முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், மதவிழும்மியங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கி அழிப்பதென்பது பௌத்த இனவாதிகளின் நீண்ட காலத் திட்டமாகும்.

419

 

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களும், ஏனைய துறைத் தலைவர்களும் செய்வதறியாது அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதம மந்திரி ரணில் விக்கிரசிஙகவையும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதிகளினால் முஸ்லிம்களின் மீது மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வன்செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கதிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கோரிக்கைகளும் முஸ்லிம்களினால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் காலத்திலும், இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும் பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அவதானிக்கின்ற போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழிப்பதனையும், பள்ளிவாசல்களை தாக்கி அழிப்பதாகவுமே பிரதான இலக்காக் கொண்டுள்ளமையை அறியக் கூடியதாக இருக்கின்றன. ஆதலால், முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதொரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

திட்டமிடப்பட்ட சதி 

முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், மதவிழும்மியங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கி அழிப்பதென்பது பௌத்த இனவாதிகளின் நீண்ட காலத் திட்டமாகும். இதனை நாம் அநாகரிக தர்மபாலவின் காலம் முதல் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழிப்பதற்காக பௌத்த இனவாதிகள் நாட்டின் பல பாகங்களில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இதன் போதெல்லாம் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் மக்களை ஆத்திரமடையச் செய்து முஸ்லிம்கள் குழப்பவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கு பல தாக்குதல்களை முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட போதிலும் முஸ்லிம்கள் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை. முஸ்லிம்கள் இவ்வாறு இருப்பது கோழைத்தனமல்ல. இரண்டு இனங்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதனால் இனவாதிகளே இலாபமடைவார்கள் என்பதனை முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்.
அளுத்தகம, பேருவளை, தர்காநகர், ஜிந்தோட்ட ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குதல்களை பௌத்த இனவாதிகள் தொடுத்ததன் நோக்கம் முஸ்லிம்களும், சிங்களவர்களும் மோதிக் கொள்ள வேண்டுமென்பதாகும். மேற்படி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பாரியதொரு இனமோதல் ஏற்படும் என பௌத்த இனவாதிகள் கணிப்பிட்ட போதிலும் முஸ்லிம்களின் அமைதியும், பொறுமையும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற தடையாக அமைந்து விட்டது.
இதனால்தான் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாரை மாவட்டத்தில் அம்பாரை நகரில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் மீதும், உணவகங்கள் மீதும் தாக்கினார்கள். ஆயினும், முஸ்லிம்கள் ஆத்திரப்பட்டார்கள். தமது ஆத்திரத்தை தீர்த்து விட்டால் பௌத்த இனவாதிகளின் நோக்கம் நிறைவேறுவதற்கு ஏதுவாக அமைந்திடும். அம்பாரை உள்ள முஸ்லிம்களை தாக்க வேண்டுமென்பதற்காகவே கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக உணவகத்தினை உடைத்தார்கள். உலகத்தில் எங்குமில்லை இத்தகைய கருத்தடை மாத்திரைகள்.
அம்பாரையில் தோல்வியடைந்த பௌத்த இனவாதிகளுக்கு தெல்தெனியவில் 03 முஸ்லிம்கள் ஒரு சிங்களவரை தாக்கியமையால் ஏற்பட்ட மரணம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், பள்ளிவாசல்களையும் தாக்குவதற்கும், தீ வைப்பதற்கும் தோதாகிப் போய்விட்டது.
சிங்களவர் ஒருவரை 03 முஸ்லிம்கள் தாக்கினார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 03 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இச்சம்பவத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத கடைகளும், பள்ளிவாசல்களும், வீடுகளும் தாக்கப்பட்டமையானது நிச்சயமாக இன ரீதியான குரோத நடவடிக்கையாகும். முஸ்லிம்களை தாக்குவதற்கு வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்கிய பௌத்த இனவாதிகளுக்கு தெல்தெனியவில் நடைபெற்ற சம்பவம் பிரச்சினையை முஸ்லிம்களே பௌத்த இனவாதிகளின் கைகளுக்கு கொடுத்தாகி விட்டது.
இதனால், முழு நாட்டிலும் உள்ள பௌத்த இனவாதிகள் கண்டி மாவட்டத்திற்கு வந்து குவிந்தார்கள். மரணமடைந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடனே தமது திட்டத்தின் பிரகாரம் தெல்தெனிய, திகன, பல்லேகல, அக்குறனை, தென்னங்கும்புர, நாங்கல்ல, அல்தெனிய, ஹேதெனிய, பேராதெனிய, மெனிக்கின்ன என கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை தாக்கி சேதப்படுத்தினார்கள். பௌத்த இனவாதிகள் தங்களின் இனவெறித் தாக்குதலை கேகாலை, மாத்தளை மாவட்டங்களிலும் விஸ்தரித்துள்ளார்கள்.
முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸ்ஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரிகள் பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னாலேயே முகங்களை மறைத்துக் கொண்டு கையில் தாக்குவதற்குரிய ஆயுதத்தையும், கடைகளையும், வீடுகளையும், பள்ளிவாசல்களையும் எரிப்பதற்குரிய பொருட்களையும்  கையில் வைத்துள்ளார்கள். பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையிலேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் வெறும் பார்வையாளர்களாக நின்றுள்ளார்கள். ஆதலால், இளைஞனின் மரணத்தை கருப் பொருளாக வைத்து திட்டமிட படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதானது அதிகாரத் தரப்பினரின் பின்புலத்தில் உள்ள சக்தியின் துணையால்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று முஸ்லிமகள் சந்தேகங்களை தெரிவிக்கின்றார்கள். இதில் நியாயமில்லை என்று கூறவும் முடியாது.
தெல்தெனிய மற்றும் திகன பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆதலால், முஸ்லிம்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை மூடுமாறும், வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாமென்றும் பொலிஸார் வழங்கிய அறிவிப்பை முஸ்லிம்கள் முழுமையாக நம்பினார்கள். ஆனால், நடந்தவைகளைப் பார்க்கின்ற போது எல்லாம் திட்டமிடப்பட்ட சதியாகவே உள்ளன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும், பள்ளிவாசல்களையும், வீடுகளையும் பாதுகாப்பதற்குரிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட பொலிஸார் அப்பொறுப்பை நிறைவேற்றவில்லலை. மாறாக தாக்குதல்தாரிகளுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவே இருக்கின்றன.
இதே வேளை, முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களினாலேயே அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களே முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வளைத்தளங்களில் ஒரு சில சிங்களவர்கள் இனவாத்தைத் தூண்டும் நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இவர்களின் கருத்துக்களும் இந்த வன்செயலுக்கு காரணமாகும். இத்தகையவர்களை கைது செய்து மிகப் கூடிய தண்டனை வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் அசமந்தம்

