ரியோ ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து ஐஓசி கவலை

731

கட்டுமான வேலைகள் தாமதமாகிறது என்று கவலைகள்.
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கன ஏற்பாடுகளை பார்க்கும்போது ரியோ போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றிய போதே ஜான் கோட்ஸ் இதை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கான பல வளாகங்களில் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவே இல்லை என்றும், தொடங்கிய சிலவற்றிலும் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்போது முடியும் என ஐஓசி கேள்வி
குறிப்பாக டியோடோரோ நகரில் எட்டு விதமான விளையாட்டுகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்காவில் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கக்கூட இல்லை என்றும் ஜான் கோட்ஸ் கூறுகிறார்.
ஆனால் ரியோ போட்டிகள் குறித்து இவ்வளவு கவலைகளும் விமர்சனங்களும் இருந்தாலும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்த திட்டமேதும் ஒலிம்பிக் சம்மேளனத்திடம் இல்லை எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ரியோவில் நிலைமைகள் நெருக்கடியான ஒரு சூழலில் இருந்தாலும், போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த ஐஓசி நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

SHARE