“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
’இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது’ என வலியுறுத்தி, ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இணைந்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணை நேற்று (9ம் திகதி) இடம்பெற்றபோது, இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேநேரம் ‘நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது; இது குறித்து, ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் மீண்டும் (ராஜீவ் காந்தியின் கொலை விவகாரம் குறித்த இறுதி தீர்மானத்தை தமிழக ஆளுநரே எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது) வலியுறுத்தியுள்ளது.
7 பேரின் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இது குறித்து இன்று (9ம் திகதி) ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது; “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
‘உன் மகனை உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்’ என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என்று தெரிவித்தார்.