முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பதியும் பணிகளில் யாழில் பொலிஸ் புலனாய்வுத்துறை!

593

வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி?

யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை முஸ்லிம் வியாபாரிகளை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை எதற்காக முஸ்லிம் வியாபாரிகளிடம் மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டும்? இதற்கான காரணம் என்ன என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் இன்றைய தினம் 3 ஜூலை 2014 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில், “நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தாக்குதல் நடைபெற்று இன்னமும் முழுமையாக ஓய்வுறாத சூழலில் இத்தகைய தகவல் திரட்டொன்றினை பொலிஸார் எதற்காக மேற்கொள்கின்றார்கள்?

அண்மையில் நாட்டில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கோர இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள், எனவே அதன் காரணத்தினாலா எமது தகவல்கள் திரட்டப்படுகின்றன போன்ற முக்கிய ஐயங்கள் அவர்கள் மத்தியில் எழுகின்றன.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மேற்படி தகவல் குறித்து என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும், அவர்களிடம் தோன்றியிருக்கின்ற அச்ச உணர்வை நீக்க வேண்டிய தேவையும் எனக்கிருக்கின்றது.

எனவே மேற்படி விடயம் குறித்து தங்களிடம் இருந்து எழுத்துமூல பதிலொன்றினை எதிர்பார்த்து நிற்கின்றேன். என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

SHARE