ஒவ்வொரு நாடும் தன்பங்குக்கு அணுக்கரு ஆயுதத்தை தயார் செய்து கொண்டே போனால், போர் மூளும் சூழலில் பூகம்பம் வெடிக்கவே நேரும்.அணுக்கரு ஆயுதத்தை எந்தெந்த நாடுகள் வைத்துக்கொள்ளலாம் என்று பிரிப்பது அடக்குமுறை. எல்லா நாடுகளும் கைவிடுவதே அழகுமுறை.
மனிதன் ஆக்கப்பூர்வமான விடயங்களை மட்டுமே உருவாக்க குறிக்கோளடைகிறான். ஆனால், அழிவுதரும் விடயங்களும் எப்படியோ கூடவே வருவதால் குழப்பமடைகிறான். மனிதனுக்கு எதிரிகள் உருவாகாமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவன் தேவைகளுக்காக இயங்குகிற போது, முதலில் எதிரிகள் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகிறார்கள். நண்பர்களை எவ்வளவு பெருக்கினாலும், அது எதிரிகளை போக்கும் மருந்தாவதில்லை. இது போதாதா இந்த மனித குலத்துக்கு, அழிக்கும் சக்தியும் அவசியமாய் ஆவதற்கு. தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டுக்கும் இதுதான் விதிக் கொடுமை. கூரான கற்களில் ஆரம்பித்து வாள், வேல், துப்பாக்கி, பீரங்கி என ஆயுத வளர்ச்சியில் தொடர்ந்த மனிதன், அணுக்கரு ஆயுதம் என்ற உச்சத்தையே உருவாக்கி அச்சத்தில் நிற்கிறான். அணுக்கரு குண்டை ஆவேசம் தீர ஜப்பானில் ஹிரோஷிமா, நாகாஷாயி நகரங்களில் வீசி லட்சோப லட்சம் மக்களை அழித்தும் பார்த்துவிட்டான். அணுக்கரு ஆயுத சோதனையை முதன்முதலாக அமெரிக்காதான் 1945 யூலை 16ல் நடத்தியது. இரண்டாவதாக ரஷ்யா 1961 அக்டோபர் 30ல் ட்சர் பாம்பா (Tsar Bomba) அதைவிட பெரிய (55-58 மெகாடன்கள்) சோதனையை நடத்தியது. அணுக்கரு ஆயுதம் ஒரு நாட்டின் அறிவியல் பலமாகவும், ராணுவ பலமாகவும் கருதப்படுகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா இந்த 5 நாடுகளும் அணுக்கரு ஆயுதம் வைத்திருக்க என்.பி.டி. அங்கீகரித்திருந்தது. பிறகு, இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், வடகொரியாவும் இந்த பட்டியலில் பல அடக்குமுறைகளை கடந்து சேர்ந்துகொண்டது. பட்டியல் மேலும் நீளலாம். அணுக்கரு ஆயுத ம் மற்ற நாடுகளாலும் முயன்றால் உருவாக்க முடிந்ததுதான். அணுக்கரு ஆயுதம் (Nuclear Weapon): அணு(Atom) என்பது ஒரு பொருளின் பிரிக்க முடிந்த கடைசி துகளாகும். அந்த அணுவில் வெளிவட்டத்தில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர்மின்துகள்களும் உள்ளே புரோட்டான்கள் என்ற நேர்மின் துகள்களும் சம அளவில் இருக்கும். இந்த அணுவின் மையப் பகுதியில் நியூட்ரான் என்ற மின்சுமையற்ற அணு உட்கரு இருக்கும். இந்த உட்கருவானது மின்காந்த கதிர்களின் மூலம் தக்க சூழலில் பிளவுக்கு உட்படுத்தப்படும்போது அளப்பறியா சக்தியுடைய கதிர்கள் வெளிப்படுகிறது. கதிரியக்க தனிமங்களான யுரேனியம், பொலோனியம், ரேடியம் போன்றவற்றின் அணுக்கருவை பிளக்கும் போது, அதிலிருந்து, சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் வெளிப்படுகிறது. அதைக்கொண்டே அணுக்கரு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது. எக்ஸ் கதிர்கள், அகச்சிவப்பு கதிர்கள், காமா கதிர்கள் முதலில் வெளிப்படுகின்றன இதன் வெப்பம், அழுத்தம், வினோத தன்மையாலும் புதிரான விபரீத பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆகவே, இனி எந்த நாடும் அணுக்கரு ஆயுத சோதனை நடத்த முன்வரக் கூடாது. அதுக்காகவே, சர்வதேச எதிர்ப்பு தினமாக ஓகஸ்ட் 29 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் நடத்தினாலும், பூமிக்கடியில் நடத்தினாலும் இந்த சோதனையால் உடனடியாக ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம், காலம் கடந்தும் பூகம்பம், நச்சுத்தன்மை என கணிக்கமுடியாத ஆபத்தும் நேர்கிறது. மரணத்தை பூமி தன்மடியில் வைத்திருக்க காரணம், விலங்குகளோ விண்கற்களோ அல்ல, மனிதனின் அணுகரு ஆயுதமே. உலகுக்கே பேரழிவை தரும் இதை தனது நாட்டின் பாதுகாப்பு என்று சொல்லிக்கொள்ளும் போது, மனிதன் ஒரு கோமாளியாக இருப்பதை தொலைநோக்கு சிந்தனையில் பார்க்க தவறிவிடுகிறான். எண்ணத்தில் சுருங்கி விடுகிறான். இரண்டு நாடுகள் எதிரெதிராக ஒன்றையொன்று அழித்துக்கொள்வதை போர் என்று பெயரிட்டதாலும், வெற்றி என்றும் நாட்டுப்பற்று என்றும் மன எழுச்சியை மூட்டியதாலும், மனித அழிவையும் இரு நாட்டின் நாசத்தையும் ஆட்சியாளர்கள் நியாயப்படுத்தவே முடியாது. போரை புறக்கணிக்கும் புரிதலே, ஆறறிவு ஜீவிகளின் உலகுக்கான அடையாளம். |