பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித் தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை போல் பிரிந்து கிடக்கிறார்கள்! இந்தமாதிரியான நுனிப்புல் விமரிசனம் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மாற்றுத் தலைமை பற்றி இன்னமும் கனவு கண்டுகொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் “முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இருந்து தமிழ் அரசியல் தரப்பினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்?”பற்றி வகுப்பு எடுக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை இருக்கிறது தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என ஒப்பாரி வைக்கிறார்கள்.
முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டுப் பேசுவது தவறாகும். அது மாங்காயை தேங்காயோடு ஒப்பிடுவது போன்றதாகும். தமிழ் அரசியல்வாதிகள் முகம் கொடுக்கும் சிக்கல்கள் வேறு முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறு. இரண்டும் வெவ்வேறானவை.
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சுயநிர்ணயம், சுயாட்சி, தமிழ்மொழிப் பயன் பயன்பாடு, சிங்களக் குடியேற்றம், வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள், வேலைவாய்ப்புகள்,மீள்குடியிருப்புப் போன்ற சிக்கல்கள் இல்லை. போரினால் சிறிய தொகை முஸ்லிம்களே பாதிக்கப்படடார்கள். மறுதலையாக தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், அழிவுகள் அனந்த கோடியாகும்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தங்கள் நாடாளுமன்றப் பதவியை விலக்கவில்லை. அமைச்சர் பதவியை வகித்த நான்கு முஸ்லிம்கள், நான்கு இராசாங்க அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என மொத்தம் 9 அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். அதுவும் ஒரு மாத காலத்துக்கு மட்டும் விலகி இருக்கப் போகிறார்கள். ஒரு மாதம் முடிந்த பின்னர் – நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணை முடிந்த பின்னர் – மறுபடியும் தாங்கள் வகித்த பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்! அதுவரை காலியான அமைச்சர் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி தெரிவித்துள்ளார்.
எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில் முதலுக்கு மோசமில்லை. இரண்டு அடி முன் வைப்பதற்கு ஒரு அடி பின் வாங்கியுள்ளார்கள். மேலும் அசாத் சாலி தனது ஆளுநர் பதவியை விலக்கிய மறு கணம் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசாமில் அதே இடத்துக்கு சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். முசாமில் அவர்களைப் பதவி ஏற்க வேண்டாம் என ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் விடுத்த வேண்டுகோளை அவர் முற்றாக நிராகரித்துவிட்டார்!
உண்மையில் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் அலி மூவருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் இறந்த தற்கொலைத்தாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஆளுக்காள் குற்றம் சாட்டுகிறார்கள். மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஆசாத் சாலி சக்திவாய்ந்த நாடொன்றின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் ஆசாத் சாலி தவறாகத் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதால் அவரை மேற்படி தூதுவர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அசாத் சாலிதான் ஞானசார தேரரின் விடுதலைக்கு சனாதிபதி சிறிசேனா அவர்களின் தூதராகச் செயற்பட்டார். அசாத் சாலி போலவே ஆளுநராக இருந்த போது ஹிஸ்புல்லா ஞானசார தேரரை சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஞானசேரர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 6 ஆண்டுகளில் முடிக்கக் கூடிய 19 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் அளுத்கம, பேருவல போன்ற இடங்களில் உள்ள முஸ்லிம் வணிகர்களது கடைகள், மசூதிகள் மீது மேற்கோள்ளப்பட் ட தாக்குதலுக்கு ஞானசார தேரரே தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அசாத் அலியும், ஹிஸ்புல்லாவும் சிங்கள – பவுத்த தீவிரவாதத்துக்கு சாமரம் வீசுகிறார்கள். தட்டிக் கொடுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் நல்ல பிள்ளைகள் எனக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள். சிறிலங்காவில் முஸ்லிம்கள் சிறுபான்மையராக இருந்தாலும் உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என காத்தான்குடி பள்ளிவாசல் தொழுகையின் போது கடந்த வாரம் ஹிஸ்புல்லா பேசியிருந்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாவின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரி ஸகரான் கசிம் உட்பட பெரும்பான்மையினர் காத்தான்குடியைச் சார்ந்தவர்கள்.
