மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது.

374

இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ)
அரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன

நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியது போதாது என்றபடியால், சர்வதேச நாணய நிதியத்திடமும் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளது. அதற்குப் பிரதிக் கடனாக நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அது நிச்சயமாக சாதாரண மக்களின் மடியில் கை வைப்பதாகத்தான் இருக்கும். இவை ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் நஸ்டங்களைக் குறைப்பது என்ற போர்வையில் ‘எயர் லங்கா’, மத்தள விமான நிலையம் போன்ற அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தனியார்மயமாக்கம் கல்வி, சுகாதாரத துறைகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம்  என்ற அச்சம் எழுந்துள்ளது.‘ யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ’ என்பது போல, சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, இலங்கை அரசு பல அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்த உத்தேசித்துள்ளதாகக் கூறியிருந்தார். நாட்டில் தேனும் பாலும் ஓட வைக்கப் போவதாகச் சொல்லி பதவியைப் பிடித்த தற்போதைய மேற்கத்தைய சார்பான மைத்திரி – ரணில்
அரசாங்கம், பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பொருளாதார நிலை இவ்வாறு மோசமடைந்திருப்பதற்குக் காரணம் .

அந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் தனது தவறுகளை மூடிமறைத்து முன்னைய அரசின் மீது பழி சுமத்த முயற்சிக்கின்றது. இந்த அரசாங்கம் பொருளாதார விடயத்தில் மட்டுமின்றி, சகல துறைகளிலும்,குறிப்பாக இனப் பிரச்சினை, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் எனப் பல விடயங்களில் தோல்வியடைந்துவிட்டதை
நிலைமைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.

2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்ட மத்திரி – ரணில் – சந்திரிக குழுவினர், மகிந்த ராஜபக்சவின் குடும்பச் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுவதுடன், இனப் பிரச்சினையையும் தீர்த்து வைக்கப் போவதாகச் சொல்லியே நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்டனர். இவர்களது வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் கட்சிகளும், சில மலையகத் தமிழ் கட்சிகளும் தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகளை மைத்திரிக்குப் பெற்றுக் கொடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வைத்தனர்.

அதுமட்டுமின்றி, இனப் பிரச்சினையை மைத்திரி தீர்த்து வைப்பார் என்றும், அதுவரை எவரும் குழப்பம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் அடிக்கடி பேசியும் வந்தார். ஆனால் அரசாங்கம் இதுவரை இனப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு ஆரம்ப முயற்சியைத் தன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சில வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலாலும், குறுக்கு வழியில் தமிழ்த் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் எண்ணத்தினாலும் வடக்கு முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் நிறைவேற்றியுள்ள சமஸ்டி கோரும் தீர்மானம், திரும்பவும் இனவாதச் சூழலைத் தெற்கில் கிளப்பிவிட்டுள்ளது. அரசும் தமிழ் தலைமையும் சேர்ந்து திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழ்நிலையால், இனப் பிரச்சினைத் தீர்வு கண்ணுக்கெட்டாத தூரம்வரை தள்ளிப்போய்விட்டது. இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவிக்கும் விடயத்தை கடந்த அரசாங்க காலத்தில் தமிழ் கூட்டமைப்பு மிகப்பெரிய விடயமாக்கிப் பிரச்சாரம் செய்தது.

ஆனால் இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகளில் வெறுமனே மூன்று வீதமே விடுவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த அரசாங்கம் விடுவிக்கத் தீர்மானித்த காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் பத்திரங்களில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படமே அதற்குச் சான்று.

இது ஒருபுறமிருக்க, சாவகச்சேரியில் புலிகளின் தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தை முதலில் அரசாங்கம் சாதாரண ஒன்றாக மூடி மறைக்க முற்பட்டது. பின்னர் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இறுதியுத்த நேரத்தில் சரணடைந்து முன்னைய அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களைத் திரும்பவும் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சுமார் 12,000 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனைவரையும் நாட்டுக்குத் திரும்பி வந்து வாழக்கூடிய சூழ்நிலையைத் தனது அரசு ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி அவர்களை அறைகூவி அழைக்கிறார்.

ஆனால் அவ்வாறு நாடு திரும்பிய சிலர் சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்கதையாக இடம் பெறுகின்றன. இதனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் தாயகத்திற்குச் செல்லும் புலம்பெயர் தமிழர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவைபற்றி இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்து, தொடர்ந்தும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்து வரும் தமிழ் – முஸ்லீம் தலைமைகள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
மலையகத்தைப் பொறுத்தவரையிலும் கூட, முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று 10 ரூபா கூட சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க முடியாத கையறு நிலையில் உள்ளனர்.

