ராஞ்சியில் தோனி ஆட்சி: சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார்

704

ராஞ்சி: பரபரப்பான கடைசி ஓவரில் தோனி வழக்கம் போல சிக்சர் விளாச, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளே– ஆப்’ சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. ராஜஸ்தான் அணி ஏமாற்றம் அளித்தது.

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

சங்கர் அறிமுகம்:

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் மிதுன் மன்ஹாஸ் நீக்கப்பட்டு, திருநெல்வேலியை சேர்ந்த விஜய் சங்கர், ஐ.பி.எல்., தொடரில் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், டிவாட்டியா, ரிச்சர்ட்சனுக்குப் பதில் அன்கித் சர்மா, யாக்னிக், கெவான் கூப்பர் இடம் பெற்றனர்.

வாட்சன் அரைசதம்:

ராஜஸ்தான் அணிக்கு இம்முறை வாட்சன், அன்கித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. மோகித் சர்மா ஓவரில் இரு பவுண்டரி அடித்த அன்கித் சர்மா, அஷ்வினின் முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என, விளாசினார்.

27 பந்தில் 30 ரன்கள் எடுத்த இவரை, அஷ்வின் வெளியேற்றினார். சங்கர் ஓவரில் வாட்சன் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என, 19 ரன்கள் சேர்த்தார்.

நிலைமை தலைகீழ்: 

இதன் பின் நிலைமை தலை கீழானது. ரகானே (4) ரன் அவுட்டானார். மோகித் சர்மா பந்தில் வாட்சன் (51 ரன்கள், 36 பந்து), போல்டானார்

கருண் நாயர் (8), கடந்த போட்டியில் மிரட்டிய ஸ்டீவன் ஸ்மித் (9), பால்க்னர் (1) நீடிக்கவில்லை. பின்னி (22), பாட்யாவும் (7) ஏமாற்ற, 20 ஓவர் முடிவில், ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

ஸ்மித் நம்பிக்கை:

சுலப இலக்கை ‘சேஸ்’ செய்த, சென்னை அணிக்கு மெக்கலம் (6), ரெய்னா (2) அதிர்ச்சி கொடுத்தனர். பால்க்னர் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த டுவைன் ஸ்மித், டாம்பே சுழலில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுத்தார். இவர் 44 ரன்னில் (35 பந்து) அவுட்டானார்.

தோனி, ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறக்கப்பட்ட அஷ்வின், 16 பந்தில் 14 ரன்கள் எடுத்து போல்டானார். அடுத்த சிறிது நேரத்தில் டுபிளசியும் (38) ‘பெவிலியன்’ திரும்ப, சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

தோனி ‘பினிஷிங்’:

சென்னை வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. பால்க்னர் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ‘பினிஷிங்’ பணியை மீண்டும் கச்சிதமாக செய்த தோனி, அடுத்த பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். 3வது பந்தில் 2 ரன், 4வது பந்தில் 3 ரன்கள் எடுத்தார் தோனி.

முடிவில், சென்னை அணி 19.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. தோனி (26), ஜடேஜா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

இத்தொடரில் 10 போட்டிகளில் 8 வெற்றி பெற்று, 16 புள்ளிகள் பெற்ற சென்னை, முதல் அணியாக ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

மோகித் முதலிடம்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற வரிசையில் முதலிடத்தை பெற்றார் சென்னை அணியின் மோகித் சர்மா. இவர், 10 போட்டிகளில் 18 விக்கெட் வீழ்த்தி, ‘பர்பிள் கேப்’ பெற்றார்.

ஸ்மித் ‘29’

ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் (474), அதிக சிக்சர் (29) அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்.

இதில் இரண்டாவது இடத்திலுள்ள சென்னை அணியின் ஸ்மித் (440 ரன்கள்), நேற்று 2 சிக்சர் விளாசி, மேக்வெல்லின் அதிக சிக்சர் இலக்கை சமன் செய்தார்.

தொடரும் சாகசம்

தோனிக்கு எப்போதுமே கடைசி ஓவரில், வெற்றி பெறுவது என்றால் தான் பிடிக்கும் போல. பல்வேறு போட்டிகளின் முடிவுகள் இப்படித்தான் இருந்துள்ளன.

இந்த ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்கு மொத்தம் கிடைத்த 8 வெற்றியில், 4 ல் கடைசி ஓவரில் தான் முடிவு கிடைத்தன.

இதில், டில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், கடைசி ஓவரில் தோனி சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் இவர், பவுண்டரி அடித்து அசத்தினார்.

முதல் வெற்றி

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணி 140 முதல் 150 ரன்கள் வரையிலான இலக்கை, 12 முறை ‘சேஸ்’ செய்து 10 முறை வெற்றி பெற்றது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டும், இரண்டு முறை இந்த இலக்கை எட்ட முடியாமல் வீழ்ந்தது. நேற்று முதன் முறையாக 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தானை வென்றது.

SHARE