யாழில் வாள்வெட்டுக்கும்பலில் ஐவர் பொலிஸாரால் கைது….

312

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டுச்சம்பவம் திருட்டு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியே இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று (21) யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் – தொட்டிலடிச் சந்தியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது – 37) என்பவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திருடப்பட்டவை என்று பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

SHARE