யுத்த வெற்றி விழாவாக நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அரசியல்வாதி சித்தார்த்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவிற்கு புளொட் இயக்கம் யுத்தம் முடியும் வரை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியது.

327

 

இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதே இலாபமாக புளொட் இயக்கம் கருதியது.

plot-mohan

வடக்கு கிழக்கை தளமாக கொண்ட தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு ஆகிய பகுதிகளை தளமாக கொண்ட தமிழ் கட்சிகள் சில விடயங்களில் இணைந்து செயல்பட ஆரம்பித்தன.

2000ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி ரெலோவின் கொழும்பு அலுவலகத்தில் தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டம் ரெலோவின் தலைவர் என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்றது.

போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேசத்தை கோருவதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இக்கூட்டத்தில் ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஷ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ், தேசிய தொழிலாளர் ஸ்தாபனம், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ், ஆகிய எட்டுக்கட்சிகள் கலந்து கொண்டன. சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தாமும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

ஈ.பி.டி.பியும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை செய்வதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழ் கட்சிகள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பிந்துனுவெல படுகொலை, கோபாலபுரம், மிருசுவில் படுகொலைகளுக்கு நீதி விசாரணை நடத்துமாறு சர்வதேச நாடுகளிடம் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இக்கட்சிகளின் குழுக்கள் சில தூதுவர்களையும் சந்தித்திருந்தார்கள்.
இதன் பின்னர் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பாலியல் பலாத்காரங்களை கண்டித்தும் இத்தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.dsc04093

மன்னாரில் 22வயதுடைய நந்தகுமார் விஜயகலா, சின்னத்தம்பி சிவமணி ஆகிய இரு இளம்பெண்களை கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை 2001 மார்ச் 19ஆம் திகதி அன்று இரவு 10மணியளவில் சித்திரவதை செய்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தார். இது தொடர்பாக தமிழ் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று மன்னார் சட்டவைத்திய அதிகாரி ஜி.சோமசேகரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இந்த பாலியல் பலாத்காரத்தை கண்டித்து இதற்கு நீதி வேண்டி கொழும்பில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதே போன்று கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து 2001 ஏப்ரல் 10ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 11 தமிழ் கட்சிகள் கலந்து கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் உட்பட மலையக கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழ் கட்சிகள் பொதுவான சில விடயங்களை கூட்டாக இணைந்து கையாண்டன. ஆனால் ஒரே கொள்கையின் கீழ் இணைந்து செயல்படுவதற்கோ அல்லது தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கோ தயாராக இருக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்ற போது அதில் புளொட் என்ற சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ விடுதலைக்கழகத்தை சேர்த்துக் கொள்வதா என்ற கேள்வி எழுந்தது.

1999ஆம் ஆண்டுகளின் பின்னர் ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதை நிறுத்தியிருந்தன. அவ்வாறு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் தமது கட்சிகளிலிருந்து வெளியேற்றியிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எவ் ராசி குழுவுக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி அறிவித்தது. அது போல விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்பட்ட ரெலோ வரதன் குழு உட்பட சில நபர்களை ரெலோ தமது கட்சியிலிருந்து நீக்கியிருந்தது.

ஆனால் புளொட் தொடர்ந்து இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது. பாரிய மனித உரிமை மீறல், மற்றும் படுகொலை குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வடகிழக்கில் காணாமல் போனோர் ( ஓய்வுபெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ) ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளில் சுமத்தப்பட்டிருந்தன.

1990 யூன் மாதம் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பு நகர் உட்பட எழுவான்கரை பகுதிகளை கைப்பற்றிய பின்னர் புளொட் இயக்கம் இராணுவத்துடன் இணைந்து மிகப்பெரிய கூட்டுப்படுகொலைகளை நடத்தியதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, உட்பட மட்டக்களப்பில் நடைபெற்ற பெரும்பாலான படுகொலைகளில் புளொட் மோகன் தலைமையிலான குழுவினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக நீதியரசர் பாலகிட்ணர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

1990களின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இராணுவமும் புளொட் மோகன் தலைமையிலான குழுவினரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் மிகக்கொடூரமான படுகொலைகளை செய்து வந்தனர்.