அம்பாரை மாவட்டத்தில் இல்லாததொரு பிரச்சினையை இருப்பதாக காண்பித்து முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கிய பௌத்த இனவாதிகளின் தாக்குதலின் வலி சற்றும் குறையாத நிலையில் கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அவதானிக்கும் போது அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாப்பதில் அசமந்தமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
முஸ்லிம்களும், பள்ளிவாசல்களும், வீடுகளும், உடமைகளும் தாக்கப்படும் போதெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வீரராவேசத்துடன் அறிக்கைகளை விடுத்து முஸ்லிம்களை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கும் அறிக்கை அரசியலை தவிர்க்க வேண்டும். முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது அதில் குளிர்காயும் போக்கையும் தவிர்க்க வேண்டும். அம்பாரை தாக்குதல் நடந்து மறுநாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் அம்பாரைக்கு வருகை தந்தார். பின்னர் நான்கு நாட்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒலுவிலுக்கு வந்தார்கள். இவர்கள் அம்பாரைப் பள்ளிவாசலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அம்பாரைப் பள்ளிவாசல் மற்றும் கடைகளின் தாக்குதலை பார்வையிடாது ஒலுவிலில் அது பற்றி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் தயாகமகேவின் வேண்டுகோளின் படியே அம்பாரைக்குச் செல்லவில்லை என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். இந்த வருகை கூட ஓலுவில் துறைமுக அபிவிருத்திற்கான வருகையாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். அவருக்கு முஸ்லிம்களை விடவும் தயாகமகே முக்கியமானவராக உள்ளார். மேலும், அம்பாரை மாவட்டத்தின் சாரதியும், நடத்துநரும் நாங்களே என்ற ரவூப் ஹக்கீமின் கூற்று பிழைத்துள்ளது. தயாகமகேதான் சாரதியாகவும், நடத்துநராகவும் உள்ளார் என்பதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் நிருபணமாகியுள்ளது.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் அரசாங்கத்தின் பின்னணியைக் கொண்டதாக இருக்குமோ என்று தாம் சந்தேகப்படுவதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் (06.03.2018இல்) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் ஆகியவற்றை திசை திருப்புவதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளதாகவும் ஹரீஸ் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இதே வேளை, அமைச்சர்கள் றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர்களும் அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்துள்ளார்கள். அரசாங்கம் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்கள்.