முஸ்லீம் மக்களைப் பொறுத்தரையிலும் கூட அவர்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. உதாரணமாக வடக்கில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் அரசாங்கமோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபையோ எவ்விதமான அக்கறையும் இன்றி இருக்கின்றன.

புத்தளத்தில் அகதிகளாக வாழும் வடக்கு முஸ்லீம் மக்கள் கடந்த 26 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றியே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த அரசாங்க காலத்தில் இலங்கையில்; ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களும் நசுக்கப்படுவதாக இன்றைய அரசின் தலைவர்கள் பெருமெடுப்பில் பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். ஆனால், கடந்த அரசாங்க காலத்தைவிட இன்றுதான் ஊடகங்களுக்கு கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

கடந்த அரசாங்க காலத்தில் ஊடகங்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என ஒருபோதும் உத்தரவு போடப்படவில்லை. ஆனால் இன்றோ பிரதமரும், ஜனாதிபதியும், ஊடக அமைச்சரும் மாறிமாறி ஊடகங்களை எச்சரிப்பதுடன், ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கவும் முயல்கின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை “எதிர்க்கட்சி” என அழைக்கக்கூடாது எனக் கட்டளை இடும் அளவுக்கு ஊடகங்கள் மீதான அரசின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது.

விவசாயிகளுக்கு கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட உரம், கிருமிநாசினி என்பனவற்றுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நெல்லுக்கான உத்தரவாத விலையையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத விலையில் நிர்ணயிப்பதற்கு விவசாய அமைச்சு முயற்சிப்பதை, ஒரு விவசாயப் பகுதியான பொலநறுவையிலிருந்து வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டும் காணாமல் இருக்கின்றார்.

இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள, விவசாயிகள், மாணவர்கள், அரச ஊழியர்கள்;, வைத்தியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், தாதியர்கள் என அனைத்துத் தரப்பினரும் முன்னெப்போதையதையும் விட கூடுதலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் மக்களுக்கு கண்ணீர் புகையும், தடியடியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தலும், கைது நடவடிக்கைகளும் பொலிசாரினால் பரிசாக வழங்கப்படுகிறது. மக்களின் சுயேச்சையான போராட்டங்களையும், கூட்டு எதிரணியின் செயற்பாடுகளையும் கண்டு அச்சமடைந்துள்ள அரசு, ஒரு பக்கத்தில் வட மாகாண சபை நிறைவேற்றிய சமஸ்டி தீர்மானத்தையும், சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தையும் காட்டி மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்ற அதேவேளையில், எல்லாவிதமான மக்கள் விரோத அரசுகளும் செய்வதைப் போல அடக்குமுறைச் சட்டங்களை  அமுல்படுத்தி மக்களை அடக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றது.

முன்னைய அரச தலைவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியும் அது மக்களிடம் எடுபடாமல் போன நிலையில், அரசுக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு அடக்குமுறையைத் தவிர அரசுக்கு வேறு தெரிவுகள் இல்லாத நிலை எழுந்துள்ளது. அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதன் காரணமாக, அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டினுள்ளும் பிளவு உருவாகியுள்ளதுடன், அதன் காரணமாக பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பாரிய பிளவுகளும் தோன்றியுள்ளன.

அதுமட்டுமின்றி, இந்த ஏகாதிபத்திய சார்பு அரசை பதவிக்குக் கொண்டு வருவதிலும், அதைத் தொடர்ந்து  ஆதரிப்பதிலும் பங்கு வகிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பனவற்றினுள்ளும் பிளவுகள் தோன்றியுள்ளன. ஆட்சி அதிகாரப் பிடியை படிப்படியாக இழந்துவரும் இன்றைய அரசின் தலைவர்கள், “எங்களை  யாரும் உசுப்ப முடியாது. 5 வருடங்களும் பதவியில் இருந்தே தீருவோம்”  என அடிக்கடி பிதற்றும் வகையில் பயபீதியால்  பிடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

தற்போதைய மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த அபாயத்திலிருந்து நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதானால், மக்களுக்குச் சார்பான ஆட்சி மாற்றம் ஒன்று தேவை. அதற்கு மக்கள் சக்தியைத் திரட்டுவது அவசியமானது. மக்களை அணிதிரட்டி, பொய் வாக்குறுதிகளைச் சொல்லி பதிவிக்கு வந்த இந்த அரசை பதவி விலகுமாறு கோரி வற்புறுத்தும் பரந்துபட்ட இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பது அவசியமானது.
அவ்வாறான ஒரு மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த மக்கள் அரசைப்பதவி விலக வைத்து, புதிய தேர்தல் ஒன்றை நடாத்தி மக்கள் விரும்பும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே நாடு எதிர்நோக்கும் அபாயகரமான நிலைமையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும்

SHARE