பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியேரை அழைத்து யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி சந்திப்பொன்றை இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை காங்கேசன்துறையில் உள்ள இராணுவ விடுதியில் நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது மாணவர் ஒன்றியத் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:
பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் வகையில் அரசியல் பின்புலங்களுடன் மாணவர்கள் செயற்படுகின்றனர். அதனால் அமைதி நிலை பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் கைவிடவேண்டும்.
நீங்கள் பல்கலைக்கழகத்துக்குள் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள். எனவே, இதனை அனுமதிக்க முடியாது – என்றார்.
விடுதிகளுக்குள் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் அனுமதியின்றிப் புகுவது தொடர்பிலும் விடுதிகளில் தங்கியுள்ள சிங்கள மாணவர்களுக்கு இராணுவத்தினர் அனுமதியின்றி உணவு வழங்குவது குறித்தும் மாணவர்களால் இராணுவத் தளபதிக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன் இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயங்கள் குறித்துத் தாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி உறுதியளித்தார்.
இதேவேளை, பீடாதிபதிகள் சிலரும் இராணுவத் தளபதியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நவம்பர் மாதம் இவ்வாறான நெருக்கடிகள் வருவது வழமை. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைக் கடைப்பிடிப்பதற்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மாணவர்கள் அரசியல் பின்புலத்துடன் செயற்படுகின்றனர் என இராணுவத் தளபதி குற்றம்சாட்டிய போது அதனை மாணவப் பிரதிநிதிகள் மறுத்தனர்.
எனினும், “அப்படி சொல்லமுடியாது. சிலர் அரசியல் பின்புலத்துடனேயே செயற்படுகின்றனர்” என பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார் எனக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர்.