முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம்.

359

 

thayaparanமுள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பிய சம்பவங்கள் சான்றாகும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக அமைய வேண்டும். அதில் யாரும் அரசியல் செய்ய முற்படக் கூடாது.

ஆனால் கடந்த வாரம் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது அந்த நிகழ்வை குழப்ப வேண்டும் என்பதிலேயே குறியாக நின்றதை பார்க்க முடிந்தது. இந்த குழப்பங்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

2009 மே மாதத்தின் பின்னர் இறுதி யுத்தத்தின் போது இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மகிந்த ராசபக்ச அரசு தடை விதித்திருந்தது. அஞ்சலி செலுத்த முற்பட்டவர்கள் மீது இராணுவம் கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தது.

இதன் பின்னர் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றத்தின் பின்னரே முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கு அந்த மண்ணில் அஞ்சலி செலுத்துவதற்கான சூழல் உருவானது. இந்த சூழலை உருவாக்கிய தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அந்த மண்ணில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தார்மீக உரிமை உண்டு.
இதனால்தான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை கடந்த ஆண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வருகிறது.

ஆனாலும் முள்ளிவாய்க்கால் என்ற ஒரு இடத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு அஞ்சலி நிகழ்வை நடத்த முடியாத நிலையில் முள்ளிவாய்க்கால் என்ற பரந்த கடற்கரை வெளியில் நான்கு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது. இது தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமையீனத்தையும் பலவீனத்தையும் எடுத்து காட்டுகிறது.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்தவர் வடமாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு நிகழ்வை நடத்தியது. கடந்த பொதுத்தேர்தலில் சிலந்தி சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி ஒரு நிகழ்வை நடத்தியது. இது தவிர அருட்தந்தை எழில்ராஜன் தலைமையிலான ஒரு குழுவும் அஞ்சலி நிகழ்வை தனியாக நடத்தியது.

மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தனித்தனியாக நான்கு தரப்பினர் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தினர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாணசபை நடத்திய நினைவேந்தல் நிகழ்விலேயே அதிகம் மக்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்விலேயே குழப்பங்களும் ஏற்பட்டன. இந்த குழப்பங்கள் திடீரென ஏற்பட்டதாக கூற முடியாது. ஏற்கனவே திட்டமிட்டே இந்த குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை என்பதை நிகழ்வுகளை அவதானிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். குழப்பங்களை ஏற்படுத்தியவர்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்வை குழப்பியது சரியான செயல்தான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் குழப்பத்தை விழைவித்தது சரியான செயல் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஒரு அரசியல்வாதி கூறுவதை ஜனநாயகத்தை மதிக்கும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பொது எதிரியாக இருந்தால் கூட அஞ்சலி நிகழ்வு ஒன்றில் ஒருவர் உரையாற்றும் போது அதை இடைமறித்து கேள்வி கேட்டு அந்த அஞ்சலி உரையை குழப்ப முற்படுவது அநாகரீக செயலாகும். அத்தகைய அநாகரீக செயலை வரவேற்பது வளர்ந்து வரும் அரசியல் கட்சி தலைவருக்கு அழகல்ல.

வடமாகாணசபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உட்பட்டவர்கள் கடந்த முறையும் கலந்து கொண்டார்கள்.

வடமாகாணசபை ஏற்பாடு செய்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன.

நிகழ்வு ஆரம்பமான வேளையில் அந்த நிகழ்வில் சம்பந்தன் போன்றவர்கள் கலந்து கொள்ள கூடாது, அஞ்சலி செலுத்தக் கூடாது என யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற லலிதா கந்தையா என்ற பெண் கூச்சலிட்டார்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தயாபரன் என்பவர் சம்பந்தனின் பேச்சை இடைநிறுத்தி கேள்வி கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இந்த இரண்டு சம்பவங்களும் தற்செயலாக அல்லு குழப்பங்களை விளைவித்தவர்கள் இயல்பாக தாங்களாக நினைத்து இதனை செய்தார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. இந்த குழப்பங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரவேற்றாலும் குழப்பங்களை விளைவிப்பதற்கு இவர் தூண்டினார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் சம்பந்தன் அவர்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த இரு அரசியல்வாதிகளே இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் சம்பந்தன் போன்றவர்கள் அஞ்சலி செய்ய கூடாது என குழப்பங்களை விளைவித்த லலிதா கந்தையா என்ற பெண் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவராவார். இவர் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக செயற்படுபவர். சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றவர்களின் கொடும்பாவிகளை யாழ். நகரில் கட்டி இழுத்த இந்த மாகாணசபை உறுப்பினரே இந்த பெண்ணை முள்ளிவாய்க்காலுக்கு தன்னுடன் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் தனது உறவினர்களை இழந்த பெண்ணின் துயரமாக இப்பெண்ணின் ஆவேசத்தை காணமுடியவில்லை. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அதனை பார்க்க முடிகிறது.

