யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் அநுராதபுரம் சிறையில் அடைப்பு!

560
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுள் ஒருவரான சுவிஸ் நாட்டு இலங்கைப் பிரஜை சசிகுமார் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன் பின்னர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 129 பேரை கைது செய்திருந்தனர். இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர்.

இதன்படி 4 பிரிவுகளாக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும் இரண்டாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பேரை ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மூன்றாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 33 பேரையும் 4 ஆவதாக ஆஜர்படுத்தப்பட்ட 14 பேரையும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கறிஞர்கள் எழுந்து நின்று பொலிஸாருடன் இணைந்து பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கும் அளவுக்கு இடம் போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வித்யாவின் கொலை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 சந்தேநபர்களின் விளக்கமறியல் உத்தரவு, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபரான கொழும்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் அதீத நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

2ம் இணைப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களையும், நீதிமன்றம் மீதான தாக்குதலில் கைதான சந்தேக நபர்களையும் அனுராதபுரம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் குறித்த சந்தேக நபர்களை யாழ்.சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்கள் மீது தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.

இதேவேளை இன்றைய தினம் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி சந்தேக நபர்களை அனுராதபுரம் கொண்டு செல்ல பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

 

SHARE