யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்கள் – இன்றும் விசாரணை!

299

கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளன.

குறித்த மனு மீதான விசாரணைகள் நேற்றைய தினம்,  ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இடம்பெற்றன. இந்த நிலையிலேயே மேலதிக விசாரணைகள் இன்றும் தொடரவுள்ளன.

அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பலரினால், இவ்வாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE