ரணிலின் பாராளுமன்ற மீள் வருகை, நடக்கப்போவது என்ன?

607

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 1970 இல் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமனம் பெற்றார். அதன்பின்னர் பியகம தொகுதி அவரிடம் கையளிக்கப்பட்டது. 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டியிட்டு அதில் 22,045 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார். தனது 28ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனமிக்கப்பட்டார்.
1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைக்கப்பட்டது.

1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிக்கப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.
1993 மே 17 ஆம் திகதி இலங்கை சோசலிசக் குடியரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்றார்.
1994 இல் ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார். எனினும் காமினி திஸாநாயக்க கொலை செய்யப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டியிட்டார். அதில் சந்திரிகாவே வெற்றிபெற்றார். 2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை அப் பதவியில் நீடித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றி பெற்றார்.
2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றி பெற்றார்
2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.
2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டிய நிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றி பெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது. 2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது. 2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.
2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சி மூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தை நாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில். நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
எனினும் முழு மனதுடன் உடனடியாக சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் அவர்கள் விரும்பில்லை. பல இழுபறிகள். பேச்சுவார்த்தைகள் என கட்சிக்குள் தொடர்ந்தது. விடாப்பிடியாக இருந்தார் ரணில். அதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.
2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15மூ வாக்குகளே கிடைக்கப்பெற்றன. தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பல இழுபறிகளுக்கு மத்தியில் ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போதுதான் ரணில் அவர்கள் ஒரு தேசியப் பட்டியலைப் பயன்படுத்தி கட்சியின் தலைவரான தானே பாராளுமன்றம் சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். அரசியலில் மிஸ்டர் க்ளீன் என்ற நாமம் ரணிலுக்கு இருந்து வந்தது. அரசியலில் குள்ளநரியாகவே அவர் பார்க்கப்படுகின்றார். 42 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்ததுடன், அரசமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவேதான் தற்போது அவர் நாடாளுமன்றம்வருவதுகூட சிலரை கிலிகொள்ள வைத்துள்ளது. அவர் தான் போட்டியிட்ட எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தனித்து பாராளுமன்றம் சென்ற அன்றைய தினம், அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரையும் காரசாரமாக இருந்தது. அந்த உரையில், அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டை அமைச்சரவையும், பாராளுமன்றமுமே நிர்வாகம் செய்ய வேண்டும். அதிகாரங்கள் இராணுவத்தினரிடம்
வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும், மீண்டும் இந்த பாராளுமன்றத்திற்கு வந்தமை தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கின்றேன். இந்த சபையில் அமைச்சர் பந்துல குணவர்தனவின் உரையின் போது ஒரு விடயத்தை அவதானித்தேன். இந்த அரசாங்கம் வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வறியவர்களை பசியில் இட்டுள்ளனர்.

இப்போது கொவிட் முக்கிய விடயமாக உள்ளது. இது தொடர்பான செயலணி முற்றாக தோல்வியடைந்தது. எமது அரசியலமைப்பிற்கமைய இதன் அதிகாரங்கள் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்குமே இருக்க வேண்டும். ஏன் இதனை அமைச்சரவைக்கு வழங்க முடியாது.

இப்போது இராணுவ அதிகாரத்தின் மூலம் நாட்டை நிர்வகிக்கின்றனர்.
இராணுவத்தினருக்கு அந்த அதிகாரங்களை ஒப்படைப்பதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம் என வந்த முதல் நாளே அரச தரப்பை கேள்விகளால் திணறடித்தார். ஆவர் பாராளுமன்றில் உரையாற்ற எழுந்தால் யாருமே வாய்திறக்க இயலாத அளவிற்கு அவரது பேச்சு இருக்கும். அரசியலில் அனைத்து நெளிவுசுழிவுகளையும் அறிந்த ஒருவராகவும் அறியப்படும் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பாராளுமன்ற பிரவேசம் எதிர்காலத்தில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
தற்போதைய ஆட்சியாளர்களினால் பௌத்த துறவிகளும், நாட்டின் மூவின மக்களும் அதிருப்தி அடைந்துவரும் நிலை உருவாகியுள்ளது. கொரோனாவைக் காரணங்காட்டி நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், எரிபொருள், உரத் தட்டுப்பாடு என மக்கள் பொருளாதார ரீதியாக அல்லல்படும் சூழல் அதிகரித்திருப்பதும், இராணுவத் தலையீடுகளும் மக்களை சினங்கொள்ள வைத்திருக்கிறது. அரசினது கொவிட் செயலணி குறித்து விமர்சனங்களும் எழ ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவுக்கு பிடித்தமான ஒருவராக அறியப்படுபவர் தான் ரணில் அவர்கள். அமைதியாக, நன்கு திட்டமிட்டே அவரது பாராளுமன்ற பிரவேசமும் அமைந்துள்ளது. கடந்த நல்லாட்சியில் பிரதமராக இருந்தபோது தன்னுடன் கூட்டில் இருந்தவர்கள், மிக நெருக்கமாகப் பழகிய தனது கட்சிக்காரர்கள் எனப் பலரும் இன்று அவருடன் பாராளுமன்றில் இருக்கும் நிலையில், மீண்டும் உடைந்த ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுத்து, சஜித் அவர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, கடந்த காலங்களைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், மலையகம் சார்;ந்த தமிழ் அரசியல் கட்சிகள் என அனைவரையும் ஒரு கூட்டணியாக அமைத்து செயற்படும் சூழலை மீண்டும் ஏற்படுத்தி, பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதை நோக்காகக் கொண்டே அவரது புதிய பாராளுமன்ற வருகையும் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனலாம்.

-சசிகரன்-
SHARE