ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை அதிரடியாக மாற்றிய அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன்பே, அடுத்த இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைத்து மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாம் 26ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார். இது ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு மட்டுமன்றி நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இதனைக் கடுமையாக எதிர்த்தன.
சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளும் நடைபெற்ற மாற்றத்தை கடுமையாக விமர்சித்தன. நாட்டின் அரசமைப்பை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவை அறிவுரை வழங்கின. நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி ஜனநாயக வழிமுறையில் பிரச்சினையைக் கையாளுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
ஆனால், நவம்பர் 16ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரி பின்னர், 14ம் திகதி கூட்டப்படும் என்று அறிவித்தார். எனினும் முற்கூட்டியே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. சர்வதேச நாடுகளும் அவ்வாறே வலியுறுத்தின. இந்த நிலையில் தான் ஜனாதிபதி அதிரடியாக கடந்த 9ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்தார்.
2019ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திடீரென்று நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எண்ணம் வரக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது தெளிவான ஒன்றாகவே தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்பு நாடாளுமன்றத்தில் ஆதரவை வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆதற்காக சுமார் முன்று வாரங்களை எடுக்கும் நோக்கிலேயே நாடாளுமன்றம் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசி, அவர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் முன்னனெடுக்கப்பட்டன. ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளுக்கும், பணத்திற்கும் விலைபோனாலும் எனையோர் உறுதியாகவே இருந்தனர்.
நாடாளுமன்றத்தில் 106 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சுமார் ஐந்து பேர் வரையில் கட்சி தாவியுள்ளனர். 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒருவர் (எஸ்.வியாழேந்திரன்) மட்டுமே கட்சி தாவினார். இதில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினரும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கரஸ் மற்றும், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரும் கட்சி தாவாமல் உறுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேரம் பேசினார். 15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவு நாடாளுமன்றத்தில் முக்கியமானதாக இருப்பதால் நாடாளுமன்றத்தில் அவர்களின் ஆதரவைக் கோரினார் கூட்டமைபிபினர் தங்களுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுப் பார்த்தார். அனாலும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவ்விரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்தார். ஆரசியல் சாசனத்திற்கு எதிரான முறையில் இந்த ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அதனை நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதால் அதற்கெதிராகவே நிற்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி ஜே.வி.பி மற்றும் சிறுபான்மைக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக கொண்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோல்வியடைவார். இதனை விளங்கிக் கொண்டதாலேயே மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். நாடாளுமன்றைக் கூட்டி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல மைத்திரி தயார் நிலையிலிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த சூழ்நிலையில் தான் திடீரென, அதிரடியாக கடந்த 9ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
சடுதியான முறையில் பிரதமரை மாற்றியதும், நாடாளுமன்ற அமர்வை பிற்போட்டதும் எவ்வாறு அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் அப்பாற்பட்ட செயற்பாடு என்று விமர்சிக்கப்பட்டதோ அதனையும் விட மோசமான விமர்சனங்களை நாடாளுமன்றத்தை கலைத்ததால் ஜனாதிபதி மைத்திரி எதிர்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ் முறை;போக்கு முன்னணி போன்ற கட்சிகள் இந்த ஜனாநாயக மீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்துள்ளன.
சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தொடர்ந்தும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. பிரதமரை மாற்றி, நாடாளுமன்றை ஒத்திவைத்ததால் ஏற்பட்ட குழப்பத்தை விட மேலும் மோசமானதொரு நிலை நாடாளுமன்றத்தை கலைத்ததால் ஏற்பட்டுள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பை மதித்து செயற்படுவதோடு, ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் எனவும் பிரத்தானியா குறிப்பிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு பல நாடுகளும் அமைப்புக்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
மைத்திரி, மஹிந்த தரப்பினர் ரணிலையும், சபாநாயகர் கரு ஜயசூரியவையும் குற்றம் சுமத்திக்கொண்டு, தங்களின் நகர்வுகள் அரசியலமைப்பிற்கு உட்பட்டவை என்று நியாயம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே விரல்கள் நீட்டப்படுகின்றன.
பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை கலைத்தமை ஆகிய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானவை என்று பலரும் கூறிக்கொண்டிருந்தாலும், சில சட்ட நிபுணர்கள் இவை யாவும் முறையாகவே நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.
ஆனால், 19வது அரசியலமைப்பின் பிரகாரம், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் முடியும் வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என அரசியலமைப்பில் நிபுணத்துவம் பெற்ற சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நடைபெற்றுள்ள காரியங்களுக்கு அரசியலமைப்பை முன்னிறுத்தியும், சட்டத்தை முன்னிறுத்தியும் சொல்லப்படும் இவ்வாறான இரு நிலைப்பட்ட கருத்துக்கள் பொதுமக்களை குழப்பத்திலாழ்த்தியுள்ளன.
இன்று நாட்டிலுள்ள மக்கள் ரணிலா? மஹிந்தவா? என்பதற்கு அப்பால் நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? ஏன்பது குறித்தே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ‘மண்டேலா’ என சித்தரிக்கப்பட்ட மைத்தரியின் சித்திரம் தற்போது நிறம் கலைந்து போய்விட்டது. நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான அதிர்ச்சியை விடவும் மைத்திரிபால சிறிசேன என்ற மனிதரா இப்படியெல்லாம் செய்கின்றார்..? என்பதே பேரதிர்ச்சியாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், மக்களின் வாக்குகள் கட்சிகளுக்கானதாகவும், தனிமனிதர்களுக்கானதாகவும் இல்லாமல் ஜனநாயத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான வாக்குகளாகவே பிரிபடலாம்.