ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

330

 

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்).

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்று தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான்.

ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைகளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமளான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நோன்பைப் பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமளான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்குர்ஆனும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் வீணாக்கி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.

இறை திருப்தியை மட்டும் நாடி நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (ஸூரத்துல் பகரா).

இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.

இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விளக்கியுள்ளார்கள். ‘பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்’ என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும்.

‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி).

நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.

புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக..!

SHARE