முஸ்லிம்களின் சந்தேகம்

அரசாங்கத்தின் மீது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகங் கொள்வது போன்று முஸ்லிம்களும் சந்தேகங்களைத் தெரிவிக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை மேற்கொண்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை கட்டவிழ்த்துள்ளார்கள். அவர்கள் யார் என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்கள். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அரசாங்கத்தினர் தெரிவிக்கின்றார்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்றால், அதனைச் செய்தவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள் என்றால் ஏன் கைது செய்வதில் அரசாங்கம் காலதாமதத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது என்று முஸ்லிம்கள் கேட்கின்றார்கள். மேலும், அரசாங்கத்திற்கு எதிரானவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைகள் என்றால் அதனை தடுப்பதற்குரிய முன் ஆயத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளாமல் இருந்தமை எதற்காக? அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வன்செயலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொலிஸார் அதனை தடுக்காது பார்த்துக் கொண்டிருந்தமை எதற்காக? இத்தகைய பொலிஸாருக்கு எதிராக அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? மாற்று அணியினர் அம்பாரை சம்பவம் முதல் இன்று வரைக்குமாக அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக வன்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதனைத் தடுக்கக் கூடிய படைப்பலம் உள்ள போதிலும் அதனைப் பயன்படுத்தாமைக்கான காரணம் யாது? இக்கேள்விகளுக்கு சரியான பதில் என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலேயே அமைந்துள்ளது. ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆமை வேகத்திலும், முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் குதிரை வேகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆதலால், அரசாங்கம் முஸ்லிம் மக்களை தமது தேவைக்காக வன்முறைக்குள் அகப்பட வைத்துள்ளதா என்று முஸ்லிம்கள் சந்தேகிக்கின்றார்கள். 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக இருந்த போது கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் முஸ்லிம்களின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை தீ வைத்து அழித்தார்கள். அதன் போதெல்லாம் பொலிஸார் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து அநீயாயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது போலவே தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு அரசாங்கத்தின் மீதும், மாற்று அணியினர் மீதும் மாறிமாறிச் சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் முஸ்லிம்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையை அரசாங்கம் செய்யத் தவறியுள்ளது என்பது உண்மையாகும். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு எதிராக அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இந்தளவிற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமைதால்தான் திகன பிரதேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்ததன் பின்னர் மிகவும் மோசமான அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பல பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன.

எதிர்க் கட்சிக்கு செல்லுங்கள்

முஸ்லிம்கள் மீது இரவிலும், பகலிலும் தொடர்ச்சியாக பௌத்த இனவாதிகள் தடைகளின்றி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் தமது அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டுமென்று முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் பொதுவாக சமூக சிந்தனை குறைந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் போட்டி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது அறிக்கைகளை காத்திரமாக முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தையும் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் மக்கள் நல்லாட்சியில் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துக் கொண்டாலும், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களாகவே உள்ளார்கள்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அளுத்கமவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது அழுதார்கள். என்றாலும் அரசாங்கத்தின் கதிரைகளை விடுவதற்கு மனமில்லாதவர்களாகவே மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்தார்கள். தற்போது மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதனை விடவும் மோசமாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனையிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நான் எதிர்க் கட்சி வரிசைக்குச் செல்லப் போகின்றேன் எனத் தெரிவிக்கவில்லை. ஆளுங் கட்சி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெளிவாகத் தெரிந்த போதிலும் இன்னும் எதனைச் சாதிப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பு ஆசனங்களை வெப்பமேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
இதே வேளை, முஸ்லிம் மக்கள் தற்போது தாக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய தீர்க்கமான உரை முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் முஸ்லிம்கள் மத்தியில் ஹீரோவாகியுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணிக்கு முஸ்லிம்களின் ஆதரவும் அதிகரித்துள்ளது.
மறுபுறத்தில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கண்டி மாவட்டத்திற்குச் சென்று முஸ்லிம்களை சந்தித்த வேளையில் மிகவும் காரசாரமாக அங்குள்ளவர்கள் கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக விசனம் தெரிவித்துள்ளார்கள்.
முஸ்லிம்களின் மீதான காட்டுமிரட்டிச் செயற்பாடுகளை தூண்டுவதில் முன்னணியில் உள்ள பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசாரத் தேரர் அடித்தால் அடிப்போம் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இது பௌத்த நாடு. முஸ்லிம்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்று நாங்கள் தெரிவித்துள்ளோம் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவசர காலச் சட்டம்

திட்டமிட்ட வகையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 நாட்களுக்கு அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் 2009ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. இச்சட்டம் மீண்டும் 07 வருடங்களின் பின்னர் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டில் இடமபெற்றுக் கொண்டிருக்கும் இனரீதியான வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு அவசகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் இச்சட்ட மூலம் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் அமுலில் இருந்த காலத்தில் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலர் இன்றும் சிறையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், அவசரகாலச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுமா என்று முஸ்லிம்கள் கேட்கின்றார்கள். ஆயினும் பொலிஸார் நடுநிலையாகச் செயற்படும் போது இச்சட்டம் வன்செயல்களை தடுப்பதற்கு துணை செய்யும் என்பதில் சந்தேகங் கொள்ளத் தேவையில்லை.

விழிப்புடன் இருத்தல்

இதே வேளை, முஸ்லிம்கள் தைரியத்தை இழக்காதிருக்க வேண்டும். தங்கள் மீதான தாக்குதல்கள் எந்த உரூபத்தில் வருமென்று நிச்சயிக்க முடியாது. அதனால், விழிப்பாகவும் இருக்க வேண்டும். தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பலி வாங்குவதற்காக முழு பௌத்த மக்களும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதற்குரிய சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை முழு நாட்டிலுமுள்ள பௌத்த இனவாதிகள் இணைந்து மேற்கொள்கின்றார்கள். இதில் அரசாங்கத்தில் உள்ளவர்களும், எதிர் அணியில் உள்ளவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் சந்தேகங்கள் குறித்து முஸ்லிம்கள் மாத்திரமல்ல, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
SHARE