மட்டக்களப்பு புளியந்தீவையும் தாண்டவன்வெளியையும் இணைக்கும் புதுப்பாலத்தில் வைத்து நண்பகலுக்கு பின்னர் கைது செய்யும் அப்பாவி பொதுமக்களை ரயரை கழுத்தில் போட்டு உயிருடன் எரிப்பார்கள். சில சடலங்கள் குற்றுயிராக கிடக்கும். யாரும் அந்த இடத்திற்கு சென்று அவற்றை மீட்க முடியாது. நண்பகலுக்கு பின்னர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. அவ்வாறான பயங்கரமான சூழல் நிலவிய வேளையில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த முனாஸ், புளொட் மோகன் போன்றோர் வகைதொகை இன்றி மக்களை கொன்று குவித்து வந்தனர். அக்காலப்பகுதியில் தினசரி இரண்டு மூன்று சடலங்கள் புதுப்பாலத்தடியில் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்படும்.

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் புளொட் இயக்க அலுவலகமும், சிறைச்சாலையை அண்டிய கட்டிடத்தில் புளொட் மோகன், முனாஸ் ஆகியோரின் சித்திரவதை முகாமும் இருந்தது. இந்த இடங்களை தாண்டி செல்வது என்பது அபாயகரமான பயணமாக இருக்கும்.
பெரும்பாலான மக்கள் அப்பாதையால் செல்வதை தவிர்த்து வந்தனர்.

சித்திரவதை செய்து படுகொலை செய்வதில் புளொட் இயக்கம் முன்னணியில் இருந்தது. தங்களை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும், தமக்கு பயந்து அடிபணிந்து மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக்கொடூரமான படுகொலைகளை புளொட் செய்தது. மட்டக்களப்பில் புளொட் மோகன், வவுனியாவில் மாணிக்கதாசன், என மக்களை அச்சமூட்டும் நபர்கள் புளொட் இயக்கத்தில் இருந்தனர்.

உதாரணமாக படுவான்கரை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் பொதுமக்கள் புளொட் மோகனின் கைகளில் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் பதட்டத்துடன் இருப்பார்கள்.

படுவான்கரை பகுதியில் உள்ள ஏழைத்தொழிலாளர்கள் விறகு வெட்டிக்கொண்டு வந்து மட்டக்களப்பு நகரில் விற்றுவிட்டு செல்வார்கள், புளொட் இயக்கத்தினர் அவர்களிடம் இருக்கும் 300 அல்லது 400ரூபாய்களை பறித்து விட்டு அவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் பல உண்டு.

விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை பார்க்க செல்லும் அவர்களின் பெற்றோர் உறவினர்களையும் செங்கலடி கறுப்பு பாலம், வவுணதீவு ஆகிய இடங்களில் மறைந்திருக்கும் புளொட் இயக்கத்தினர் அவர்களை பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவங்கள் ஏராளம்.

ஆரம்பகாலத்தில் தமிழ் இளைஞர் பேரவையிலும் பின்னர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகவும் இருந்த வேணுதாஸ் 1990களில் யுத்தம் ஆரம்பமாகியவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சென்று தங்கியிருந்தார். அவரின் மனைவி ஜமுனா ( மக்கள் வங்கியில் வேலை செய்தவர் ) கணவனை பார்ப்பதற்காக செங்கலடி கறுப்பு பாலம் ஊடாக சென்ற போது புளொட் மோகன் தலைமையிலான குழுவினர் அவரையும் இன்னொரு பெண்ணையும் பிடித்து சென்றனர்.

இரு பிள்ளைகளின் தாயான வேணுதாஸ் ஜமுனாவை மிக கொடூரமாக சித்திரவதை செய்த பின் சடலத்தை பொதுமக்கள் பார்க்க கூடியவாறு வீதி ஒரத்தில் வீசியிருந்தனர். பின்னர் வேணுதாசையும் புளொட் மோகன் குழுவினர் சுட்டுக்கொன்றனர். அவர்களின் இரு பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டனர். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். நகரில் புளொட் இயக்கம் செய்த கோரமான ஒரு படுகொலை அந்த இயக்கம் மீது யாழ். மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

யாழ். நகரில் புடவைக்கடை ஒன்றில் வேலை செய்த கரவெட்டியை சேர்ந்த 23வயதுடைய இராசரத்தினம் இராஜேஸ்வரன் என்ற இளைஞரை 1999 பெப்ரவரி 20ஆம் திகதி வல்லை இராணுவ சோதனை சாவடியில் சோதனையை முடித்துக்கொண்டு செல்லும் போது புளொட் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். நெல்லியடியில் உள்ள புளொட் இயக்க முகாமில் வைத்து இரு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் 1999 பெப்ரவரி 22ஆம் திகதி இரவு அவரின் தலையை வெட்டி வாளில் எடுத்து சென்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி சந்தியில் போட்டனர்.

வைத்தியசாலை வீதி கஸ்தூரியார் வீதி சந்தியில் தலையை புளொட் இயக்கத்தினர் வைத்திருந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் புளொட் இயக்கம் மீது மக்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவம் பற்றி யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் புளொட் இயக்கம் இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதால் கொலையாளிகள் மீது எந்த சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

புளொட் இயக்கத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்த சதீஸ் என்று அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரமோகன் யாழ். நகரப்பகுதியில் வைத்து 1999 ஜனவரி 24 அன்று விடுதலைப்புலிகளின் பிஸ்ரல் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் இராணுவ பொறுப்பாளர் மாணிக்கதாசன் 1999 செப்டம்பர் 02 திகதி வவுனியாவில் வைத்து குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் படுகொலையில் சம்பந்தப்பட்டார் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த புளொட் மோகன் 2004 யூலை 31ஆம் திகதி கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.plote_mohan

புளொட் இயக்கம் தொடர்ந்து இராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களை படுகொலை செய்து வந்ததால் புளொட் இயக்கத்தை தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் தொடர்பை பேணி வந்தாலும் புளொட் இயக்கத்துடன் தொடர்பை பேணாது விலகியே இருந்தனர்.

தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிவராமும் புளொட் இயக்கத்தை இதில் சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.

2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டக்களப்புக்கு வந்திருந்த சித்தார்த்தனை வைத்தியசாலை வீதியில் இருந்த புளொட் அலுவலகத்தில் நடேசனும் நானும் ( இன்னும் ஒருவர் உதயகுமாராக இருக்கலாம் ) சந்தித்தோம்.

தமிழ் கட்சியின் கூட்டில் இணைவதற்கு தனக்கு சம்மதம் தான், ஆனால் தங்களது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதையே விரும்புகின்றனர். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என சொன்னார்.

தமிழ் கட்சிகள் இணைந்து அது பலமான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உருவாகும் என அந்நேரம் சித்தார்த்தன் போன்றவர்கள் நம்பவில்லை. இராணுவத்துடன் சேர்ந்து இருப்பதே இலாபம் என கருதினர்.

விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏனைய தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் யுத்தம் முடியும் வரை புளொட் இயக்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தம் வரை விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதில் இராணுவத்துடன் புளொட் இயக்கம் சேர்ந்து இயங்கியது.

யுத்தத்தை வெற்றி கொள்வதில் புளொட் இயக்கம் வழங்கிய பங்களிப்பு பற்றி யுத்தத்தை வழிநடத்திய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

gotas-war-bookயுத்த வெற்றி பற்றி கோத்தா வோர்  ( GOTAS WAR )   என்ற புத்தகத்தை சந்திரபிறேமா என்பவர் எழுதி 2002 மே 14ஆம் திகதி கொழும்பில் வெளியிட்டார். அந்த விழாவில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராசபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். அதில் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொண்டார்.

யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு புளொட் வழங்கிய ஒத்துழைப்புக்கு அதில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்த வெற்றி விழாவாக நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அரசியல்வாதி சித்தார்த்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவிற்கு புளொட் இயக்கம் யுத்தம் முடியும் வரை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியது.

தமிழ் கட்சிகளின் கூட்டில் புளொட் இயக்கத்தை சேர்ப்பதற்கு பொது அமைப்புக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளும் விரும்பவில்லை.

2001 பெப்ரவரி மாதத்தில் முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றன. கீரிகளும் பாம்புகளுமாக இருந்தவர்கள் சந்தித்து கொண்ட சம்பவங்கள் அவை.

SHARE