ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும் என்பதில் இந்த பேரணையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த அனைத்து நாடுகளும் உறுதியாக உள்ளன என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 28ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகை தந்திருக்கும் கிருபாகரன் எமக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது இதனை தெரிவித்தார்.
இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றிருக்கிறது என்பது இந்த அறிக்கையில் வெளிவரும் என்பது உறுதி, ஆனால் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் மட்டுமல்ல. இன அழிப்பும் அங்கு நடைபெற்றிருக்கிறது என அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.