இந்த பெண்ணின் கோரிக்கை கூட நியாயமற்றதாகும். முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களுக்கு யாரையும் அஞ்சலி செலுத்த கூடாது என தடுக்க முடியாது. சிங்கள மக்கள் கூட அண்மையில் முள்ளிவாய்க்காலுக்கு வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளை அஞ்சலி செலுத்த வேண்டாம் என தடுப்பது அவர்களை தெரிவு செய்த மக்களை அவமதிப்பதாகும். சம்பந்தன் திருகோணமலை மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இந்த வகையில் அவர் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை உண்டு. அதனை தடுப்பது ஜனநாயக விரோத செயலாகும். அதனை யாரும் தடுக்க முடியாது.

பொது எதிரியாக இருந்தால் கூட இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரும் போது அவரை தடுப்பது நாகரீகமான செயல் அல்ல. குழப்பத்தை விளைவித்த பெண்ணின் குடும்பம் மட்டும் முள்ளிவாய்க்காலில் இறக்கவில்லை. வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். தன்னை தெரிவு செய்த மக்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் தார்மீக உரிமை விக்னேஸ்வரன், சம்பந்தன், மாவை சேனாதிராசா என அனைவருக்கும் உண்டு.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்பதை ஏற்கனவே அறிந்து கொண்ட இந்த தரப்பு அப்பெண்ணை வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாவது குழப்பம் ஊடகவியலாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட வடமாகாணசபையின் கீழ் இயங்கும் உள்ளுராட்சி சபையில் அரச ஊழியராக பணியாற்றும் இரத்தினம் தயாபரன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனே தனது காரில் தயாபரனை அழைத்து வந்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்த கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லும் நிலைக்கு வந்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சியுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அடிக்கடி ஊடகவியலாளர் மகாநாடுகளை நடத்தி தமிழரசுக்கட்சி மீதும் அதன் தலைவர் சம்பந்தன் மீதும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சம்பந்தன் மீது ஏவுகணைகளை வீச சுரேஷ் பிரேமச்சந்திரன் தவறுவதில்லை. அதன் ஓரு அங்கமாகவே சம்பந்தனை அவமானப்படுத்தவதற்கு தயாபரன் என்ற அம்பை சுரேஷ் பிரேமசந்திரன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி உரையாற்றிய பின் மக்கள் பிரதிநிதிகளின் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது

சம்பந்தனுக்கு பின்னால் தயாராக நின்ற தயாபரன் பேச்சின் இடையே குறுக்கிட்டு பயங்கரவாதத்தை தோற்கடித்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த நீங்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கோர முடியும் என கேட்டார். அரசியல்வாதிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கேள்வி கேட்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஜனாதிபதியோ பிரதமரோ எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு ஓருநபரோ அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருக்கும் போது அல்லது மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது இடையே குறுக்கிட்டு குழப்ப கூடாது அது அநாகரீக செயல்மட்டுமல்ல, ஊடக தர்மமும் அல்ல.

ஊடகவியலாளர் மகாநாட்டில், அல்லது ஊடகவியாளர் சந்திப்பில் அரசியல்வாதிகளிடம் அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் ஊடகவியலாளர்களிடம் தாராளமாக கேள்வி எழுப்ப முடியும். அல்லது அந்த உரை முடிந்து அந்த இடத்தை விட்டு வெளியே வரும் போது நிகழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கேள்வி கேட்க முடியும். இதுவே ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் ஒழுக்க வரைமுறையாகும். ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் பற்றி கற்பிப்போரும் இதையே கற்பிக்கின்றனர். இந்த ஒழுக்க நெறி எதுவும் இன்றி நிகழ்வு ஒன்றை குழப்பும் வகையில் நடந்து கொள்வது தமிழ் ஊடகவியலாளர் அனைவருக்கும் இழுக்கான செயலாகும்.

இந்த அநாகரீக செயலை செய்த நபர் மீது இதுவரை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போன்ற ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதுதான் இதை விட வேதனையான விடயமாகும்.

இந்த குழப்பங்கள் நடைபெற்ற போது வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு இருந்த போதிலும் அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் அதனை தடுக்க முற்படவில்லை. அதன் பின்னர் இந்த நிலைமைகளை மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவு படுத்த வாருங்கள் என சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்த போதும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

எனினும் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வின் போது குழப்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனங்களையும் கவலைகளையும் வடமாகாணசபை தெரிவித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிக அமைதியாக உணர்வுபூர்வமாக தமிழ் மக்கள் அனைவரும் பேதங்களை மறந்து அனுஷ்டிக்க வேண்டிய ஒன்றாகும். முள்ளிவாய்க்கால் குழப்பங்களுக்கான களமோ, அரசியல்பேதங்களையும் குரோதங்களையும் வளர்க்கும் களமோ அல்ல.

இதனை முள்ளிவாய்க்காலில் குழப்பங்களை ஏற்படுத்தியவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.   ( இரா.துரைரத்தினம் )

SHARE