யாழ். நீர்வேலி பகுதியில் வளர்ப்புத் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.  சிறுமி மீது கொடூரத் தாக்குதல்

492

யாழ். நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு மனிதாபிமானம் கொண்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஈவிரக்கமற்ற அந்த வளர்ப்புத் தாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இது வழக்கமாக இடம்பெறும் சம்பவம் என்பதாலும், அந்தக்குடும்பத்தினரை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதாலும், அயலவர்கள் இப்பிணக்குக்குள் மூக்கை நுழைப்பதில்லை.

ஆனால், இன்று அச்சிறுமியின் அவலம் மோசமாக கேட்கவே, தொடர்ச்சியாக இடம்பெறும் இக்காண்டுமிராண்டித் தனத்தை வெளிப்படுத்தி, குறித்த பெண்ணை நீதி விசாரணையின் முன் நிறுத்துவதற்காக, அயலவர் ஒருவர் காணொயாக அச்சம்பவத்தை பதிவு செய்து பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அச்சிறுமியை, குறித்த பெண் தடியினாலும், கத்தியினாலும் மிக மோசமாக தாக்கும் காட்சி பதியப்பட்டு உள்ளது. இக்கோர சம்பவத்தை 3 வயது மதிக்கத்தக்க இன்னொரு சிறுவன் பார்த்துத் திகிலடைந்து நிற்கின்றான்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால், தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்கத்தனமாக தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய சிறிய தயார் கைது

யாழ். நீர்வேலி பகுதியில் சிறுமி மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய சிறிய தாய் இன்று (வியாழக்கிழமை) மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிறுமி மீது ஈவிரக்கமற்ற முறையில் குறித்த பெண்மணி தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி இன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE