முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், நெருக்கடிகள் அவர்களை வேறு திசைக்கு தள்ளிவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. அதனால் இடம்பெற்ற சம்பவத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் சந்தேகக்கண்கொண்டுபார்க்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்பினால் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற மறுதினமே பாரிய இனமோதல் ஒன்று ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. என்றாலும் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வழிகாட்டல் மூலம் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாமல் தடுக்கப்பட்டது. என்றாலும் எது இடம்பெறக்கூடாது என்று அனைவரும் பிரார்த்தித்தோமோ அது தற்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. இதனையிட்டு கவலையடைகின்றேன்.
முஸ்லிம் சமுகத்துக்குள் இவ்வாறான பயங்கரவாதிகள் இருந்ததையிட்டு ஆச்சரியமடைந்தேன். அதுவும் அரசியல் ரீதியில் நான் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கவாதிகள் குடிகொண்டிருந்துள்ளதாக கேள்விப்பட்டதும் மிகவும் வியப்பாகவே இருந்தது. அரசியல் ரீதியில் எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் பயங்கரவாதிகள் உருவாகுவார்கள் என்று நினைத்தும் பார்க்கவி்லலை.
பயங்கரவாத தாக்குதலுடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் இணைத்துப்பார்க்க கூடாது. ஒருசிலர் செய்த இந்த காரியத்தினால் முஸ்லிம் சமுகம் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றது.தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அடிப்படைவாதிகள் ஆரம்பித்திருக்கும் வன்முறையானது வேறு பீதியை ஏற்படுத்தி வருகின்றது. பயங்கரவாத தாக்குதலுடன் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய நடவடிக்கையால் சாதாரண முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளின் பக்கம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. அதனால் அந்த இடத்துக்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் இந்த பயங்கரவாத அடிப்படைவாத நடவடிக்கைகளை தோற்கடிப்பதற்கு நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து போராடவேண்டி இருக்கின்றது என்றார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவிக்கையில்,
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமைத்தன்மையை ஆராய்ந்து அதனை மேலோங்கச்செய்வதன் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் பிரிந்து செயற்படுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு மோசமான நாட்டையே வழங்கவேண்டிவரும். அதனால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு யார் காரணம் என்று தீர்ப்பு வழங்க நான் தயாராக இல்லை. என்றாலும் இதன் பிறகு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவகையில் எங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்.
அந்தவகையில் முஸ்லிம சமுகத்தில் இடம்பெற்றிருக்கும் மாற்றங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள நாங்கள் தற்போது முன்வந்திருக்கின்றோம். ஆரம்ப காலத்தில் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒரு குடும்பம்போல் வாழ்ந்து வந்தவர்கள். நாகரிக மாற்றத்துடன் எமக்குள்ளும் பிளவு ஏற்பட்டது. அதனடி மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும். எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறிய குழுவினால் பாரிய அழிவை ஏற்படுத்த முடியும். அதற்காக ஒட்டுமொத்த சமுக்ததையும் அந்த குழுவுடன் இணைத்துவிடக்கூடாது. பெரும்பாலானவர்கள் அடிப்படைவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றனர்.
அதனால் எமது பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இனங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.