழ்மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கலை அரசு முடக்கு வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஆராய வன்னிக்கு களவாகப் போயிருந்தார். உள்நாட்டுப் போர் பற்றி எழுதியவர்களில் மேரி கொல்வின் ஒருவராவர். அப்போது அவர் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரையும் சந்தித்து இருந்தார்.

The Guardian ஏடு எப்படி நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் சிறீலங்கா அரசோடு கடைசிப் பொழுதில் – அவர்கள் சரண் அடைய இருந்த வேளையில் மே 18 காலை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் – ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்தார்கள் என விபரித்திருந்தது.

ஒரு பிரித்தானிய அதிகாரி பிரித்தானியாவின் ஈடுபாடு “பெரும்பாலும் நேரடியாக இல்லை” எனச் சொன்னார். ஆனால் குறித்த கட்டுரை நம்பியாரை மேற்கோள் காட்டி அவர் நியூ யோர்க்கில் இருந்த பிரித்தானிய இராசதந்திரிகளோடும் பெயர் குறிப்பிடப்படாத பிரித்தானிய அமைச்சரோடும் “நேரடித் தொடர்பில்” இருந்ததாகத் தெரிவித்தது. மேலும் நம்பியார் “நியூ யோர்க்கில் உள்ள அய்க்கிய இராச்சிய அலுவலத்தில் இருந்து செயலாளர் நாயகத்துக்கு முறையான முறையீடு இருந்தது” எனச் சொன்னார்.

நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைய நினைக்கிறார்கள் என்ற முன்மொழிவை மேரி கொலினுக்கு நம்பியார் தெரிவித்தார். மேலும் சிறீலங்கா வெளியுறவு செயலாளர் பாலித கோகனாவோடும் அது பற்றிக் கதைத்தாகவும் சொன்னார்.

ஆனால் சிறீலங்கா அரசுக்கு போர்நிறுத்தம் செய்வதற்கான நோக்கம் இருக்கவில்லை. “சிறீலங்கா அரசு வி. புலிகள் சரண் அடைவதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லவில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது” எனச் சொன்னதாக நம்பியார் The Guardian ஏடுக்குத் தெரிவித்தார்.

சரண் அடைவது பற்றி வி.புலிகள் எரிக் சொல்கேய்ம் அவர்களோடு தொடர்ப்பு கொண்டதை அடுத்து அவர் “செஞ்சிலுவைச் சங்கத்தோடும் சிறீலங்கா அரசோடும் தொடர்பு கொண்டார்.”

இதனைத் தொடர்ந்து பாலித கோகொன செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அது பின்வருமாறு இருந்தது. “வெறுமனே படைகளுக்கு ஊடாக வெள்ளைக் கொடியோடு மெல்ல நடக்கவும்! தரப்படும் ஆணைகளுக்கு இணங்க கவனமாகச் செயல்படவும். இராணுவத்தினருக்கு தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிப் பயம் இருக்கிறது.”

மேரி கொல்வின் எழுதிய கட்டுரையில் எப்படி வி.புலிப் போராளிகள் இராணுவத்தின் கடைசிப் படையெடுப்பின் போது ஒரு சிறிய காடு மற்றும் கடற்கரை ஓரமாக ஒரு இக்கட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பெரும் மனவேதனைக்குரிய நிலைமைக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதையும் விபரிக்கிறார்: “அவர்களோடு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பொறிக்குள் அகப்பட்டுள்ளார்கள். அவர்கள் கையினால் தோண்டிய பதுங்கு குழிகளுக்குள் ஓயாத குண்டு மாரிக்கு இடையில் ஒளிந்துள்ளார்கள்.”

“சிறீலங்கா இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்கு தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் வேளையில் பல நாட்களாக நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டேன்” என மேரி கொல்வின் எழுதுகிறார். “நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார். அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியாவிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு அவர்களது அரசியல் தீர்வை வழங்கும் ஒரு ஏற்பாட்டிற்கு வாக்குறுதி தரவேண்டும்.”

உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அய்நா சிறப்பு தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன். சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

Guardian எழுதியிருந்ததை கொல்வின் சான்றுபடுத்துகிறார். மே 18 காலை தான் நம்பியாரோடு உரையாடியபோது சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்சே குறிப்பிட்ட இரண்டு தலைவர்களும் “வெள்ளைக் கொடியை உயரப்” பிடித்துக் கொண்டு சரண் அடைய முடியும் எனத் தனக்கு நம்பியார் சொன்னதாக கொல்வின் சொல்கிறார்.

கொல்வின் சொல்கிறார் “மறுமுறையும் நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு என்னைத் தொடர்பு படுத்தியது. நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.”

“நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டார்கள். சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாக சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார்.”

அதன்பின் கொஞ்ச நேரத்தில் நடேசன் அவர்களோடான செய்மதி தொலைபேசித் தொடர்பை கொல்வின் இழந்துவிட்டார். கொல்வின் தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு வி. புலிகளது தொடர்பாளரோடு தொடர்பு கொண்டு சரண் அடையப் போகும் போது வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்குமாறு சொல்லப்பட்ட கட்டளைகளைச் சொன்னார்.

கொல்வின் மேலும் சொல்கிறார் “கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இந்த வட்டாரம், பின்னர் ஒரு தொண்டு நிறுவனத் தொழிலாளியிடம் பேசியவர், சொன்னார் நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் அணிவகுத்து நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் யந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுட்டது. நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கி சத்தம் போட்டார். “அவர் சரண் அடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த சம்பவம் மே 18 காலை இராணுவம் வி.புலித் தலைமையை இரக்கமற்ற முறையில் விலங்குகளைக் கொல்லுமால் போல் கொன்று குவித்ததைக் கோடிட்டுக் காட்டியது. அநேகமாக வி.புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட எல்லா உயர்மட்ட விடுதலைப் புலித் தலைவர்களும் இவ்வாறுதான் போதுமான விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இறந்திருக்க வேண்டும். ஸ்ரீறீலங்கா அரசு பிரபாகரன் தப்பி ஓடும்போது ஒரு துப்பாக்கிச் சமரில் கொல்லப்பட்டார் எனச் சொல்லியது. ஆனால் அவருக்கும் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவைப் போன்ற முடிவு ஏற்பட்டிருக்கலாம்.

இராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி எதிர்ப்பு மையங்களையும் துடைத்தழித்தார்கள். போர் வலையத்தில் அகப்பட்டுக்கொண்ட இரண்டரை இலட்சம் மக்கள் பற்றி இராணுவம் அக்கறைப்படவே இல்லை. பெரும்பாலும் அவரும் நடேசன் மற்றும் புலித்தேவன் போல் மரணத்தை சந்தித்திருப்பார். இராசபக்சே பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை மறுத்துரைக்கும் போது அய்நா வின் மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியே கசியவிடப்பட்ட அறிக்கைகள் சனவரி (2009) தொடக்கம் 20,000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்கிறது.

 

SHARE