மேலும் அத்துரலிய ரத்ன தேரரின் தலதா மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்த சில தேரர்கள் பிழையான கருத்துக்களை வெளியிட்டதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இனவாத கருத்து தேரர்கள் மீது முஸ்லிம்கள் துவேசம் பாராட்ட வழிவகுக்கும் என பௌத்த அமைப்பு கூறுகிறது. இதன் காரணமாக இன முரண்பாடுகள் ஏற்படும் என காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பௌத்த அமைப்பின் தலைவர் அகுனுகல்லே ஸ்ரீ ஜனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்த 16 நா.உறுப்பினர்கள் அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டுவந்து நிறைவேற்றிய 6 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் உறுதிமொழி எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பதவியை இழந்தார்கள். இந்தச் சட்ட திருத்தம் ஓகஸ்ட், 1983 இல் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மக்களிடையே ஒற்றுமையில்லை என்று சொல்லுகின்ற ஒரு சாரார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் தளத்தில் பலவீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கோடு சொல்கிறார்கள். தமிழ்மக்கள் பன்முகப் படுத்தப் பட்ட தேசியத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது ததேகூ க்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசும் மற்றத் தேசியக் கட்சிகளுக்கும் வாக்களித்து அந்தக் கட்சி உறுப்பினர்களையும் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்கிறார்கள். இதில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் குமாரவேலு குருபரன் முன்வரிசையில் இருக்கிறார்கள்.
இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல் இருந்து 3 பேர், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி என்ற காளான் கட்சியில் இருந்து 3 பேர், தனித் தவில் வாசிக்கும் ஆனந்தசங்கரியாரின் தமிழர் விடுதலைக் கூட்டணி, பிறேமச்சந்திரனின் இபிஆர்எல்எவ் தலா 2 உறுப்பினர்கள் ஆக மொத்தம் 10 பேர் தெரிவு செய்யப்பட வேண்டும். எஞ்சியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 4 பேர் தெரிவு செய்யப்பட்டால் போதும்.
அரசியலில் தன்னைப் பெரிய சாணக்கியன் என எண்ணிக்கொள்ளும் கஜேந்திரகுமாரும் பன்முக தேசிய அரசியல் கோட்பாட்டை முன்வைக்கிறார். அவரைப் போல சிந்திப்பவர்கள் அவருக்குப் பக்கப்பாட்டுப் பாடுகிறார்கள்.
தமிழ்மக்கள் பேரவை விக்னேஸ்வரனது முகவர் அமைப்பு என்பதை கஜேந்திரகுமார் இப்போதுதான் கண்டுபிடித்துச் சொல்கிறார். நாங்கள் அப்போதே சொன்னோம் – தமிழ் மக்கள் பேரவை விக்னேஸ்வரன் அரசியலில் எழுந்து நிற்பதற்கான ஒரு கைத்தடி என்று சொன்னோம். அந்தக் கைத்தடியைப் பயன்படுத்தித்தான் தமிழ் மக்கள் கூட்டணி என்ற காளான் கட்சியை கடந்த ஆண்டு 24 ஒக்தோபர் அன்று தொடக்கினார். அது கூட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்மக்களுக்கு உள்ள அரசியல் பலமே அவர்கள் ஒற்றுமையாகத் ததேகூ க்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய 16 நா.உறுப்பினர்களே. இதில் இரண்டு கருப்பு ஆடுகள் வெளியேறிவிட்டன. அது வேறு கதை.
இதில் இன்னொரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டணி உட்பட எல்லா கட்சிகளும் தமிழ்மக்களுக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைப்பாட்சி முறைமையில் வட கிழக்கு இணைந்த சுயாட்சி அரசியல் அமைப்பையே கேட்கிறார்கள். யாரும் பிரிவினை கேட்கவில்லை. தமிழீழம் கேட்கவில்லை.
இன்றைய பூகோள அரசியலில் தனிநாட்டுக் கோரிக்கை, எவ்வளவுதான் அது நியாயமாக இருந்தாலும், அதற்கான ஆதரவு 90 விழுக்காடு இருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியமாகாது. இதனை இசுப்பானிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர தனிநாடு கோரிப் போராடிய கத்தோலினிய மக்களது போராட்டம் எடுத்துக் காட்டாக உள்ளது. முன்னர் அந்தப் பகுதிக்கு இருந்த சுயாட்சியையும் இசுப்பானிய மத்திய அரசு இன்று கைப்பற்றி விட்டது. இது பற்றி இன்னொருமுறை விரிவாகப் பார்ப்போம்.
போர்க் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ்மக்கள் முஸ்லிம் ஊர்க்காவல் படையினரால் அவர்களது வீடுவாசல்களில் இருந்து துப்பாக்கி முனையில் துரத்தி அடிக்கப்பட்டார்கள். போருக்கு முன்னர் நூறு விழுக்காடாக இருந்த பல தமிழ்க் கிராமங்கள் போர்க்காலத்தில் நூறு விழுக்காடு முஸ்லிம் கிராமங்களாக மாறிவிட்டன.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு முஸ்லிம்கள் சந்தர்ப்பவாத அரசியலை கச்சிதமாக கடைப்பிடித்து வருகிறார்கள். அன்று தொட்டு நேற்றுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் இடம்பெறாத அமைச்சர் அவை கிடையாது. அமைச்சர் பதவிகளை வகிப்பதன் மூலம் முஸ்லிம் மக்களது கல்வி, வாணிகம், கைத்தொழில், மருத்துவம், சட்டத்துறை என பல துறைகளிலும் முன்னேறக் காரணமாக இருந்துள்ளார்கள்.
