யாழில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு

207

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் 13வது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05, 06ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளதாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வி. எஸ். துரைராஜா தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் முதன் முறையாக இந்த மாநாட்டை யாழில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இந்த மாநாட்டில் முக்கிய அரசியல் என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வி. எஸ். துரைராஜா தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 05ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், 06ம் திகதி யாழ். ரில்கோ ஹோட்டலிலும் இந்த மாநாட்டை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாடு மொழி சார்ந்த, பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டினை இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மாநாட்டின் முதலாம் நாளில் வடமாகாண முதல்வர் சி. வி. விக்கினேஸ்வரன் , வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். விக்கினேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

மாநாட்டின் முதலாம் நாளில் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. எஸ். துரைராஜா, பொதுச் செயலாளர் துரை கணேசலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அவைத்தலைவர் சீ. வீ.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஈ. சரவணபவன், ம.திலகராஜ், க. கோடீஸ்வரன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்திலிருந்து பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத் தலைவரும், மாநாட்டின் தலைவருமான பேராசிரியர் பஞ்ச இராமலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர்.இராஜவேலு, உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இந்தியத் தலைவர் மாலதி இராஜவேல் ஆகிய பிரமுகர்களும், மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த பல பிரமுகர்களும் இந்த மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு நாங்கள் பொதுவான அழைப்பு விடுத்துள்ளோம். 05ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் அரசியல் வாதிகள் அரசியல் பேச அனுமதிக்க முடியாது.

குறித்த மாநாட்டின் போது தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், காவடியாட்டம், கும்மி, கிராமிய இசை போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மேடையேற்றப்படவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகர் புதுவைச் சித்தனின் இன்னிசைக் கச்சேரியும் இந்த மாநாட்டின் போது விசேடமாக இடம்பெறும்.

இந்த மாநாட்டில் அனைத்துத் தரப்பினரையும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வி. எஸ். துரைராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆர். இராஜசூரியர், மாநாட்டு ஊடகப் பொறுப்பாளர் தே. செந்தில்வேல் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE