யுத்த குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படக்கூடிய படுகொலைகள் இடம்பெற்றன

350

யுத்த குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படக்கூடிய படுகொலைகளை இலங்கையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பும் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விசாரணை அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் என  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கை குறித்து விசாரணை மேற்கொண்ட அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை பாதுகாப்பு படையினரும், அவர்களுடன் தொடர்புபட்ட துணைப்படையினரும் பொதுமக்கள் மற்றும் ஏனையவர்களிற்கு எதிராக பரந்து பட்ட படுகொலைகளில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

குறிப்பிட்ட சில காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், வர்த்தகர்களும் இலக்கு வைக்கப்பட்டனர். ஆனால் படுகொலை செய்யப்பட்டவர்களில் அப்பாவி பொதுமக்களும் காணப்பட்டனர்.

இந்த படுகொலைகள் ஓரு குறிப்பிட்ட வகையில் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பாதுகாப்பு படையினரின் காலவரண்கள், சோதனைச்சாவடிகள்,  இராணுவமுகாம்களிற்கு அருகிலும் மேலும் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை தனிநபர்களும் படுகொலைக்குள்ளாகியுள்ளனர்.

இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.

விடுதலைப்புலிகள் தங்களிற்கு ஆதரவில்லாதவர்கள் என கருதிய தமிழ் முஸ்லீம் சிங்களவர்களை படுகொலை செய்தமைக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளமையும் இலங்கை குறித்து விசாரணை மேற்கொண்ட அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகள்  தங்களிற்கு எதிரான அரசியல் சக்திகள், தகல்களை வழங்குபவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள், மாற்றுக்கருத்துடைய தமிழ் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், அரச அதிகாரிகள் மற்றும் எதிர்க்குழுக்களை சேர்ந்தவர்களை இலக்குவைத்தனர். விடுதலைப்புலிகளின் கண்முடித்தனமான தற்கொலைகுண்டு தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதலில்பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.

மே 18 ம்திகதி விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்கள் சட்டவிரோத படுகொலைக்குள்ளனது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றியும் விசாரணைகள் இடம்பெற்றன.இவர்களில் சிலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். பல விடயங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ள போதிலும், கண்ணால் கண்டவர்களின் சாட்சிகள், புகைப்பட ஆதாரங்கள்,வீடியோ ஆதாரங்கள், போன்றவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கின்ற போது பலர் இராணுவத்தினால் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பதற்கான போதிய தகவல்கள் உள்ளன. இவைகள் நீதிமன்றின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டால் இடம்பெற்ற சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து யுத்தகுற்றங்களாகவோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவோ கருதப்படலாம்.

SHARE