அதற்கொரு சின்ன எடுத்துக்காட்டு ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலத்தில் (22.11.2010 – 28.12.2014) சட்டக்கல்லூரிக்கு 2013 இல் அனுமதி பெற்ற மொத்த மாணவர்களில் (309) 78 பேர் முஸ்லிம்கள். சிங்களவர்கள் 155 பேர். தமிழர்கள் 55 பேர். 2011 இல் 51 பேர் சித்திபெற்றார்கள். 2008 ஆம் ஆண்டு மொத்தம் 242 இல் 14 முஸ்லிம் மாணவர்கள் மட்டும் சித்தி பெற்றார்கள்.
2013 இல் சித்தி பெற்றவர்களில் முதல் 3 இடத்தைப் பிடித்த மாணவர்கள் முஸ்லிம்கள் ஆவர். முதல் 10 இடத்தில் 6 பேர் முஸ்லிம்கள். முதல் 50 இடத்தில் 28 முஸ்லிம் மாணவர்கள் சித்தி பெற்றார்கள்.
மூன்று மொழியிலும் நடத்தப்படும் தேர்வில் 8,000 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 80 விழுக்காடு சிங்கள மாணவர்கள். தமிழில் தேர்வு எழுதுவோர் 5 விழுக்காடு (பெரும்பான்மை முஸ்லிம்). ஆங்கிலத்தில் 15 விழுக்காடு பேர் தேர்வு எழுதுகிறார்கள் ஆண்டு தோறும் 300 மாணவர்கள் சட்டக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப அரசியலுக்கு இன்னொரு உதாரணம் மகிந்த இராசபக்சா அவர்கள் 8 செப்தெம்பர், 2010 இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிய 18 ஆவது சட்ட திருத்தம் ஆகும். அடிப்படையில் அது 17 ஆவது சட்ட திருத்தத்திற்குக் கொண்டுவரப் பட்ட திருத்தம் ஆகும். அதற்கு ஆதரவாக ரவூப் ஹக்கிம் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் வாக்களித்தார்கள். பின்னர் ஏப்ரல் 28, 2015 பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி அவர்களால் கொண்டு வரப்பட்ட 19 ஆவது சட்ட திருத்தத்துக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள். அடிப்படையில் 19 ஆவது சட்ட திருத்தம் மகிந்த இராசபக்ச கொண்டுவந்து நிறைவேற்றிய 18 ஆவது சட்ட திருத்தத்திற்குத் திருத்தமாகும்.
2013 சனவரி 11 அன்று உச்ச நீதிமன்ற முதன்மை நீதியரசர் ஷிறானி பண்டாரநாயக்க அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசியல் குற்றச்சாட்டுத் தீர்மானத்துக்கு ரவூப் ஹக்கீமும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தார்கள்! பின்னர் 8 சனவரி,2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலையடுத்து பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனா அமைச்சரவையின் ஒப்புதலோடு ஷிராணி பண்டாரநாயக்காவை மீண்டும் முதன்மை நீதியரசராக நியமித்தார். அப்போது அமைச்சராக இருந்த ரவூக் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அந்த நியமனத்தை ஆதரித்து கையுயர்த்தினார்கள்!
இப்படியான குத்துக்கரண அரசியலை – சந்தர்ப்பவாத அரசியலை – அறம்சாரா அரசியலை தமிழர் தரப்பு ஒரு போதும் செய்ததில்லை. செய்யப் போவதும் இல்லை. அது எங்கள் குருதியில் இல்லை! எமது அரசியல் தீவினை நீக்கிய அரசியல்.
தமிழர்களது போராட்டத்தை தோற்கடிப்பதற்கு சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக முஸ்லிம் அரசியல்வாதிகளை தாராளமாக கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொடக்கக் கூட்டம் 18 டிசெம்பர், 1949 இல் கொழும்பில் இடம்பெற்றது. அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களில் ஒருவராது அமைச்சர் பதவி ஏற்றது கிடையாது! அமைச்சர் பதவிக்காக 1948 இல் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் விலை போனதை அடுத்தே தமிழ் அரசுக் கட்சி இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நேர்படப் பேசுகிறார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!